சோழவந்தான்: சோழவந்தானில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, கழிப்பறை கட்டும் ஆளுங்கட்சியினர். போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில்.அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளை ஆளுங்கட்சியினர் தொடங்கிய நிலையில் அந்த இடம் சாமி ஊர்வலம் வரும் எனவும் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் மிகவும் நெருக்கடியான இடம் என்றும் ஆகையால் கழிப்பறையை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் சென்று முறையிட்டனர் .
தகவல் அறிந்து, உடனடியாக அங்கு வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , பொதுமக்களுடன் பேசி சமாதானம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவே இந்த இடத்தில் கழிப்பறை கட்ட முடிவு செய்துள்ளதாகவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் வேறு இடத்திற்கு கழிப்பறை கட்டும் திட்டத்தை மாற்றிக் கொள்வதாகவும் உறுதி அளித்து சென்றார் .
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மீண்டும் பணிகளை தொடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே, வைகாசி திருவிழாவின் அக்கினி சட்டி பால்குடம் மற்றும் தீர்த்தவாரி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நாள் போன்ற தினங்களில் பல ஆயிரம் மக்கள் இந்த பகுதி வழியாக வைகை ஆற்றுக்குள் செல்வது வழக்கம் .
அந்த நேரங்களில் மிகவும் நெருக்கடியான இடம் என்பதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறைக்கும் சவாலாக இருக்கும். இந்த நிலையில், கழிப்பறை கட்டுவதால் இடம்நெருக்கடியாகி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் ஆகையால் ,அருகில் உள்ள சனீஸ்வரன் கோயில் பகுதி அல்லது அய்யாவார்தெரு பகுதி ஆகிய இடங்களில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
தொடர்ந்து கழிப்பறை கட்டும் கட்டுவதை கைவிடாவிட்டால், பொதுமக்களை ஒன்று திரட்டி போராட போவதாக தெரிவித்துள்ளனர்.