
நாமக்கல்லின் புதுச்சத்திரம் அருகே பாலப்பாளையத்தை சேர்ந்த தம்பதி பெருமாள்- அஞ்சலை. இவர்களது மகன் கோடீஸ்வரன் (வயது 30), ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையில் எம்எஸ்சி பிஎட் படித்துள்ளார்.
ஆனால் அரசு ஆசிரியர் பணிக்காக பலமுறை முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை, இதனால் விரக்தியில் இருந்த கோடீஸ்வரனுக்கு நாமக்கலை சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி அவரிடம் சுமார் 12 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார், சொன்னபடி வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி அளிக்காமலும் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கோடீஸ்வரனிடம் பணம் கொடுத்த நபர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோடீஸ்வரன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கோடீஸ்வரன் வீட்டுக்குச்சென்று, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி கூறினர்.
அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோடீஸ்வரன், காவலர்களை தாக்க முயற்சித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தது. பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், தொடர்ந்து யாரிடமும் பேசாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் வசித்த அத்தையை திடீரென சரமாரியாக வெட்டிக் கொன்றதுடன், பெரியப்பாவையும், அந்த வழியாக வந்த நரேஷ் குமார் என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெரியப்பா, நரேஷ்குமாரை மருத்துவமனையில் சேர்த்த அக்கம்பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிஸ் அதிகாரிகள் வீட்டுக்குள் பதுங்கி இருந்த கோடீஸ்வரனை கைது செய்தனர்.
போலிசிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், வேலை வாங்கி தருவதாக நபர் ஒருவரிடம் நான் ஏமாந்ததை அறிந்து கொண்ட என் அத்தை அடிக்கடி அறிவுரை கூறி வந்தார். அது எனக்கு பிடிக்காததால் அவரை வெட்டிக் கொன்றேன், பக்கத்தில் இருந்த பெரியப்பாவும், நரேஷ்குமாரும் என்னை பிடிக்க வருகிறார்கள் என நினைத்து அவர்களையும் தாக்கினேன் என தெரிவித்துள்ளார்