ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் காலமானார்

புது தில்லி:

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சயீத் காலமானார். அவருக்கு வயது 79.

காஷ்மீர் முதலமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத் கடுமையான காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக கடந்த 24 ஆம் தேதி தில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த 30ஆம் தேதி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு, ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படுவதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரால் பேச முடிகிறது என்றும் தெரிவித்த மருத்துவர்கள், தொடர்ந்து உடல் நிலையைக் கண்காணித்து வந்தனர். சயீத்தின் உடல்நிலை நேற்று மோசமடைந்தது. இந்நிலையில், முப்தி முகமது சயீத் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

சயீத், கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி பாஜக., வுடனான மக்கள் ஜனநாயகக் கூட்டணியின் உதவியில், ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றார்.
இவர் முன்னதாக, 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை முதல்வராகப் பதவி வகித்தவர்.