நாடாளுமன்ற உணவகத்தில் உணவுகள் விலை ஏற்றம்: மானிய விலையில் கிடைக்காது

புது தில்லி,

நாடாளுமன்றத்தில் உள்ள உணவகங்களில் மானிய விலையில், உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இனி, இதற்கான மானியம் ரத்தாவதால், இன்று முதல் குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் கிடைக்காது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லாபம் நஷ்டம் இன்றி அசல் விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, 18 ருபாய்க்கு விற்கப்பட்டு வந்த வெஜ் தாலி இனி 30 ரூபாய்க்கும், நான்வெஜ் தாலி 33 ரூபாய்க்கு பதிலாக இனி 60 ரூபாய்க்கும் விற்கப்படும். 29 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சிக்கன் கறி 40 ரூபாய்க்கும் விற்கப்படும் என விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிச் சந்தையில், கடும் பணவீக்கம் நிலவி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு மானிய விலையில், உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக ஊடகங்களில் சர்ச்சை எழுந்து வந்தன. இதையடுத்து, இந்த விவகாரத்தை கவனிக்குமாறு, நாடாளுமன்ற உணவுக் குழுவுக்கு சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதை ஆய்வு செய்த நாடாளுமன்ற உணவுக்குழு அண்மையில் அறிக்கை அளித்தது. இதையடுத்து 6 ஆண்டுகளாக அமலில் இருந்த விலையை மாற்றி அமைத்து நாடாளுமன்ற அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இனி, இந்த விலை அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் என்று மக்களவைச் செயலர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள உணவகத்தில், உணவு உண்ண வரும் மக்களவை, மாநிலங்களவை, ஊடகவியலாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர், மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த விலைப் பட்டியல் பொருந்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது