ஜல்லிக்கட்டு நடத்த வழங்கிய அனுமதிக்கு தடை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி:

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரியும், இதற்கு  அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரியும் இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 11 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மனுக்கள் மீதான விசாரணை விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் அரிமா சுந்தரம் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது சட்ட விரோதம் என்றும், வன விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியதை சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும் கூறினார். தமிழக அரசு சார்பிலும் மத்திய அரசு சார்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை அரசு வழக்கறிஞர்,  இது ஸ்பெயினில்  நடைபெறுவது போன்ற காளை வதை சண்டை அல்ல. தேவையெனில் ஜல்லிக்கட்டுக்கு  உச்ச நீதிமன்றம் நிபந்தனைகள் விதிக்கலாம் என கூறினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் 4 வார காலத்துக்குள் மத்திய மாநில அரசுகள் தடை நீக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறினர்.

இந்தச் செய்தியைக் கேட்டு, ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளில் இருந்த தென் தமிழக மக்கள் பெரும்  ஏமாற்றம் அடைந்தனர்.