நேதாஜி குறித்த ஆவணங்கள் பாஜக.,வின் ஆர்வம் காரணமாக வெளிவருகின்றன: அனுஜ் தார்

புது தில்லி:

பாஜகவின் ஆர்வம் காரணமாகவே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணங்கள் வெளிவருகின்றன என்று மூத்த பத்திரிகையாளரும், ஆய்வாளருமான அனுஜ் தார் தெரிவித்துள்ளார். நேதாஜி குறித்த ஆவணங்களை, அவரது பிறந்த தினமான ஜனவரி 23ஆம் தேதி முதல் வெளியிட மத்திய அரசு முன்னர் அறிவித்திருந்தது.

நேதாஜி மாயமானது குறித்த “இந்தியாஸ் பிக்கஸ்ட் கவர்அப்’ என்ற ஆங்கிலப் புத்தகம் தொடர்பாக தில்லி புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் பேசியபோது,

netaji

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போனது குறித்த ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக, அவரது குடும்பத்தினரை கடந்த அக்.14ல் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் குறித்த ஆவணங்கள் வெளியாகின. ஆகவே பாஜகவின் ஆர்வம் காரணமாகவே நேதாஜி பற்றிய ஆவணங்கள் வெளிவருகின்றன என்றே நான் நினைக்கிறேன். நேதாஜி மாயமானது குறித்த ஆய்வை நான் கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கியபோது, அவர் மாயமான விவகாரம் தொடர்பாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இதன் காரணமாகவே, நேதாஜி மரணம் தொடர்பான அரசு ரகசியங்களைப் பற்றி பேசுவது என்று நாங்கள் முடிவு செய்தோம். கடந்த 2001ஆம் ஆண்டு நேதாஜி பற்றிய ஆவணங்களைக் கோரி மனு கொடுத்தோம். ஆனால், ஆவணங்களை வெளியிடுமாறு அழுத்தம் கொடுப்பதற்கு அந்த மனுக்களால் உதவ முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, 2005ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேலும் மனுக்களைக் கொடுத்து அழுத்தம் கொடுத்தோம்.

அதன் காரணமாக, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், நேதாஜியின் மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஷா நவாஸ் குழு, கோஸ்லா குழு ஆகியவற்றின் அறிக்கைகளைப் பார்வையிடுவதற்கு எங்களுக்கு அனுமதி கிடைத்தது. சுமார் 15,000 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கைகளின் மூலம், கடந்த 1948 முதல் 20 ஆண்டுகளுக்கு நேதாஜியின் குடும்பத்தினரை மத்திய அரசு உளவு பார்த்தது தெரியவந்தது. இதுகுறித்து, 1955ஆம் ஆண்டில் நேதாஜியின் மனைவி அவரது உறவினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தான் கணவரை இழந்த பெண் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். விமான விபத்தில் இருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த நேதாஜி, உத்தரப் பிரதேச மாநிலம், ஃபைசாபாதில் கடந்த 1985 வரை பகவான்ஜி என்ற பெயரில் துறவியாக வாழ்ந்தார் என்று கூறுகின்றனர். வங்காளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள அவரது கையெழுத்துப் பிரதிகள், நேதாஜியின் கையெழுத்துக்களுடன் ஒத்துப் போகின்றன என்றார் அனுஜ் தார்.