டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட வழக்கறிஞர் தற்கொலை முயற்சி

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட, மதுரை வழக்கறிஞர் மாளவியா விஷம் குடித்து தற்கொலை முயன்ற நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

மதுரை அருகே உள்ள உத்தங்குடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மாளவியா (35). சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துகொண்ட வழக்குத் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், விஷ்ணுப்பிரியா, வழக்கறிஞர் மாளவியாவிடம் கைப்பேசியில் அதிக நேரம் பேசியிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீஸார் மாளவியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த வழக்கில் தன்னை சிக்கவைக்க சிபிசிஐடி போலீஸார் முயற்சிப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், உத்தங்குடியில் உள்ள தனது வீட்டில் மாளவியா நேற்று பிற்பகலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

அவரது நண்பர் மூலமாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார் மாளவியாவிற்க்கு நெருக்கடி கொடுத்து வருவதால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது . மாளவியா தற்கொலைதொடர்பாக, அண்ணா நகர் காவல் நிலையத்தினர். வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.