
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
தமிழ்நாட்டின் ஆளுநர் திரு. ஆர். என். இரவி அவர்களே
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எம்.கே.ஸ்டாலின் அவர்களே,
பல்கலைக்கழக வேந்தர் முனைவர். கே. எம். அண்ணாமலை அவர்களே.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் அவர்களே,
காந்திகிராமம் ஊரகக் கல்வி நிறுவனத்தின் அலுவர்களே, துணைப் பணியாளர்களே,
பிரகாசமான மாணவர்களே, அவர்களின் பெருமிதம்மிக்க பெற்றோர்களே.
வணக்கம்.
இன்று பட்டம் பெறும் அனைத்து இளம் உள்ளங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
மாணவர்களின் பெற்றோருக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். உங்களுடைய தியாகங்கள் தான் இன்றைய நிறைவான நாளுக்கான காரணமாக இருக்கின்றன. கல்வி கற்பிக்கும் அலுவலர்களும், கற்பித்தல் சாராத அலுவலர்களும் பாராட்டுக்களுக்கு உரியவர்கள்.
நண்பர்களே, இங்கே பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருவது என்பது எனக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும் விஷயம். காந்திகிராமம் அண்ணல் காந்தியடிகளாலேயே தொடங்கி வைக்கப்பட்டது. இதன் இயற்கை அழகு, சீரான ஊரக வாழ்வு, எளிமையான, ஆனால் அறிவுசார் சூழல், ஊரக மேம்பாடு குறித்த அண்ணல் காந்தியடிகளின் உணர்வினை நம்மால் இங்கே காண முடிகிறது.
எனது இளம் நண்பர்களே, நீங்கள் வெகு முக்கியமான தருணத்தில் பட்டம் பெறுகிறீர்கள். காந்திய விழுமியங்கள் அதிக அளவு உகந்தவையாக ஆகிக் கொண்டிருக்கின்றன. அது பிணக்குகளையோ, அல்லது சூழலியல் சங்கடத்தையோ முடிவுக்குக் கொண்டு வருவதாகட்டும், அண்ணல் காந்தியடிகளின் எண்ணங்கள்வசம் இன்றைய பல பற்றி எரியும் பிரச்சனைகளுக்கான விடை இருக்கின்றது. காந்தியவழி வாழ்க்கைமுறையின் மாணவர்கள் என்ற வகையில், பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் மகத்தான ஒரு வாய்ப்பு உங்களிடம் இருக்கிறது.

நண்பர்களே, அண்ணல் காந்தியடிகளின் இதயத்துக்கு அணுக்கமான கருத்துக்களின்படி நடப்பது தான் அவருக்கு நாம் அளிக்கக்கூடிய சிறந்த நினைவாஞ்சலியாக இருக்க முடியும். நீண்டகாலமாகவே காதி என்பது புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது, மறந்து போனதாக இருந்து வந்துள்ளது. ஆனால் காதி ஃபார் நேஷன், காதி ஃபார் ஃபேஷன் என்ற அறைகூவல் வாயிலாக இது மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், காதித் துறையின் விற்பனை 300 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது.
காதி கிராமப்புறத் தொழில்கள் ஆணையம், கடந்த ஆண்டு மட்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது.
உலக அளவிலான ஃபேஷன் ப்ராண்டுகளும் கூட இப்போது கதராடைகளை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். ஏனென்று சொன்னால், இது சூழலுக்கு நேசமான ஒரு ஆடை, நமது பூமி கிரகத்துக்கு நன்மையானது. பெரிய அளவு உற்பத்தி செய்தல் என்ற உற்பத்திப் புரட்சி அல்ல இது. இது வெகுஜனங்களின் ஒரு உற்பத்திப் புரட்சி. கிராமங்களின் தற்சார்புக்கான ஒரு கருவியாகவே காதியை அண்ணல் காந்தியடிகள் பார்த்தார்.
அவரால் கருத்தூக்கம் பெற்று நாங்கள் தற்சார்பு பாரதம் நோக்கிச் செயல்பட்டு வருகிறோம். சுதேசி இயக்கத்தின் முக்கிய கேந்திரமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தற்சார்பு பாரதத்திலும் கூட இது மீண்டும் ஒரு முக்கியமான பங்கினை ஆற்ற இருக்கிறது.

நணபர்களே, ஊரகப்பகுதி மேம்பாடு குறித்த காந்தியடிகளின் தொல்நோக்குப் பார்வையைப் புரிந்து கொள்ளுவது என்பது முக்கியமானது. அவர் கிராமங்களின் முன்னேற்றத்தை விரும்பினார்.
அதே வேளையில், ஊரகப்பகுதி வாழ்க்கையின் விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதையும் அவர் விரும்பினார்.
ஊரகப்பகுதி மேம்பாடு குறித்த நமது தொலைநோக்கு அவரிடமிருந்து தான் உத்வேகம் அடைகிறது. கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி என்பதே நமது நோக்கு. நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகள் வேறுபட்டு இருப்பது சிறப்பான ஒன்று தான். வேறுபாடு பிரச்சனையல்ல, ஏற்றத்தாழ்வு தான்பிரச்சனை. நீண்டகாலமாகவே, ஊரக மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான சமச்சீரற்ற நிலை இருந்து வந்துள்ளது.
ஆனால் இன்று, தேசம் இதைச் சரி செய்து கொண்டிருக்கிறது. முழுமையான ஊரகப்பகுதி சுகாதாரக் காப்புறுதிப் பாதுகாப்பு, 6 கோடிக்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு குழாய்வழி குடிநீர், இரண்டரை கோடி மின்னிணைப்புகள், அதிக அளவிலான ஊரகப்பகுதிச் சாலைகள் ஆகியன மக்களின் வாயிற்படிகளுக்கே வளர்ச்சியைக் கொண்டு செல்கிறது.
அண்ணல் காந்தியடிகளின் நெஞ்சத்துக்கு வெகு நெருக்கமானதொரு கருத்து என்றால் அது சுகாதாரம் ஆகும். தூய்மை பாரதம் வாயிலாக இது புரட்சிகரமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அடிப்படை விஷயங்களைக் கொண்டு சேர்ப்பதோடு மட்டுமே நாம் தடைப்படவில்லை. நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆதாயங்கள் கூட இன்று ஊரகப்பகுதிகளைச் சென்றடைந்து கொண்டிருக்கிறது.

சுமார் இரண்டு இலட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களை இணைக்கும் வண்ணம் ஆறு இலட்சம் கிலோமீட்டர்கள் அளவிலான கண்ணாடி இழைநார் போடப்பட்டிருக்கிறது. குறைந்த செலவிலான இணையத் தரவு காரணமாக ஊரகப் பகுதிகள் ஆதாயம் அடைந்திருக்கின்றன. நகர்ப்புறங்களைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளில் இணைத்தளப் பயன்பாடு அதிக வேகமாக வளர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மிகப்பெரிய அளவிலான சந்தர்ப்பங்களை உருவாக்கித் தருகிறது. ஸ்வாமித்வ திட்டத்தின்படி, நாம் நிலப்பகுதிகளின் வரைபடங்களைத் தயார் செய்ய ஆளில்லா பறக்கும் கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.
நிலவுரிமை அட்டைகளையும் மக்களுக்கு அளிக்கிறோம். பல செயலிகள் வாயிலாக விவசாயிகள் இணைக்கப்பட்டு வருகிறார்கள். கோடிக்கணக்கான நிலவள அட்டைகள் வாயிலாக சாதகமடைந்து வருகின்றார்கள். ஏராளமான விஷயங்கள் நடைபெற்றிருக்கின்றன, ஆனால் மேலும் அதிகப் பணிகள் நடைபெற வேண்டியிருக்கின்றது. நீங்கள் தான் இளைய தலைமுறையினர், அதிக பிரகாசமான தலைமுறையினர். இந்த நிறுவனத்தை மேலும் சிறப்பாகக் கட்டமைக்க அதிகத் திறமை வாய்ந்தவர்கள்.
நண்பர்களே, ஊரகப்பகுதி மேம்பாடு என்று வரும் போது, அதன் நீடித்ததன்மையை நாம் பராமரிபப்தில் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் இதில் தலைமைத்துவத்தை அளிக்க வேண்டும். நீடித்த வேளாண்மை என்பது, ஊரகப்பகுதிகளின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது.
இயற்கை விவசாயம் குறித்தும், இரசாயனமில்லா விவசாயம் குறித்தும் பெரிய ஆர்வம் இருக்கிறது. உர இறக்குமதிகளின் மீது நாடு சார்ந்திருக்கும் நிலையை இது குறைக்கிறது. மேலும் நிலத்தின் நலத்திற்கும், மனித ஆரோக்கியத்திற்கும் இது நன்மை பயப்பது.
இந்தத் திசையில் நாம் ஏற்கெனவே பணிகளைத் தொடங்கி விட்டோம். குறிப்பாக வடகிழக்குப் பகுதியில் நமது இயற்கைவழி விவசாயத் திட்டம் அற்புதங்களைப் புரிந்து வருகிறது. கடந்த ஆண்டு வரவுசெலவுத்திட்ட அறிக்கையில், இயற்கை விவசாயம் தொடர்பான ஒரு கொள்கைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். கிராமங்களில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியமானதொரு பங்கினை உங்களால் ஆற்ற முடியும். நீடித்த வேளாண்மை தொடர்பான முக்கியமான ஒரு விஷயம் மீது இளைஞர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

ஒரே இரகப் பயிர் சாகுபடி என்ற நிலையிலிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பல உள்நாட்டு ரக தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் பிற பயிர்களுக்கு மீளுயிர்ப்பு அளிக்கப்பட வேண்டும். சங்ககாலத்திலும் கூட பலரக சிறுதானிய வகைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பண்டைய தமிழ்நாட்டின் மக்கள் அவற்றை விரும்பினார்கள். இவை ஊட்டச்சத்து நிறைந்ததோடு, சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுப்பவை. மேலும், பயிர் பன்முகத்தன்மை என்பது நிலத்தையும் நீரையும் சேமிக்க உதவிகரமானது. உங்கள் பல்கலைக்கழகமே கூட புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்துகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் நிறுவப்பட்ட சூரியசக்தித் திறன் என்பது 20 மடங்கு அதிகரித்திருக்கிறது. கிராமங்களில் சூரியசக்தி என்பது பரவலாக்கப்பட்டால், ஆற்றல் துறையிலும் கூட சுயசார்பு நிலையை இந்தியாவால் எட்ட முடியும்.
நண்பர்களே, காந்திய சிந்தனையாளர் வினோபா பாவே ஒருமுறை கருத்து ஒன்றினை வெளிப்படுத்தினார். கிராமப்புற அளவிலான அமைப்புகளின் தேர்தல்கள், பிளவினை ஏற்படுத்தவல்லவையாக இருப்பதாக அவர் கூறினார். இவை காரணமாக சமூகங்கள், ஏன் குடும்பங்கள் கூட உடைந்து விடுகின்றன.
இதை எதிர்கொள்ளும் விதமாக சமரஸ் கிராமத் திட்டம் என்ற ஒன்றினை நாங்கள் குஜராத்தில் தொடங்கினோம். ஒருமித்த கருத்தோடு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் கிராமங்களுக்கு சில ஊக்கங்கள் அளிக்கப்பட்டன. இது சமூகப் பிணக்குகளைப் பெரிய அளவில் குறைத்தது. இந்தியாவெங்கும் இது போன்ற செயல்பாடுகளை மேம்படுத்த கிராமத்தவர்களோடு இளைஞர்கள் இணைந்து பணியாற்றலாம். கிராமங்கள் ஒன்றுபட்டால், அவர்கள் குற்றங்கள், போதைப் பொருட்கள், சமூக விரோத சக்திகள் ஆகியவற்றுக்கு எதிரான பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
நண்பர்களே, ஒன்றுபட்ட, சுதந்திரமான ஒரு இந்தியாவுக்காக காந்தியடிகள் போராடினார். காந்திகிராமமே கூட இந்தியாவின் ஒற்றுமையின் கதை. காந்தியடிகளை ஒரே ஒருமுறை காண, இங்கே தான் ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் ரயிலுக்கு வந்தார்கள். அவர் எங்கிருந்து வருகிறார் என்பது ஒரு பொருட்டாக அவர்கள் கருதவில்லை.
காந்தியடிகள், கிராமவாசிகள் இருவருமே இந்தியர்கள் என்பது தான் முக்கியமான விஷயமே. தேசிய உணர்வின் இருப்பிடமாக எப்போதுமே தமிழ்நாடு இருந்து வந்திருக்கிறது. மேற்கிலிருந்து திரும்பிய ஸ்வாமி விவேகானந்தருக்கு ஒரு நாயகனுக்கே உரித்தான வரவேற்பு இங்கே அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டுமே கூட நாம் வீர வணக்கம் என்ற கோஷங்களை கவனித்தோம்.
இராணுவத் தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு தமிழ் மக்கள் காட்டிய மரியாதை நெஞ்சை நெகிழச் செய்யக்கூடியது. இந்த வேளையில் வெகு விரைவில் காசி தமிழ் சங்கமம் காசியில் நடைபெறவிருக்கிறது. இது காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான பந்தத்தைக் கொண்டாடும். தமிழ்நாட்டின் மொழி, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைக் கொண்டாட காசியின் மக்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.
ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் செயல்பாடு என்பது இது தான். பரஸ்பர அன்பும், மரியாதையும் தான் நமது ஒற்றுமையின் அடிப்படையாகும். இங்கே பட்டம் பெறும் இளைஞர்கள் குறிப்பாக ஒற்றுமைக்கு ஊக்கமளிக்க வேண்டுகிறேன்.
நண்பர்களே, பெண்களின் சக்தியைக் கண்ட ஒரு பகுதியிலே நான் இருக்கிறேன். இங்கே தான் இராணி வேலு நாச்சியார் தங்கி, பிரிட்டிஷாரோடு போரிடத் தன்னை தயார் செய்து கொண்டார். மிகப்பெரிய மாற்றக்காரணிகளாக இங்கே இருக்கும் இளம் பெண்களை நான் காண்கிறேன். ஊரகப்பகுதிப் பெண்களின் வெற்றிக்கு நீங்கள் உதவுவீர்கள். அவர்களின் வெற்றி தான் தேசத்தின் வெற்றி.
நண்பர்களே, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடியை உலகம் சந்தித்த வேளையில், இந்தியா பிரகாசமானதொரு இடமாக இருந்திருக்கிறது. அது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கமாகட்டும், மிகவும் ஏழ்மையிலிருக்கும் உணவுப் பாதுகாப்பாகட்டும், அல்லது உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருப்பதாகட்டும், இந்தியா எப்போதுமே தனது வல்லமையைக் காட்டியிருக்கிறது. பெரிய விஷயங்களை இந்தியா புரிய வேண்டும் என்று உலகம் விரும்புகிறது. என்னால் முடியும் என்று கருதும் இளைய தலைமுறையினரின் கரங்களிலே இந்தியாவின் எதிர்காலம் இருப்பதே இதன் காரணம்.
சவால்களை ஏற்பவர்கள் மட்டுமல்ல இளைஞர்கள், அவற்றை அனுபவிப்பவர்களும் கூட, வினா எழுப்புபவர்கள் மட்டுமல்ல இளைஞர்கள், விடைகளையும் கண்டுபிடிப்பவர்களும் கூட, அச்சமற்றவர்கள் மட்டுமல்ல இளைஞர்கள், களைப்பில்லாதவர்களும் கூட, பேரார்வம் உடையவர்கள் மட்டும் அல்லர் இளைஞர்கள், சாதிப்பவர்களும் கூட. ஆகையால், இன்று பட்டம்பெறும் இளைஞர்களுக்கு நானளிக்கும் செய்தி என்னவென்றால், நீங்கள் தான் புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்கள். இந்தியாவின் அமுதக்காலத்திலே அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவிற்குத் தலையேற்கும் பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது. மீண்டுமொரு முறை உங்களனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஆல் தி பெஸ்ட்.