December 3, 2021, 3:55 pm
More

  பக்தனின் பக்திக்கு பரிந்து வந்த பாண்டுரங்கன்!

  panduranga
  panduranga

  பிரதிஷ்டானம் என்ற ஊரில் வசித்த கூர்மதாசர், பாண்டுரங்கன் மீது பக்தி கொண்டவர்.

  பிறவியிலேயே கால் ஊனமாகி இருந்ததால், ஆமையைப் போல ஊர்ந்து செல்வார். எனவே இவருக்கு கூர்மதாசர் என்ற பெயர் நிலைத்து, பெற்றோர் இட்ட பெயர் மறைந்து போனது.

  எனினும், திருமால் எடுத்த அவதாரங்களில் ஒன்று தானே கூர்மம்! அதனால், திருமால் பக்தருக்கு இப்படி ஒரு பெயர் அமைந்ததில் குறைச்சல் ஏதும் இல்லை. உடலில் குறை இருந்தாலும், தாசருக்கு உள்ளத்தில் குறையில்லை.

  மனவுறுதி அவருக்கு இயல்பாக இருந்தது. பகவானின் திருநாமத்தை ஜெபிப்பதும், பஜனை பாடுவதுமே அன்றாடக்கடமை.
  ஹரிகதை (ஆன்மிக சொற்பொழிவு) எங்கு நடந்தாலும் சரி, அதைக் கேட்க ஓடோடிச் சென்று விடுவார்.

  ஒருநாள், தாசர் பங்கேற்ற கதாகாலட்சேபத்தில் பண்டரிபுரம் பாண்டுரங்கனின் திருவிளையாடலைப் பற்றி உபன்யாசகர் பேசினார்.
  இதைக் கேட்ட தாசர் பரவசம் அடைந்தார். பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனை நேரில் தரிசிக்க ஆவல் ஏற்பட்டது.

  மறுநாளே புறப்பட்டார். ஊர்ந்தே சென்ற தாசர், ஆங்காங்கே சத்திரத்தில் கிடைக்கும் உணவை சாப்பிட்டார். ஒருநாள், உணவு கிடைக்கவில்லை. கடும் பசியுடன் மயங்கி கீழே விழுந்தார்.

  அவர் விழுந்த இடம் ஒரு ஆஞ்சநேயர் கோயில் முன்பு! பக்தனைக் காக்க, பாண்டுரங்கன், ஒரு வியாபாரியைப் போல அங்கு வந்தார்.

  பெருமாளின் பார்வை பட்டதும் தாசருக்கு மயக்கம் தெளிந்தது. அப்போது, சந்நிதியில் இருந்த ஆஞ்சநேயர் சிலை மறைந்து, சங்கு சக்ரதாரியாக பாண்டுரங்கனாக காட்சியளித்தார். தாசர், பக்திபரவசத்துடன் ஹரி நாமத்தைப் பாடிய படியே வணங்கினார்.

  தாசர் முன் வியாபாரியாக நின்ற பெருமாள், பெரியவரே! என்ன அற்புதமான சரீரம் உங்களுக்கு! பலே! பலே! மதுரமான சங்கீதத்தைக் கேட்டு என் மனம் குளிர்ந்து விட்டது! என்றார்.

  அப்போது தான் தாசர், தன் முன்னே நிற்கும் வியாபாரியை நிமிர்ந்து பார்த்தார். உங்களைப் பார்த்தால் பெரும் தனவான் போலத் தெரிகிறது! இருந்தாலும் எளியவனாகிய என்னைப் பாராட்டியதற்கு நன்றி! ஏதோ எனக்குத் தெரிந்ததைப் பாடினேன் அவ்வளவு தான். எல்லாப்பெருமையும் இந்தப் பெருமாளுக்குத் தான் என்றார் தாசர்.

  பிறகு தாசர் ..நீங்கள் யார் என்பதை எனக்குச் சொல்ல வில்லையே! என்று கேட்டார். ‌வியாபாரியான பெருமாள்.. என் பெயர் விட்டலன், பண்டரிபுரத்தில் ரத்தினவியாபாரம் செய்கிறேன், என்றவர், கூர்மதாசரைப் பற்றி விசாரித்தார்.

  சுவாமி! அடியேன் பெயர் கூர்மதாசன். பிரதிஷ்டானத்தில் இருந்து பண்டரிபுரத்திற்கு யாத்திரையாகச் சென்று கொண்டிருக்கிறேன்.

  உங்களைச் சந்தித்துப் பேசியதில், இனம்புரியாத சந்தோஷம் உண்டாகிறது. ஏனென்றே தெரியவில்லை என்று கூறினார்.

  அப்படியா! எனக்கும் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி! என்னோடு சாப்பிடுங்கள். பிறகு, இருவரும் பண்டரிபுரம் புறப்படலாம் என்றார் வியாபாரியான பெருமாள்.

  உணவு முடிந்து, பண்டரிபுரம் செல்லும்வழியில் உள்ள வகுளாபுரத்தை அடைந்தனர். அங்கு, வியாபாரியாக வந்த பெருமாள் மாயமாய் மறைந்து விட்டார்.

  தாசர் செய்வதறியாமல் திகைத்தார், அப்போது, ஒரு பாகவதகோஷ்டி பஜனை செய்து கொண்டே பண்டரிபுரம் சென்று கொண்டிருந்தது.

  அவர்களிடம் தாசர்…ஐயா! இங்கிருந்து பண்டரிபுரம் செல்ல எவ்வளவு நேரமாகும்? என்று கேட்டார்.

  நாங்கள் இரண்டு மணிநேரத்தில் அங்கு சென்றுவிடுவோம். ஆனால், நீங்கள் வந்து சேர இரண்டு நாட்கள் ஆகுமே! என்றனர். இதற்கு தாசர், என்னால் இதற்கு மேல் நடக்க இயலவில்லை.

  அடியேனுக்காகப் பாண்டுரங்கனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்று சொல்லி வகுளாபுரம் கோயிலில் தங்கி தியானத்தில் ஆழ்ந்தார்.

  பாகவதகோஷ்டியினர் பண்டரிபுரத்தை அடைந்து பாண்டுரங்கனைத் தரிசித்து மகிழ்ந்தனர். அப்போது கோயிலில் நாமதேவர், ஞானேஸ்வரர் என்ற மகான்கள் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருந்தனர்.

  பாகவதர்கள் அவர்களிடம், கூர்மதாசரைப் பற்றி தெரிவித்தனர். ஞானதிருஷ்டியில் அவரது பக்தியை உணர்ந்த நாமதேவர் வகுளாபுரிக்குப் புறப்பட்டார்.

  நீலமேக சியாமளனாக பாண்டுரங்கனும் ஞானேஸ்வரரும் கிளம்பினர் செல்லும் வழியில் ஒரு நந்தவனம் அருகே வந்த போது விட்டலன் இதோ வந்து விடுகிறேன் என்று அந்த நந்தவனம் உள்ளே செல்ல அங்கு பக்த சிரோண்மணியான ஸாவந்த மாலீயை கண்டு ஆசிர்வாதம் செய்தார்,

  பிறகு என்னை இரண்டு திருடர்கள் விரட்டி வருகின்றனர் என கூறி ஒழிய இடம் கேட்க.. அவரோ விட்டலா!! நீ இல்லாத இடம் ஏது? என கூற, சரி என விட்டலன் நகைத்து கொண்டு அவரின் இருதய கமலத்தில் ஒளிந்து கொள்கிறான்.

  போன விட்டலனை காணலையே என நாம தேவர் ஞானேஸ்வரர் நந்தவனம் நுழைந்து விட்டலனை பற்றி கேட்க அவரோ ஞான சொருபமாக அமர்ந்து சிரிக்கிறார்.

  இதை கண்டு கோபம் கொண்ட நாம தேவர் அவரை தாக்க முயற்சிக்க விட்டலன் அங்கு பிரசன்னம் ஆகி இதெல்லாம் என் விளையாட்டு என கூறி அனைவரும் தாசரை காண புறப்பட்டு செல்கிறனர்.

  விட்டலனோ தாசர் முன் எழுந்தருளினார். கோடி சூர்ய பிரகாசம் தன் முன் பரவியதைக் கண்ட தாசர், தியானத்தில் இருந்து எழுந்தார்.

  எம்பெருமானே! இந்த எளியவன் மீது இரக்கம் கொண்டு வகுளாபுரிக்கு எழுந்தருளிவிட்டீரே! உமக்கு என் நமஸ்காரம்! என்று ஆனந்தக் கண்ணீருடன் இருகரம் குவித்து வணங்கினார்.

  பாண்டுரங்கன் அவரிடம் கூர்மதாசரே! உன் பக்தியை மெச்சியே இங்கு காட்சி அளித்தேன்! வேண்டும் வரம் யாது?, என்றுகேட்டார். சுவாமி! உமது அருளால் எனக்கு ஒரு குறையும் இல்லை. எனக்கு வரம் தருவதாக இருந்தால், என்றென்றும் வகுளாபுரியில் இதே வடிவில் சிலையாக இருந்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார்.

  அந்த சமயத்தில் அங்கு வந்த நாமதேவர், ஞானேஸ்வரர், பாகவதர்கள் அனைவரும் தெய்வகாட்சி பெற்று மகிழ்ந்தனர். கூர்மதாசரின் வேண்டுதலை பாண்டுரங்கனும் ஏற்றுக் கொண்டார்.

  பண்டரிபுரம் போல, வகுளாபுரியும் புண்ணிய க்ஷேத்திரமாகத் திகழ்கிறது.
  பரமபக்தரான கூர்மதாசரின் புகழை இன்றும் இவ்வூர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,778FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-