
திருப்புகழ்க் கதைகள் 112
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நிறுக்கும் சூது அன – திருச்செந்தூர்
இராபணன்
வடமொழியில் சிறந்த புலவரான காளிதாசர் போஜ ராஜன் அவையில் இருந்தார். அவர் பெரும்புகழோடு இருப்பது கண்டு பொறாமை கொண்ட அவையோரில் சிலர் எப்போதும் அவருக்கு எதிராக சதி செய்து கொண்டிருப்பர். ஒருமுறை அவர்கள் குகு என்ற ஒரு பெரிய முட்டாளையும், ஒரு நயவஞ்சகனையும் அரசவைக்கு அருகிலுள்ள ஒரு குடிசையில் அமர வைத்து, காளிதாசரின் குருவாக நடிக்கச் சொன்னார்கள். மக்கள் அவனை காளிதாசரின் குருவாகப் பார்க்க ஆரம்பித்தனர்.
இந்தச் செய்தி அரசர் போஜன் வரை சென்றபோது, அவர் காளிதாசனிடம் அவனது குருஜியை பார்க்க விரும்புவதாகக் கூறினார்.
காளிதாசர் இதில் ஏதோ சதி இருக்கிறது எனப் புரிந்து கொண்டார். மாலையில் காளிதாசர் அந்த நயவஞ்சகனை சந்தித்தபோது, அவன், தான் காளிதாசனின் குருவாக நடித்த்தாக ஒப்புக்கோண்டான்.
காளிதாசர் அவனிடம் அவனை குருவாக போஜ மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் செல்வேன், என்றும் அங்கே அவன் மௌன விரதம் இருப்பதாகச் சொல்லி சமாளிக்கலாம் – என்று கூறினார். அடுத்த நாள் காளிதாசர் அவரை போஜ மன்னரின் அவைக்கு அழைத்துச் சென்றார்.
அரண்மனையில் ஒரு இராமாயண ஓவியத்தில் இராவணன் படத்தைப் பார்த்துவிட்டு ஆர்வத்தில் குரு இராபணா என்று கத்திவிட்டார். அனைவரும் காளிதாசனைப் பார்த்தனர். இந்த விஷயத்தை கவனித்துக் கொண்ட காளிதாசர், “அரசே, குரு குகு சொல்வது சரிதான். எல்லோரும் ராவணன் என்று சொல்கிறார்கள், ஆனால் அவர் ராபணன் என்றே அழைக்கப்படவேண்டும். இதற்கு சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார்.
பகரம் கும்பகர்ணஸ்ய பகரம் ச விபீஷண:
குலே ஸ்ரேஷ்டம் குலே ஜ்யேஷ்டம் பகரம் கின் ந வித்யதே !!
அதாவது கும்பகர்ணனின் பெயரில் நடுவில் ‘ப’ உள்ளது. (இந்த ‘ப’ சமஸ்கிருதத்தில் உள்ள நான்காவது ‘ப’ அதாவது ‘bha’ ஆகும்); மேலும் விபீஷணன் பெயரில் ‘ப’ உள்ளது; பின்னர் குலத்தின் சிறந்தவன், மூத்தவன் ராவணன் பெயரில் ‘ப’ ஏன் இருக்கக்கூடாது? அதாவது ‘ராபாணா’ என்பதுதான் சரி.
இராவணன் அல்லது இராபணன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அவன் ஒரு சிவபக்தன். நெற்றியில் திருநீறு அணிந்தவன். சாமகானம் பாடியவன். அகத்தியோரோடு வீணாகானப் போட்டியில் கலந்துகொண்டவன். மூன்று லோகத்தவரையும் போர் செய்து அடக்கியவன். அவன் இராமனோடு முதல் நாள் போர் புரிந்து தோற்றுப் போகிறான். இந்த இடத்தில் சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில்
இன்று போய் நாளை வாராய்
என்று எனை ஒரு மனிதன் புகலுவதோ
எனத் தொடங்கும் பாடல் வரும். அந்தப் பாடலுக்கு மூலம் கம்ப இராமாயணத்தில் காணப்படும் ஒரு பாடலாகும். அப்பாடல் இதோ.
ஆளய்யா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளையாயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா என நல்கினன், நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்
முதல் நாள் யுத்தத்தில் போர்க்களத்தில் இராவணன் நிராயுதபாணியாக நிற்கும் நிலை கண்டு இராமபிரான் அவனை இன்று போய் ஓய்வு எடுத்துக் கொள், போர்க்கு நாளை வா, என்று பெருந்தன்மையோடு அனுப்பி வைக்கும் காட்சி இது. இந்த பாடலில் கண்ட “ஆள் ஐயா” எனும் சொல்லுக்குப் பல பொருள் சொல்லலாம்.
முதலாவது மூவுலகங்களையும் ஆளும் வல்லமை படைத்த ஐயா.
இரண்டாவது வேதங்களை எல்லாம் கற்று சிவபெருமானைத் தன் சாமகானத்தால் வயப்படுத்திய ஐயா என்பது. மூன்றாவது சர்வ வல்லமை படைத்த நீ இன்று வெறுங்கையனாய் நிற்கும் பரிதாபத்திற்குரிய ஐயா என்பது. நான் காவது எல்லா குண நலங்களும் இருந்தும் பிறன் மனை நோக்கி பீடிழந்த ஐயா என்பது.
இப்படிப் பல பொருள் சொல்லலாம். என்ன ஆளய்யா நீ! என்பது குறிப்பு. தன் எதிரிக்கு உயிர் பிச்சை அளித்துப் போருக்கு இன்று போய் நாளை வா என்று சொன்ன வள்ளன்மையை என்னென்பது? அதனால்தான் கம்பன் இங்கு இராமனை “கோசல நாடுடை வள்ளல்” என்றும் அந்த கோசல நாட்டை வாளை மீன்கள் தாவிக்குதிக்கும் வளமிகுந்த கோசல நாடு என்றும் கூறுகிறான்.
அப்போது இராவணனின் நிலை என்ன? நாளைக் காணலாம்.