வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய ஆய்வாளர் இடமாற்றம்

சென்னை

திருவண்ணாமலை:

குற்றவாளியை கைது செய்யாமல் இருக்கவும் வழக்கில் இருந்து விடுவிக்கவும், வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய திருவண்ணாமலை காவல் ஆய்வாளர் வேலூருக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவரை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று, வழக்கறிஞர் – ஆய்வாளரின் 11 நிமிட செல்போன் உரையாடல் ஒலிப்பதிவு வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது. இதில், குற்றவாளியை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சத்துக்கு அந்த ஆய்வாளர் பேரம் பேசினார். இதற்கு வழக்கறிஞர் மறுத்ததும் பதிவாகி இருந்தது.

ஆய்வாளர்: சென்னையில் இருந்து ஆய்வாளர் பேசுகிறேன்.
வழக்கறிஞர்: நிலுவையில் உள்ள வழக்கில் தொடர்புடைய ஒரு நபரை கைது செய்யவேண்டாம்.
ஆய்வாளர்: இதுதொடர்பாக உங்களுக்கு ஏற்கனவே 2 மாதம் அவகாசம் கொடுத்துவிட்டேன். ஆனாலும் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. நான் இந்த ஸ்டேஷனில் இருக்கும்வரை அந்த நபரை கைது செய்யாமல் இருக்கவேண்டுமானால் ஏற்கனவே பேசியபடி ரூ.5 லட்சத்தை கொண்டு வந்து கொடுக்காவிட்டால், இதுகுறித்து என்னிடம் தொடர்ந்து பேச வேண்டாம்.
வழக்கறிஞர்: என்னிடம் பணம் இல்லை. இன்சூரன்ஸ் பணம் வந்ததும் சொன்னபடி கொடுத்துவிடுகிறேன்
0ஆய்வாளர்: வரும் வியாழக்கிழமைக்குள் சென்னைக்கு வந்து பணத்தை செட்டில் செய்துவிடுங்கள். ரூ.5 லட்சத்தில் 1 லட்சத்தை உங்களுக்கும் மற்றும் 1 லட்சத்தை உன்னுடன் வரும் நபருக்கும் பிரித்து கொடுத்துவிட்டு 3 லட்சத்தை மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன். தேவைப்பட்டால் அந்த நபரையும் கூடவே அழைத்து வாருங்கள் எனக்கு ஆட்சேபணை இல்லை.

இவ்வாறு நடக்கும் உரையாடலின் முடிவில், ‘நாம் பேசுவதை எல்லாம் ரெக்கார்டு செய்கிறாயா?‘ என சந்தேகத்துடன் ஆய்வாளர் கேட்கிறார். அதற்கு வழக்கறிஞர், ‘சத்தியமாக ரெக்கார்டு செய்யவில்லை. அந்த வசதி என் போனில் இல்லை. உங்களை நேரில் பார்க்கும்போது என் போனை உங்களிடம் காட்டுகிறேன்’ என்று கூறுகிறார்.

இத்துடன் இந்த உரையாடல் முடிகிறது. இந்த உரையாடலின்போது, அருவருப்பான, ஆபாச வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் பெயரையும், அவரது அண்ணன் பெயரையும் குற்றவாளிகளின் பெயர்களையும் தனது பேச்சில் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு அவர் பேசிய விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உரையாடலின் அடிப்படையில் திருவண்ணாமலையை சுற்றியுள்ள சம்பவமாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், ‘திருவண்ணாமலை தாலுகா போலீஸ் ஆய்வாளர் பழனி’ என்று தெரியவந்தது.

இதனால், வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில், ஆய்வாளர் பழனியை வேலூருக்கு நேற்று இடமாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியிலில் வைக்க டி.ஐ.ஜி உத்தரவிட்டார். ஆய்வாளர் பழனியிடம் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.