
நயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். சீனப் பொருட்களைப் புறக்கணிக்க உறுதிமொழி ஏற்போம் என்று இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இந்து முன்னணியின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில்…
உலகத்தையே கபளீகரம் செய்யத் துடிக்கும் நாடு சீனா. திபெத்தை, ஹாங்காங்கை தற்போது விழுங்கி விட்டது. நேபாளத்தை கபளீகரம் செய்ய, மறைமுகமான கம்யூனிச ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது.
1962ல் நேருவை ஏமாற்றி, நேரு – சூஎன்லாய் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மை காயும் முன் இந்தியா மீது படையெடுத்து பல சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதிகளை பிடித்து தன்வசமாக்கி முதுகில் குத்தியது.
கரோனா வைரஸை உருவாக்கி உலகமெங்கும் பரப்பி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக இருப்பதற்கும் பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்வதற்கும் முக்கிய காரணம் சீனாவின் ஆதரவும், சீனா ஆயுதம் வழங்குவதும் தான். கம்யூனிஸ்டுகள் மூலம் இந்தியாவை கபளீகரம் செய்ய திட்டமிட்டு சதி செயல்களை நீண்டகாலம் செய்து வருகிறது.
தற்போது உலகின் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும்கூட இந்தியாவோடு சமாதானம் பேசிக் கொண்டே இந்திய வீரர்களைக் கொன்றுள்ளது. இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.
சீனப் பொருட்களை இலவசமாகக் கொடுத்தால்கூட வாங்கக் கூடாது என்ற உறுதிப்பாட்டை இந்திய மக்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய தருணம் இது. சீனாவை எதிர்த்து கண்டன குரல் தமிழகம் முழுவதும் எழுப்புவோம். கிளைகள் தோறும் கண்டன நிகழ்ச்சி நடத்தி சீனப் பொருட்களைப் புறக்கணிக்க உறுதிமொழி எடுப்போம்.
இந்திய நாட்டிற்காக இன்னுயிர் தந்து வீரமரணமடைந்த நம் வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்… என்று கோரியுள்ளார்.