பொது மக்களுக்கான – பயனுள்ள தகவல்:
*
30.06.2024 – ஞாயிறு இன்று காலை மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு வாயிலில் பயணச் சீட்டு பெற்றுக் கொண்டு 3ம் எண் நடைமேடைக்கு விரைந்தேன். அதில் இருந்து தான் மதுரை – செங்கோட்டை பயணியர் ரயில் கிளம்பும் என்று தகவல் பலகை வழிகாட்டியது.
ஞாயிறு காலை 6.50க்கே ரயிலில் இருக்கைகள் முழுக்க நிரம்பி விட்டன. ஒத்தக்கட்டை என்பதால் பார்த்தபடியே வேகமாய் நடந்து… ஏழாவது பெட்டியில் ஓர் இடத்தில் சற்று இடைவெளி இருப்பதை உணர்ந்து, 2 வயது சிறுவனை அருகே அமர்த்தியிருந்த நபரிடம் கேட்க, உட்காருங்க என்று சொல்லி இடம் அளித்தார். எதிரில் அவரது 5 வயது பையன், மனைவி அமர்ந்திருந்தார்கள். புன்னகைப் பரிமாறல்கள், சிறுவர்களுடனான விளையாடல்கள் என அமைதியாக நேரம் கடந்தது.
7.15க்கு வண்டி கிளம்பிய போது, என்ன வண்டி லேட்டா கிளம்புது என்றவாறு, ஏன் வண்டி இப்படி நகருது, அந்தப் பக்கம்ல போகணும் என்ற கேள்விக்குறியுடன் பக்கத்து நபர் விழிக்க, பிறகுதான் தெரிந்தது அவர்கள் கோவை செல்லும் ரயிலில் ஏறியிருக்க வேண்டும் என்பது. அவர்கள் பழனிக்குச் செல்ல வேண்டுமாம்!
ஐயா இது செங்கோட்டை போகும் வண்டி என்றேன். பெரிதாக அதிர்ச்சி ஏதும் அடையாமல் சிரித்த படியே, ஆனா 3ம் எண் பிளாட்பார்ம் என்றுதானே போர்டில் போட்டிருந்தது, அதுவும் 7 மணிக்கு கிளம்புவதாக- என்றார்.
மதுரை ரயில் நிலையத்தில் பொறுப்பில் இருந்த நம் நண்பரிடம் உடனே கைபேசியில் விசாரித்தேன்.
“ஆமாம் சில மாதங்களாக இப்படித்தான் நடைமுறை. ஒரே பிளாட்பாரத்தில் இரு ரயில்கள் கிளம்பும். செங்கோட்டை வண்டி 7.15க்கு தெற்கு முனையில் இருந்தும், கோவை வண்டி 7 மணிக்கு வடக்கு முனையில் இருந்தும் கிளம்பும். டிக்கெட் வாங்கிக் கொண்டு வருபவர்களுக்கு வழிகாட்ட வாசலிலேயே இருவரை போட்டிருக்கிறோம். அவர்கள் கோவை வண்டி என்றால் சொல்லி, அந்தப் பக்கம் அனுப்பி விடுவார்கள். அடுத்து நடைமேடையிலும் வழிகாட்டுவார்கள். இது குறித்த அறிவிப்பு முறையாக செய்யப்படுகிறது. அதைக் கேட்டுவிட்டு வண்டி ஏற வேண்டும். காலையில் ட்ராஃபிக் அதிகம். பிளாட்பாரம் கிடைக்காது. அதனால் இந்த நடைமுறை. இப்படி ஒரு வழிமுறை ரயில்வேயில் உள்ளது. ஜங்ஷன் நிலையங்களில் இருந்து இரு வேறு திசைகளில் செல்லும் ரயில்கள் சிறிது நேர இடைவெளியில் செல்ல நேரும் போது இது மாதிரி ஏற்பாடு உள்ளது. திருநெல்வேலியிலும் இப்படி உள்ளது” – என்றார்.
எனக்கும் இது புதிய தகவலாகத்தான் இருந்தது. ரயிலில் சென்று வெகுநாட்கள் ஆகி விட்டதால்…! இன்னும், திருச்சியில் 3 ரயில்கள் கூட ஒரே பிளாட்பார்மில் இருந்து சில நேரம் புறப்பட நேர்வதாகத் தெரியவருகிறது.
இந்தத் தகவலை அருகே அமர்ந்திருந்த நபரிடம் சொல்லி விளக்கி, திருமங்கலம் நிலையத்தில் இறங்கி, அவர் ஏற்கெனவே எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் வைத்திருப்பதால், ஈரோடு செல்லும் ரயிலில் ஏறி திண்டுக்கல்லில் இறங்கி பழநிக்கு பஸ்ஸில் செல்லுமாறு, மாற்று ஏற்பாடுக்கு வழி சொன்னேன். அவர்களும் அப்படியே செய்தார்கள்.
அப்போது அந்த நபரிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்… ஐயா இந்த மாதிரி ரயிலில் ஏறினதும் அருகில் அமர்ந்திருக்கும் நபர்களிடம் ஏதாவது பேச்சுக் கொடுங்கள். நீங்க எங்க ஊர்ல இறங்கறீங்க? என்றோ, ரயில் எப்போ கிளம்பும், அல்லது எத்தனை மணிக்கு இந்த ஊருக்குப் போய்ச் சேரும் என்றோ சாதாரணமாக விசாரித்தாலே, இந்த ரயில் நாம் போகும் ஊருக்குதான் போகுமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம் இல்லயா என்று!
உண்மையில் ரயில் பயணம் மிக இனிமையானது. பல்வேறு முகங்களைப் பார்க்க முடியும். எட்டு பேர் அமரும் ஒரு கேபினில் ஆறு பேராவது புதிய நபர்கள் பேச்சுத் துணைக்கு அல்லது அறிமுகத்துக்கு அமைவார்கள். சிலர் வேறு துறைகளில் இருக்கலாம். பேசிக் கொண்டே வரும் போது அவர்களின் துறைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வாய்ப்பு அமையும்.
எனவே மதுரைக்காரர்கள், கோவை – ஒட்டன்சத்திரம் – பழநி – பொள்ளாச்சி பாதையில் செல்ல, காலை நேரம் அவசர கதியில் டிக்கெட் வாங்கிக் கொண்டு மதுரை ரயில் நிலையத்துக்குள் வேகமாக நுழைந்தால், 3ம் எண் நடைமேடையில் வடக்குப் பக்கம் ஓட வேண்டும். விருதுநகர் – ராஜபாளையம் – தென்காசி- செங்கோட்டைக்கு செல்பவர்கள் அதே நடைமேடையில் தெற்குப் பக்கம் அலுங்காமல் குலுங்காமல் வந்து ஏறலாம்.