spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஉஜ்ஜய்ன் மஹாகாள் ஆலய காரிடர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரை!

உஜ்ஜய்ன் மஹாகாள் ஆலய காரிடர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரை!

- Advertisement -

Prime Minister Narendra Modi at the Shree Mahakal Corridor, Mahakal Lok in Ujjain, Madhya Pradesh

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

ஹர்ஹர் மஹாதேவ்…….உஜ்ஜெயினியின் பவித்திர புண்ணிய பூமியிலே, இந்த மறக்கமுடியாத நிகழ்ச்சியில் பங்கெடுக்கும், நாடெங்கிலுமிருந்தும் வந்திருக்கும், மலரடிகளில் வணங்கத்தக்க புனிதப்பெருமக்களே, மதிப்பிற்குரிய சாதுக்களே சந்நியாசிகளே, மத்திய பிரதேசத்தின் ஆளுனர், திரு. மங்குபாய் படேல், சத்திஸ்கட்டின் ஆளுனர், சகோதரி அனுசூயா உய்கே அவர்களே, ஜார்க்கண்டின் ஆளுனர், திரு. ரமேஷ் பைத்ஜி, மத்திய பிரதேசத்தின் முதல்வர், சகோதரர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அவர்களே, மத்திய அமைச்சரவையின் என்னுடைய சகாக்களே, மாநில அமைச்சரவையின் அங்கத்தினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, பகவான் மஹாகாலுடைய, கிருபைக்குப் பாத்திரமான அனைத்து, பக்தகோடிகளே, தேவிகளே கனவான்களே…

உஜ்ஜெயினியின் இந்த சக்தி, இந்த உற்சாகம், அவந்திகாவினுடைய இந்த பேரொளி, இந்த அற்புதம், இந்த ஆனந்தம், மஹாகாலுடைய இந்த மகிமை, இந்த மகாத்மியம், மகாகாலின் ராஜ்ஜியத்திலே, அனைத்துமே தெய்வீகம் நிறைந்தது தான்.  சங்கரனின் சான்னித்தியத்திலே, சாதாரணம் என்பது ஒன்றுமே கிடையாது.  அனைத்துமே உலகிற்கு அப்பாற்பட்டது.  அசாதாரணமானது, மறக்கவே முடியாதது, ஆச்சரியத்தை ஏற்படுத்துவது.  என்னால் இதை இன்று உணர முடிகிறது, நமது நம்பிக்கை மற்றும் தவம் காரணமாக, மஹாகால் சந்தோஷமடையும் போது, அப்போது அவரது ஆசிகளால், இப்படிப்பட்ட மகத்தான அமைப்பு நிர்மாணம் செய்யப்படுகிறது. 

மஹாகாலுடைய ஆசிகள் எப்போது கிடைக்கிறதோ, அப்போது காலத்தின் வரையறைகள் தாக்குப் பிடிப்பதில்லை.  காலத்தின் வரம்புகள் கரைந்து போகின்றன.  எல்லையில்லாத ஒரு நிலை, அப்போது எட்டப்படுகின்றது.   முடிவிலிருந்து முடிவற்ற நிலைக்கான பயணம், தொடங்குகிறது.  மஹாகால், உலகின் இந்த மகோன்னதம் கூட,  காலத்தின் வரம்புகளைத் தாண்டி, வரவிருக்கின்ற பல தலைமுறையினருக்கு, தெய்வீகமான காணொளியைக் காட்சிப்படுத்தும்.  பாரதத்தின் கலாச்சார ஆன்மீக பாரம்பரியத்திற்கு, விழிப்பையும் சக்தியையும் அளிக்கும்.  நான் இந்த அற்புதமான சந்தர்ப்பத்திலே, ராஜாதிராஜன், மஹாகாலுடைய சரணாரவிந்தங்களிலே, பலமுறை விழுந்து வணங்குகிறேன். 

நான் உங்கள் அனைவருக்கும், தேசம் மற்றும் உலகெங்கும் இருக்கும், மஹாகாலுடைய அனைத்து பக்தர்களுக்கும், இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.    மேலும் குறிப்பாக, சகோதரர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், மேலும் அவருடைய அரசு, இவர்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  இவர்கள் தொடர்ச்சியாக, மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு, இந்த சேவை வேள்வியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.  மேலும், நான் கோயில் அறப்பணியோடு தொடர்புடைய அனைவருக்கும், புனிதர்கள் மற்றும் சான்றோருக்கு, மரியாதை கலந்த வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.  இவர்களின் ஒத்துழைப்பு காரணமாக, இந்த முயற்சி வெற்றியடைந்திருக்கிறது. 

நண்பர்களே, மஹாகாலுடைய நகரம், உஜ்ஜயினைப் பற்றி, நம் நாட்டிலே ஒன்று கூறப்படுவதுண்டு.  பிரளயோ நா பாததே, பிரளயோ, நா பாததே.  தத்ர மஹாகாலபுரி.  அதாவது, மஹாகாலுடைய நகரம், பிரளயகால தாக்குதலிலிருந்தும் பாதிக்காமல் இருப்பது.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக, பாரதத்தின் பூகோள வடிவம், இன்றிலிருந்து வேறுபட்டு இருந்திருக்கலாம்.  அப்போதிலிருந்தே கருதப்பட்டு வந்தது, இந்த உஜ்ஜயின், பாரதத்தின் மையத்தில் இருக்கிறது.  ஒரு வகையிலே, ஜோதிடத்தின் கணக்கீடுகளிலே, உஜ்ஜயின், பாரதத்தின் மையமாக இருப்பது மட்டுமல்ல, மேலும், இது பாரதத்தின் ஆன்மாவின் மையமாகவும் விளங்குகிறது.  இந்த நகரம் தான், நமது பரம பவித்திரமான, ஏழு புனித நகரங்களில் ஒன்றாகக் கூறப்பட்டிருக்கிறது.  இந்த நகரில் தான், பகவான் கிருஷ்ணன் தாமே எழுந்தருளி, கல்வி பயின்றார்.   உஜ்ஜயின் நகரம், மஹாராஜா விக்கிரமாதித்தனுடைய, பிரதாபத்தை அனுபவித்தது, இவரே பாரதத்தின் புதிய, பொற்காலத்தைத் தொடங்கி வைத்தார்.  மஹாகாலுடைய இந்த மண்ணிலிருந்து தான், விக்ரம் சம்வத்சரம் என்ற வகையிலே, பாரதநாட்டு காலக்கணக்கீட்டின், ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.  உஜ்ஜயினியின் ஒவ்வொரு துகளிலும், ஒவ்வொரு நொடியிலும், வரலாறு கொட்டிக் கிடக்கிறது.  துகள்கள் தோறும் இங்கே, ஆன்மீகம் விரவியிருக்கிறது.  மேலும் ஒவ்வொரு மூலையிலும், இறைவனுடைய ஆற்றல் எங்கும் பரவியிருக்கின்றது.  இங்கே காலச்சக்கரத்தினுடைய, 84 கல்பங்களின் பிரதிநிதிகள் வடிவமாக, 84 சிவலிங்கங்கள் இருக்கின்றன, இங்கே நான்கு மகாவீரர்கள் உண்டு, ஆறு விநாயகர்கள் உண்டு, எட்டு பைரவர்கள் உண்டு, எட்டு மாதாக்கள் உண்டு, நவகிரகங்கள் உண்டு, பத்து விஷ்ணுக்கள் உண்டு, பதினோரு ருத்திரர்கள் உண்டு, பன்னிரெண்டு ஆதித்தியர்கள் உண்டு, 24 தேவிமார் உண்டு, மேலும் 28 தீர்த்தங்கள் உண்டு.  இவர்கள் அனைவருடைய மத்தியிலே, ராஜாதிராஜன், காலனுக்கு ராஜன், மஹாகால் வீற்றிருக்கிறார்.   அதாவது, ஒருவகையிலே நமது பிரும்மாண்டத்தின் ஆற்றல்கள் அனைத்தையும், நமது ரிஷிபுங்கவர்கள், அடையாள சொரூபத்திலே, உஜ்ஜயினியில் ஸ்தாபித்திருக்கின்றார்கள்.   ஆகையினாலே, உஜ்ஜயினியானது, பல்லாயிரம் ஆண்டுகள் வரையிலும், பாரதநாட்டின் வளம் நிறைந்த, மற்றும் செழிப்பினுடைய, ஞானம் மற்றும் மாட்சிமையின், கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தின், தலைமையேற்று வந்தது.  இந்த நகருடைய அமைப்பு நிர்மாணம் எப்படி இருந்தது, செல்வச்செழிப்பு எப்படி இருந்தது, சிற்பக்கலை எப்படி இருந்தது, அழகு எப்படி இருந்தது, இதைப் பற்றிய காட்சி நமக்கு, மஹாகவி காளிதாசனுடைய, மேகதூதத்திலே கிடைக்கிறது.  பாணபட்டர் போன்ற கவிகளின் காவியங்களிலே இந்நகரின், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் வர்ணனையை நம்மால் இன்றும் கூட காண முடியும்.  இது மட்டுமல்ல, மத்தியகால எழுத்தாளர்களும் கூட, இந்நகரின் நிர்மாணம், மற்றும் அமைப்புமுறைகள் பற்றிப் போற்றிப் பேசியிருக்கின்றார்கள். 

சகோதர சகோதரிகளே, எந்த ஒரு தேசத்தின் கலாச்சார வளமை, இத்தனை பரந்துபட்டதாக, எப்போது இருக்கிறது என்றால், எப்போது அதன் வெற்றியின் முழக்கம், உலக அரங்கிலே எதிரொலிக்கும் போது தான் ஒலிக்கும்.  மேலும் வெற்றியின் சிகரங்களை எட்டிப் பிடிக்கவும் கூட, ஒன்று அவசியமானது என்றால், இந்த தேசம், தனது கலாச்சார உன்னதங்களைத் தொட வேண்டும், தனது அடையாளத்தைப் புரிந்து, கௌரவமாக, தலைநிமிர்த்தி எழுந்து நிற்க வேண்டும்.  அந்த வகையிலே, சுதந்திரத்தின் அமுதகாலத்திலே, பாரத நாடு, அடிமைத்தன மனோபாவத்திலிருந்து விடுபட வேண்டும்.  மேலும், தன்னுடைய மரபின் மீது பெருமிதம் போன்ற, ஐந்து உறுதிமொழிகளை அறைகூவலாக விடுத்தேன்.  அந்த வகையிலே, இன்று, அயோத்தியிலே மகோன்னதமான ராமர் கோயில் நிர்மாணம், முழுவீச்சிலே நடைபெற்று வருகிறது.  காசியிலே விஸ்வநாதர் கோயில், பாரதத்தின் கலாச்சார அரசியலின் கௌரவத்தை, தலைநகர கௌரவத்தை அதிகப்படுத்தி வருகிறது.    சோம்நாத்திலே வளர்ச்சிக்கான…… பணிகள், புதிய புகழேணிகளில் ஏறி வருகிறது.  உத்தராகண்டிலே பாபா கேதார்நாத்தின் ஆசிகளோடு, கேதார்நாத் பத்ரிநாத் தீர்த்தத் தலத்திலே, வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகின்றது.  சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, சார்தாம் செயல்திட்டத்தின் வாயிலாக, நம்முடைய நான்கு தலங்களும், அனைத்துப் பருவநிலைகளுக்குமான சாலைகளால் இணைக்கப்பட்டு வருகின்றன.  இதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, கர்த்தார்புர் சாஹேப் இடைவழி திறக்கப்பட்டிருக்கிறது.  ஹேம்குண்ட் சாஹேப் ரோப்வே மூலம் இணைக்கப்பட்டு வருகிறது.  இதைப் போலவே, சுதேச தரிசனம், மற்றும் பிரசாத் திட்டம் வாயிலாக, நாடெங்கிலும், நம்முடைய ஆன்மீக விழிப்பினுடைய, இப்படி எத்தனையோ மையங்களின், கௌரவம் மீண்டும் நிறுவப்பட்டு வருகின்றது. 

மேலும் இந்தத் தொடரிலே, ஒரு மகத்தான, மகோன்னதமான, மஹாகாலுடைய இடைவழி, கடந்தகால கௌரவத்தோடு கூடவே, வருங்காலத்தை வரவேற்க, தயாராகி வருகின்றது.   நாம் இன்றைய வேளையிலே, வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை, நமது பண்டைய கோயில்களைப் பாத்தோமென்றால், அவற்றினுடைய விசாலத்தன்மை, அவற்றுடைய வாஸ்து, நம்மை ஆச்சரியத்திலே நிரப்பிவிடும்.  கோணார்க்கின் சூரியனார் கோயிலாகட்டும், அல்லது மஹாராஷ்ட்டிரத்தின் எல்லோராவின் கைலாச கோயிலாகட்டும், இவை உலகத்திலே யாரைத் தான் மலைக்க வைப்பதில்லை!!  கோணார்க்கின் சூரியனார் கோயிலைப் போலவே, மோதேராவின் சூரியனார் கோயிலும் இருக்கிறது.  இங்கே சூரியனின் முதல் கிரணங்கள், நேராக கர்ப்பகிருஹத்தின் உள்வரை செல்கின்றது.  இதைப் போலவே, தமிழ்நாட்டின் தஞ்சாவூரிலே, ராஜராஜ சோழனால் நிர்மாணிக்கப்பட்ட, பிருகதேஸ்வரர் கோயில் உண்டு.  காஞ்சிபுரத்திலே, வரதராஜப் பெருமாள் கோயில் உண்டு.  ராமேஸ்வரத்திலே, ராமநாதஸ்வாமி கோயிலுண்டு.  பேலூரின், சென்னகேசவர் கோயிலுண்டு. 

மதுரையின் மீனாட்சி கோயிலுண்டு, தெலங்கானாவின் ராமப்பா கோயிலுண்டு.  ஸ்ரீநகரிலே, சங்கராச்சாரியார் கோயிலுண்டு.  இப்படி எத்தனையோ கோயில்கள் உண்டு.  மலைப்பை ஏற்படுத்துபவை, கற்பனைக்கு அப்பாற்பட்டவை.  முன்னேயும் இருந்ததில்லை பின்னேயும் இருக்காது என்பதற்கு, உயிர்ப்புடைய உதாரணங்கள் இவை.   நாம் இவற்றைக் காணும் போது, நாம் ஒன்றை சிந்திக்க வேண்டியிருக்கிறது.  அந்தக் காலகட்டத்திலே, அந்த யுகத்திலே, எந்தத் தொழில்நுட்பத்தால், இவை நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும்!!   நமது அனைத்து வினாக்களுக்கான விடையும், நமக்குக் கிடைக்காமல் போகலாம்.  ஆனால் இந்தக் கோயில்களின் ஆன்மீக கலாச்சாரச் செய்தி, நமக்கு அதேயளவு துல்லியமாக, இன்றும்கூட காதுகளில் கேட்கிறது.  பல தலைமுறைகள், இந்தப் பாரம்பரியத்தைக் காணும் போது, அவற்றின் செய்திகளைக் கேட்கும் போது, ஒரு நாகரீகம் என்ற வகையிலே, நம்முடைய இந்த நீடித்ததன்மை, மற்றும் அமரத்துவத்தின், சாதனங்கள் ஆகின்றன.  மஹாகால் இடைவழியிலே, இந்தப் பாரம்பரியம், அதே போன்ற வளமான வகையிலே, கலை மற்றும் சிற்பங்கள் வாயிலாக, பொறிக்கப்பட்டிருக்கிறது. 

கோயிலின் இந்தத் தாழ்வாரம் முழுக்க, சிவபுராணத்தை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.  நீங்கள் இங்கே வரும் பொழுது, மஹாகாலை தரிசிப்பதோடு கூடவே, நீங்கள் மஹாகாலினுடைய மகிமை, மற்றும் மகத்துவத்தையும் சேர்த்தே தரிசிப்பீர்கள்.  ஐந்து முக சிவன், அவருடைய டமருகம், சர்ப்பம், திரிசூலம், சந்திரப் பிறை, மேலும் சப்தரிஷிமார், இவர்களுடைய மகத்துவமான சொரூபங்களும், இங்கே நிறுவப்பட்டிருக்கின்றது.  இதன் வாஸ்து, இதிலே ஞானத்தின் ஒருங்கிணைப்பு, இது மஹாகால் இடைவழியை, அதன் பண்டைய கௌரவத்தோடு இணைத்து வைக்கிறது.  அதன் பொருளுக்கு மேலும் மெருகூட்டி வைக்கிறது. 

சகோதர சகோதரிகளே, நம்முடைய சாஸ்திரங்களிலே, ஒரு வாக்கியம் உண்டு.  ஷிவம் ஞானம்.  ஷிவம் ஞானம்.   இதன் பொருள் என்னவென்றால், சிவமே ஞானம்.  மேலும், ஞானமே சிவமாகும்.  சிவமென்ற தத்துவத்திலே தான், பிரும்மாண்டத்தின் மிகவுயர்வான தத்துவம் இருக்கிறது. மேலும் தத்துவமே கூட, சிவத்தின் தத்துவமே ஆகும்.   நான் என்ன கருதுகிறேனென்றால், நமது ஜோதிர்லிங்கங்களின் இந்த மலர்ச்சி, பாரதத்தினுடைய, ஆன்மீக ஜோதியின் வளர்ச்சியாகும்.    பாரதத்தின் ஞானம் மற்றும் தத்துவத்தின் வளர்ச்சியாகும்.  பாரதத்தினுடைய இந்த கலாச்சாரத் தத்துவம், ஒரு முறை மீண்டும், சிகரங்களை அடைந்து, உலகனுக்கே வழிகாட்டத் தயாராகி வருகின்றது. 

நண்பர்களே, பகவான் மஹாகால், ஒரு தனித்தன்மை வாய்ந்த ஜோதிர்லிங்கமாகும்.  இது தென் திசை நோக்கியிருக்கிறது.  இது சிவத்தின் எப்படிப்பட்ட சொரூபமென்றால், இதன் பஸ்ம ஆரத்தி, உலகம் முழுக்கவும் பிரசித்தமானது.   பக்தர்கள் அனைவரும், தங்களுடைய வாழ்க்கையிலே, பஸ்ம ஆரத்தியை ஒருமுறையாவது கண்டிப்பாக தரிசிக்க விரும்புகின்றார்கள்.    பஸ்ம ஆரத்தியின் தார்மீக மகத்துவம் குறித்து, இங்கே வீற்றிருக்கும், புனிதர்களான நீங்கள், அனைவரும் அதிக ஆழத்தோடு எடுத்துரைக்க முடியும்.  ஆனால் இந்தப் பாரம்பரியத்திலே, பாரதத்தின் உயிர்ப்புத்தன்மை, அதன் துடிப்பினை நான் காண்கிறேன். 

நான் இதிலே, பாரதத்தின் வெல்லமுடியாத நீடித்தநிலையையும் காண்கிறேன்.  ஏனென்றால், எந்த சிவம், எந்த சிவம், ஸ்வயம்பூதி விபூஷண:, ஸ்வயம்பூதி விபூஷண:, அதாவது, பஸ்மத்தை அணியக்கூடியவராக இருக்கிறார், அவர், ஸர்வாதிப: ஸர்வதாபியும் கூட.  அதாவது, அவர் அழியாதவர் நிரந்தரமானவரும் கூட.  அந்த வகையிலே, எங்கே மஹாகால் இருக்கிறாரோ, அங்கே காலநேரங்களின் வரம்புகளேதும் இல்லை.  மஹாகாலனுடைய சரணங்களிலே, நஞ்சானாலும் விஷமானாலும், செயலிழந்து போகின்றது.   மஹாகாலனின் சன்னதியிலே, மரணத்திலும் ஒரு உயிர்ப்பு துளிர்க்கிறது, முடிவிலும் ஒரு தொடக்கம் ஏற்படுகின்றது.    இதுவே நமது கலாச்சாரத்தின், ஆன்மீக தன்னம்பிக்கையாக விளங்குகிறது.  இதன் வல்லமையால் தான், பாரதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அமரத்துவத்தோடு இருக்கிறது, மூப்பில்லா இளமையோடு விளங்குகிறது. 

இதுவரை நமது நம்பிக்கையின் மையம், விழிப்போடு இருக்கிறது.  பாரதத்தின் விழிப்புணர்வு உயிர்ப்போடு இருக்கிறது.  பாரதத்தின் ஆன்மா விழிப்போடு இருக்கிறது.  கடந்த காலத்தில் நாம் பார்த்திருக்கிறோம், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, சூழ்நிலைகள் மாறின, ஆட்சிகள் கவிழ்ந்தன.  பாரதம் கொடுமைப்படுத்தப்பட்டது, சுதந்திரம் பறிபோனது.  இல்துத்மிஷ் போன்ற படையெடுப்பாளர்கள், உஜ்ஜயினியின் ஆற்றலை அழித்தொழிக்க முயற்சிகளை மேற்கொண்டார்கள்.  ஆனால் நமது ரிஷிமுனிகள் கூறியிருக்கிறார்கள், நமது ரிஷிமுனிகள் கூறியிருக்கிறார்கள்.  சந்திரசேகரம் ஆஸ்ரயே, சந்திரசேகரம் ஆஸ்ரயே, மம கிம் கரிஷ்யதி வியம.  அதாவது, மஹாகாலனின் சரணாரவிந்தங்களிலே, அட மரணம் தான் என்ன செய்து விடும்!!  அந்த வகையிலே, பாரதம் தன்னுடைய நம்பிக்கையின் ஆதார மையங்களின் ஆற்றலின் துணைகொண்டு, மீண்டும் புனர்வாழ்வு பெற்று மலர்ந்தது, மீண்டும் எழுந்து நின்றது. 

நாம் மீண்டும், நம்முடைய அமரத்துவ நிலையை, அதே போல உலகறிய பறைமுழக்கி அறிவித்தோம்.  பாரதம் மீண்டும், மகாகாலனுடைய ஆசிகளாலே, காலனின் தலைமீது காலத்தைக் கடந்த, அமரத்துவத்தை, எழுத்தாணி கொண்டு பொறித்தோம்.  இன்று மீண்டும் ஒரு முறை, சுதந்திரத்தின் அமுதகாலத்திலே, அமர அவந்திகா பாரதத்தின், கலாச்சார அமரத்துவத்தின் அறிவிப்பை  முழக்குகிறது.  உஜ்ஜயின், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய், பாரதநாட்டு கால அளவீடுகளின் மையப்புள்ளியாக விளங்கி வருகிறது.  அது இன்று மீண்டுமொரு முறை, பாரதத்தின், மகிமையின், ஒரு புதிய காலகட்டத்தின் சங்கநாதம் செய்கிறது. 

நண்பர்களே, பாரதத்தைப் பொறுத்த வரை, தர்மத்தின் பொருள் என்றால், நம்முடைய கடமைகளுடைய, சமூகரீதியான சங்கல்பம்.  நம்முடைய உறுதிப்பாடுகளின் இலக்கு, வையகத்தின் நலன்கள். அனைத்து மனிதர்களின் சேவை.  நாம் சிவ ஆராதனையின் போது கூறுவோம் – நமாமி விச்வஸ்ய ஹிதே ரதம் தம், நமாமி விச்வஸ்ய, ஹிதே, ரதம் தம். நமாமி ரூபாணி, பஹுனி தத்தே.  அதாவது, நாம் எப்படிப்பட்ட உலகத்தலைவன் சிவனை வணங்குகிறோம் என்றால், யார் அநேக ரூபங்களிலே, உலக நலன்களிலே, ஈடுபட்டிருக்கிறாரோ அவரே.  இதே உணர்வு தான், எப்போதும், பாரதத்தின் தீர்த்தங்கள், ஆலயங்கள், மடங்கள், மற்றும் நம்பிக்கை மையங்களிலும் உறைந்து வந்துள்ளது. 

இங்கே மகாகாலனுடைய ஆலயத்திற்கு, தேசம்-உலகம் முழுக்கவிருந்தும் மக்கள் வருகிறார்கள்.  சிம்மஸ்த கும்பமேளாவின் போது, இலட்சக்கணக்கானவர்கள் ஒன்று கூடுகிறார்கள்.   எண்ணற்ற பன்முகத்தன்மைகளும் கூட, ஒரு மந்திரம், ஒரு உறுதிப்பாட்டுடன் கூட, ஒன்றுபட முடிந்ததென்றால், இதை விட சிறப்பானதொரு உதாரணம் வேறென்ன இருக்க முடியும்?   நமக்கெல்லாம் நன்கு தெரியும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நமது கும்பமேளா பாரம்பரியம், பெரிய சமூகரீதியான கடைசல்களுக்குப் பிறகு, வெளிப்படும் அமிழ்து இருக்கிறதே, அந்த சங்கல்பத்தைத் தாங்கி 12 ஆண்டுகள் வரை, அதற்கு செயலூக்கம் தரும் பாரம்பரியமாக இருந்து வந்திருக்கிறது.  பிறகு மீண்டும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பம் நடக்கும் போது, மீண்டும் ஒரு அமிழ்துக் கடைசல் நடக்கும்.  மீண்டும் சங்கல்பம் மேற்கொள்ளப்படும், மீண்டும் 12 ஆண்டுகள் பயணம் தொடரும்.  கடந்த, கும்ப மேளாவின் இங்கே நடந்த போது, எனக்கு வரும் பேறு கிடைத்தது.  மஹாகாலனின் உத்தரவு வந்தது, இந்த மகனால் எப்படி வராமல் இருக்க முடியும்?  அப்போது அந்த சமயத்திலே, கும்பமேளாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம், அப்போது எனது மனதிலே ஒரு கடைசல் நடந்து கொண்டிருந்தது.  என்னுள்ளத்தில் ஒரு எண்ண ஓட்டம், அன்னை க்ஷிப்ராவின் கரையினிலே, பல சிந்தனைகள் என்னை சூழ்ந்து கொண்டன. 

அவற்றிலிருந்து ஒன்று, மனதைத் தொட்டது.  சில சொற்களைக் கூறினேன்.  எனக்கே தெரியாது எங்கிருந்து வந்தன எப்படி வந்தன என்று.  அப்போது எழுந்த அந்த உணர்வு, உறுதிப்பாடாக மாறியது.  இன்று அவை நிதர்சனக் காட்சியாக என் முன்னே விரிந்திருக்கிறது நண்பர்களே.  நான் இந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தாம், அந்த வேளையில் பிறந்த உணர்வினுக்கு, இன்று உயிரளித்துக் காட்டியிருக்கின்றார்கள்.  அனைவரின் மனங்களிலும், சிவம் மற்றும் சிவத்துவத்தின்பால் அர்ப்பணிப்பு.  அனைவரின் மனங்களிலும் க்ஷிப்ராவின்பால் சிரத்தை.    உயிர்கள் மற்றும் இயற்கையின்பால் புரிந்துணர்வு.  இத்தனை பெரிய மக்கள் திரள், உலகநன்மைக்காக.  உலகநலன்களுக்காக.  எத்தனை உத்வேகங்கள் இங்கே பிறக்கும்!! 

சகோதர சகோதரிகளே, நம்முடைய இந்தத் தீர்த்தங்கள், பல நூற்றாண்டுகளாக, நாட்டிற்கு, செய்தியையும் அளித்திருக்கின்றது.  மேலும் வல்லமையையும் அளித்திருக்கின்றது.  காசி போன்ற நமது மையங்கள், தர்மத்தோடு கூடவே, ஞானம், தத்துவம், கலைகளின் தலைமையகங்களாகவும் விளங்கியிருக்கின்றன.   உஜ்ஜயின் போன்ற நமது இடங்கள், வானவியல் விஞ்ஞானம், ஆஸ்ட்ரோனமியோடு தொடர்புடைய ஆய்வுகளின், முக்கியமான மையங்களாக விளங்கின.  இன்று புதிய பாரதம், தனது பண்டைய நற்பண்புகளை அரவணைத்து முன்னேறி வரும் வேளையில், நம்பிக்கையோடு கூடவே, விஞ்ஞானம் மற்றும் ஆய்வின் பாரம்பரியத்தையும், மீள் உயிர்ப்பித்து வருகின்றது. 

இன்று நாம் வானியல் துறையிலே, உலகின் பெரிய சக்திகளின் தோளோடு தோள் சேர்த்து நிற்கிறோம்.  இன்று பாரதம், மற்ற நாடுகளினுடைய, செயற்கைக்கோள்களையும் விண்ணிலே ஏவி வருகின்றது.  மிஷன் சந்திரயான், மற்றும் மிஷன் ககன்யான் போன்ற இயக்கங்கள் வாயிலாக, பாரதம் விண்ணை நோக்கித் தாவிப்பாயத் தயாராக இருக்கிறது, இது நமக்கு ஒரு புதிய உயரத்தை அளிக்கும்.  இன்று பாதுகாப்புத் துறையிலும் கூட, பாரதம் முழுவீச்சோடு தற்சார்பு நிலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.  இதைப் போலவே இன்று நம்முடைய இளைஞர்கள், திறன்களாகட்டும் விளையாட்டுக்களாகட்டும், விளையாட்டுக்களிலும் ஸ்டார்ட் அப்புகள்.  ஒவ்வொரு புதிய விஷயங்கள், புதியபுதிய ஸ்டார்ட் அப்புகளோடு, புதிய யூனிகார்ன்களோடு, ஒவ்வொரு துறையிலும், பாரதத்தின் திறமைகளை மேளதாளத்தோடு முழங்குகிறார்கள். 

சகோதர சகோதரிகளே, நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், இதை மறந்து விடக் கூடாது.  எங்கே புதுமைகள் இருக்கிறதோ, அங்கே புதுப்பித்தலும் இருக்கிறது.  நாம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இழந்தவற்றை, இன்று பாரதம், அதைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.  தன்னுடைய கௌரவத்தை, தன்னுடைய வளத்தினை, மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது.  இதனால் ஆதாயம், பாரதநாட்டவருக்கு மட்டுமல்ல, நம்பிக்கை கொள்ளுங்கள் நண்பர்களே நாம் மகாகாலனுடைய சரணங்களிலே அமர்ந்திருக்கிறோம், நம்பிக்கையை நிரப்பிக் கொள்ளுங்கள், நான் நம்பிக்கையோடு உரைக்கிறேன். 

இதன் பயன்கள், ஒட்டுமொத்த உலகிற்குமே கிடைக்கும், மனித சமூகமனைத்திற்கும் கிடைக்கும்.  மகாகாலுடைய ஆசிகளால், பாரதத்தின் மகத்துவம், ஒட்டுமொத்த உலகின் வளர்ச்சிக்கும் புதிய சந்தர்ப்பங்களை அமைத்தளிக்கும்.  பாரதத்தின் தெய்வீகத்தன்மை, ஒட்டுமொத்த உலகின் அமைதிக்கான பாதையில் விளக்கொளி கூட்டும்.  இந்த நம்பிக்கையோடு கூட, பகவான் மகாகாலின் சரணாரவிந்தங்களில், ஒருமுறை மீண்டும், சிரம் தாழ்த்தி சேவித்துக் கொள்கிறேன்.  என்னோடு கூட முழுபக்தியோடு முழங்குங்கள்!!  ஜெய் மகாகால், ஜெய்ஜெய் மகாகால், (7 times)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe