சென்னை: தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுக்கடைத் திறக்க அம்மாநில அரசு முடிவெடுத்து, துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியிலும் மதுக்கடைகள் அடியோடு மூடப்பட்டன. சரக்கு விற்பனை பாண்டிச்சேரிக்கு மிகப் பிரபல்யம் என்பதால், தமிழகத்தைக் காட்டிலும் அதிகமான குடிகாரர்கள் அங்கு சுற்றுலா செல்வது போல், சென்று குடிப்பது வழக்கம்.
ஆனால் இந்தத் தடவை, புதுச்சேரியை முந்திக் கொண்டு தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 158 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி அரசை வாய்ப்பிளக்க வைத்திருக்கின்றன.
இந்த நிலையில் புதுச்சேரியிலும் மே 31 வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும், மே 20 -ம் தேதி முதல் மதுக்கடைகளைத் திறக்கலாம் என அம் மாநில ஆளுநரிடம் புதுச்சேரி அரசு பரிந்துரை செய்து அனுமதிக்காக காத்திருக்கிறது.
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி இதற்கு அனுமதி தரும் பட்சத்தில் நாளையோ அல்லது ஒரிரு நாளில் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.