மதுரை நகருக்குள் செல்ல வெள்ளிக்கிழமை நாளை காலை முதல் போலீஸார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் கூறப் படும் தகவலை மறுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
மதுரை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, போலீஸார் ஆகியோர் கடும் கட்டுபாடுகளை விதித்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, மதுரை நகரில் காரணமின்றி சுற்றித் திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப் படுவதுடன், ரூ. 500 அபராதமும் விதிக்கப் படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில், மதுரை மாவட்டத்தில் இருந்து மதுரை மாநகருக்குள் செல்ல நாளை முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்துச் செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர்…. எடுத்துக் காட்டாக, புதூரில் இருந்து தெப்பக்குளம் வழியாகவோ அல்லது மேலமடை வழியாகவோ மதுரை நகருக்குள் செல்ல E-பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் அனுமதி மறுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது… என்று தகவல்கள் பரிமாறப் பட்டன.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தெப்பக்குளம், மேலமடை வழியாகச் சென்றால் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று சமூகத் தளங்களில் உலாவரும் தகவல் தவறானது. அது போல் மாநகராட்சியில் செல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழையத் தடை என்று கூறப்படுவதும் தவறானது என்று, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட பகிர்வு தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் வினய், இது தவறான தகவல் என்று கூறியுள்ளார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை