திருப்பரங்குன்றம் கோவில் கார்த்திகை தீப பிரச்சனை : இந்து முன்னணியினர் கைது

 

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் 40க்கும் மேற்ப்பட்டோர் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 150 அடி உயர மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியில் அமைந்துள்ள தீப மேடையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வருடந்தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் மலை உச்சியில் உள்ள தூணில் தான் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் தடையை மீறி தீபம் ஏற்றப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மலை உச்சியில் உள்ள தூணின் நாலா புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளனர். அவர்கள் மலையில் இருந்தபடியே 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இதில் ஒருகாவல் ஆய்வாளர் 4 போலீசார் வீதம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுவதையொட்டி மலையில் உள்ள குதிரை சுனை, நெல்லி தோப்பு, உச்சிபிள்ளையார் கோவில், பழனி ஆண்டவர் கோவில் காசி விசுவநாதர் கோவில் மற்றும் தர்கா உள்ளிட்ட மலையின் நாலாபுறமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மலையின் அடிவாரப் பகுதியில் கோட்டை தெருவில் உள்ள சாவடியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், முருகன் கோவிலுக்குள்ளும் மற்றும் நகரின் நாலாபுறமும் 25 காவல் ஆய்வாளர்கள் 60 காவல் ஆய்வாளர்கள்உதவி உள்பட 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.