spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeலைஃப் ஸ்டைல்இசைஞானிக்கு இன்று பிறந்த நாள்!

இசைஞானிக்கு இன்று பிறந்த நாள்!

ilaiyara

இசைஞானி இளையராஜா…#Hbd

பலவிதமான தாய்மொழி கொண்டவர்களை கூட ஒரே புள்ளியில் இணைக்க கூடிய மிகப் பெரிய வரம் வாய்ந்தது இசை.

அதிலும் திரை இசையை ரசிப்பதற்கும் உருவாக்குவதற்கும் எந்தவிதமான எல்லைக் கோடுகளும் கிடையாது.

எந்தப் பாட்டு தன்னை எப்படி கவர்ந்து பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதை எல்லாம் தீர்மானமாக சொல்லிவிடமுடியாது.

என்டி ராமராவ் பானுமதி நடித்த சண்டிராணி படத்தின்,”வான் மீதிலே இன்ப தேன் மாரி பெய்யுதே” என்கிற பாடல்.

ilayaraja
ilayaraja

அப்போதைய மதுரை மாவட்டத்தில் பண்ணைப்புரம் கிராமத்தில் பிறந்த ராசையா என்ற சிறுவனை துரத்தி துரத்தி அடித்தது இந்த பாடல்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு இதே மாதிரியான பாடலை சிறுவன் வளர்ந்து இசையமைப்பாளராகி தனது குருநாதர் எம் எஸ் விஸ்வநாதன் உடன் சேர்ந்து இசை அமைக்கும்போது இதே பாடலை வேண்டி விரும்பி சேர்க்கிறார்.

அதுதான் மெல்லத் திறந்தது கதவு திறந்தது பட மெகா ஹிட் பாடலான வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே பாடல்.

அந்த அளவுக்கு தான் சிறுவனாக இருக்கும்போது ராசையா என்கிற இளையராஜா அந்தகாலத்து திரையிசை ஜாம்பவான்களை அணு அணுவாக ரசித்திருக்கிறார்.

எஸ் வி வெங்கட்ராமன் ஜி ராமநாதன் எஸ்எம் சுப்பையா நாயுடு கே வி மகாதேவன் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றோர் இளையராஜாவின் வனத்தில் அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

உற்று கவனித்தால் இளையராஜா அறிமுகமான காலகட்டத்தில் இசைக்காக ரொம்ப பாடல் வரிகளை சாகடிக்கும் போக்கு அவரிடம் இருந்திருக்காது.

எம் எஸ் வி, ஜி கே வெங்கடேஷ் போன்ற ஜாம்பவான்கள் இடம் பணியாற்றியதால் தோல்வியைப் பற்றிய பயம் என்றைக்குமே அவரிடம் இருந்ததில்லை.

முதல் படமான அன்னக்கிளிக்காக முதன் முதலாய் ரெக்கார்டிங்கிற்கு அமரும்போதே பவர் கட்.. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலமோ இயக்குனர்கள் தேவராஜ்- மோகனோ இதை பெரிய அபசகுனமாக எடுத்துக் கொண்டிருந்தால் என்னவாகியிருக்கும்?

ஆனால் அபசகுனத்தையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு அன்னக்கிளி பாடல்களை படு ஹிட்டாக்கி 1976ல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்தார் இளையராஜா ..

ஜி.ராமநாதன், எஸ்எம் சுப்பையா நாயுடு கேவி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி போன்றோர் கோலேச்சிய இசை உலகில் தனியாக தனக்கென பாணியை கடைபிடித்தால்தான் சாதிக்க முடியும் என்பதை தெளிவாகவே புரிந்துகொண்டார்..

களத்தில் உள்ள எம்எஸ்வியை மீறி முன்னுக்கு வர வேண்டும் என, எழுபதுகளின் இறுதிகளில் போராடிய போது போட்ட பாடல்கள்,. அவற்றில் பறந்த மண்வாசனை, அப்பப்பா அத்தனையும் வியக்கத் தக்கவை..

அதனால்தான், இயக்குநர்கள் தேவராஜ்-மோகன் தொடர்ந்து கொடுத்த வாய்ப்பை அவர் தவறவிட வேயில்லை

ilayaraja

நான் பேசவந்தேன் ( பாலூட்டி வளர்த்த கிளி),
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் ( உறவாடும் நெஞ்சம்), கண்ணன் ஒரு கை குழந்தை (பத்ரகாளி) என மிரட்சியான ஹிட் பாடல்களை கொடுக்க முடிந்தது.

இந்த மூன்று பாடல்களுமே அப்போது விவித பாரதியில் திரும்பத் திரும்ப ஒலித்தவை.

பத்ரகாளி படத்தில் “கேட்டேளே அங்கே அத பார்த்தேளா இங்கே” என்றொரு பாடல். அதாவது ரெக்கார்ட் டான்ஸ் பாடலை விரும்பும் கணவனை திருப்திப்படுத்துவதற்காக வீட்டிற்குள்ளேயே குடும்பப் பெண் ஒருத்தி பாடும் குத்து சாங்ஸ்.

உண்மையிலேயே யாருடா இந்த இளையராஜா யாருடா இந்த இளையராஜா என்று பலரையும் கேட்க வைத்த ஜனரஞ்சகமான பாடல் அது.

பத்திரகாளி மட்டுமல்ல அதற்குப் பின்பு இளையராஜா இசையமைத்த ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு பாடலுக்காக அவர் பெயரை பட்டிதொட்டி எல்லாம் பேச வைக்கும்படி பார்த்துக்கொண்டா

நடிகர் திலகம் சிவாஜிக்காக முதன்முதலாக இசையமைத்த படம் தீபம்.
டிஎம்எஸ் பாடும் அந்தப்புரத்தில் ஒரு மகராணி என்ற டூயட் பாடல். அதேபோல பேசாதே வாய் உள்ள ஊமை நீ என்று நடிகர் திலகத்திற்கு டிஎம்எஸ் பாடும் ஒரு தத்துவ பாடல்.

இரண்டுமே இளையராஜாதான் அடித்தார் என்பதை நம்ப பலரும் மறுத்தது மனம். எம்எஸ்வி பாடல் என்றே அவை கருதப்பட்டன.

தியாகம் படத்தில் இடம்பெற்ற நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி பாடலும் இப்படித்தான் எம்எஸ்வி பாடல் என்றே விவரம் தெரியாதவர்கள் நம்பினார்கள்.

இன்றைக்கும் நன்றாக நினைவிருக்கிறது. ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர் சிவாஜி தலைமுறையை தாண்டி ரஜினி கமலை வைத்து இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது படம்.. இருவிதமான டைப்பில் ஐந்து பாடல்கள்.

ilaiyaraja temple

அதிலும்,” ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..”என்ன ஒரு மாஜிக்..?! ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருந் தாலும். இன்றைக்கும் தினம் இரண்டு தடவையாவது..

எதற்காக சொல்கிறோம் என்றால் எம்எஸ்வி இசை என்பது நமக்கு தாய்ப்பால் மாதிரி. அதனைத் தாண்டி வெளியே வர மிகவும் கஷ்டப்பட்டோம் .

வெளி நாடுகளில் படமாக்கப்பட்ட எம்ஜிஆரின் மாபெரும் வெற்றி காவியமான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு அப்புறம் வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டு இசையால் மிரட்டிய படம் ரஜினியின் பிரியா.

தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் ஸ்டரியோபோனிக் இசை என்ற பெருமை கொண்ட படம். இளையராஜாவை பொருத்தவரை 1978ஆம் ஆண்டு அவருக்கு மிக சிறப்பான ஆண்டு என்றே சொல்லலாம்.

ஒருபக்கம் பாரதிராஜா படங்களில் இசையால் அடித்து மிரட்டிய இளையராஜா இன்னொரு பக்கம் ஸ்ரீதர் ஏசி திருலோகச்சந்தர் எஸ் பி முத்துராமன் போன்ற இயக்குநரின் படங்களில் பட்டையை கிளப்பினார்.

இசைக்கு வந்த புதுசில் சொந்தக்குரலில் இளையராஜா பாடினாலும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு டூயட் பாடும் தைரியம் வந்தது.

ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த லட்சுமி என்று ஒரு படம். அதில் கதாநாயகியின் தங்கை தது காதலனோடு பாடும் ஒரு பாடல். அதுதான் “தென்னை மரத்துல தென்றல் அடிக்குது நந்தவனக் கிளியே..”

எழுபதுகளின் இறுதியில் இந்தப் பாடல் எந்த அளவுக்கு துவம்சம் செய்தது என்பதை அப்போது இளைஞர்களாக இருந்தவர்களைக் கேட்டால் தான் தெரியும்.

இளையராஜா அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு வாய்த்த மிகப்பெரிய அதிர்ஷ்டம், அற்புதமான பாடல் ஆசிரியர்கள் அத்தனை பேருடனும் அவர் இணைந்து பணியாற்றியதுதான்.

கண்ணதாசன், வாலி, முத்துராமலிங்கம் புலமைப்பித்தன் என அருமையான பட்டியல் அது.

பாடலுக்கான இசையை தாண்டி பின்னணி இசையிலும் கலக்கினால் இன்னும் உச்சம் தொடலாம் என்பது 1980களின் துவக்கத்தில் புரிந்துவிட்டது. அதனால்தான் அந்த ஏரியாவிலும் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் சென்சார் போர்டு சர்டிபிகேட்டுக்கு அப்புறம் தவறாமல் இடம் பெற்ற பெயர்கள் தேங்காய் சீனிவாசன் மனோரமா ஆகிய இருவர்.

1980களில் இதே நிலைமைதான் இளையராஜாவுக்கும் ஏற்பட்டது. ஓர் ஆண்டில் வெளியாகும் படங்களில் முக்கால்வாசி படங்களில் இளையராஜா இசைதான் என்றானது.

இளையராஜா என்ற இசை அமைப்பாளர் தொட்டதெல்லாம் பொன்னான காலம் அது.

முதல் மரியாதை, நாயகன், தளபதி போன்ற படங்களை போட்டுவிட்டு பக்கத்து அறையில் படுத்துக்கொண்டு இசையை மட்டும் காதில் கேட்டால் அப்படியொரு அலாதியான சுகம் கிடைக்கும்.. படம் முழுக்க இசையை அருவியாக ஓடவிட்டிருப்பார்..

திரையிசையில் தாம் மட்டுந்தான் என ஒரு நிலை உருவானபோது…80 களின் மத்தியில் தென்றலே என்னைத்தொடு. வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, சிந்து பைரவி ஆண்பாவம்..உதயகீதம். காக்கிச்சட்டை, புன்னகை மன்னன், மௌனராகம் நாயகன் என அவரின் இசை, அப்போது தொடர்ந்து தாக்கிய சுனாமிகளே..

கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ்சில் மோகன் கதாநாயகனாக மைக் பிடித்துக்கொண்டு நின்றால் மட்டும் போதும், இளையராஜாவின் பாடல்களை போட்டு ஹிட்டாக்கி வெள்ளிக்காசுகளை மூட்டை மூட்டையாக கொட்டவைத்த வரலாறெல்லாம் வியப்பானவை.. மினி மைக் முரளியும் இதே வரிசையை சேர்ந்தவர்தான்.

டவுசர், மாடு, குடிசை வீடு காமாச்சி, மீனாச்சி என ஏதாவது இரண்டு மூன்று பெண் கேரக்டர்கள். ஹீரோவாக ராமராஜன்.. அப்புறம் ஒரே தேவை . இவரின் இசை..எல்லாமே பாட்டுக்காக ஓடி வசூலை வாரி வாரி குவித்து கோடம்பாக்கத்தையே வியக்க வைத்ததையெல்லாம் விவரிக்க தனி புத்தகமே போடணும்..

நம்மைப் பொருத்தவரை அவரின் முதல் பத்தாண்டுகள் இன்றளவும் வியப்பாகவே உள்ளது..

ஒரே நாள் உனை நான் ( இளமை ஊஞ்சலாடுகிறது)
நானே நானா யாரோ..(அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
தென்னை மரத்துல தென்றல் அடிக்குது (லட்சுமி)
சின்னப்பொன்னுசேலை (மலையூர் மம்பட்டியான்)
பூமாலையே தோள் ( பகல் நிலவு)
ராஜா கைய வெச்சா (அபூர்வ சகோதர்கள்)
சுந்தரி கண்ணால் ஒரு சேதி ( தளபதி)
ஆனந்த தேன் காற்று..(மணிப்பூர் மாமியார் படம் வரவில்லை)
பூங்காற்று திரும்புமா ( முதல் மரியாதை)

1980 களின் துவக்கத்தில் பூஜை போடப்பட்ட
மணிப்பூர் மாமியார் படத்தில் ஒரு பாடல்..
ரசிகனே என் அருகில் வா என இளையராஜாவே பாடி கலக்கிய பாடல் அது.. அதில் கடைசியாக இப்படி வரும்..

”தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்.
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்.”

79 வது பிறந்த நாள் காணும் இசைஞானி இளையராஜா நீடுடி வாழ வாழ்த்துவோம்…

  • ஏழுமல வெங்கடேசன் (மூத்த பத்திரிகையாளர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe