தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம்.
ஒருபுறம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள். அதிலும் ஊர் ஊராகச் சுற்றிய சிரமம், அலைச்சல். எல்லாம் நிறைவடைந்து, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர், ஏகாந்தமாக, தெய்வீகமான ஒரு ஆன்மீக சக்தி நிலையத்தில், மௌன தியானத்தில் நாற்பத்தைந்து மணி நேரம் இருப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல.
ஏறக்குறைய எல்லா தலைவர்களும் ‘எக்ஸிட் போல்’ பற்றிய ஆர்வமும் ஆவேசமுமாக மதிப்பீடுகளில் ஆழ்ந்திருக்கையில் முதன்மையான தலைவராக இருந்தும் அவற்றில் மனதைச் செலுத்தாமல், தன் கடமையை முடித்து விட்டு, அமைதியான அந்தர்முக தியானத்தில் ஈடுபடுவதற்கு எத்தகைய மனக் கட்டுப்பாடு இருக்க வேண்டும்!
ஊழல் இன்றி, ஆட்சிப் பொறுப்பை அரசியல் அமைப்புக்கு உட்பட்டு, சமமான பார்வையோடு முன்னேற்றத்தையும் நலத் திட்டங்களையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் ஸ்தானத்திற்கு ஏற்ப நடந்து கொள்வது என்பது பகவத்கீதை போதிக்கும் ஆதர்சம். கர்மயோகிக்கு இதைவிடக் கண்கூடான உதாரணம் கூற இயலாது.
தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் உடலிலும் உள்ளத்திலும் நிரப்பி, தியானத்தை பரமத்மாவிடமும், லட்சியத்தை தேசத்தின் மீதும் நிறுத்தி, தன் இருப்பை உய்வித்துக் கொண்டு வரும் தலைமை எந்த நாட்டுக்குக் கிடைக்கும்? பாரத தேசம் பத்தாண்டுகளாக அப்படிப்பட்ட தலைமையைப் பெற்றுள்ளது.
பதவி மோகம் கொண்ட எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து கூச்சலிட்டாலும், பாரத தேசத்தின் முன்னேற்றத்தையும் பொருளாதார மேம்பாட்டையும் சகிக்க இயலாத வெளிநாடுகள் வியூகங்களைக் குவித்தாலும், தன்னலமற்ற நேர்மையோடும் அர்ப்பணிப்போடும் தேசத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதை அறிந்துகொள்ளத் தவறியவர்களாக கணக்கற்ற இளைஞர்கள் இருந்த போதிலும், தன் லட்சியத்திலிருந்தும் தர்மம், செயலூக்கம், நியம நிஷ்டை எதுவும் சிதறாமல் முன்னேறுவது என்பது அசாதாரணமான யோக சக்தி.
மீண்டும் வெற்றி பெறுவோமோ இல்லையோ, மக்களை ஈர்க்கும் திட்டங்கள் என்ன என்ற சிந்தனை எதுவுமின்றி, ஐந்நூறு ஆண்டு காலமாக நடைபெற்று வரும் மோதல்களுக்கு நியாயத்தோடும் சட்டத்துக்கு உட்பட்டும், அமைதியாகத் தீர்ப்பு வந்த பின்னர், அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டைக்காக, ராமன் நடந்த வழிகளில் எல்லாம் அலைந்து ராமர் தொடர்பான தலங்களை தரிசித்து, தரையில் படுத்து, உபவாசம் இருந்து கடின தீட்சையைக் மேற்கொண்டு, திவ்ய பால ராமரின் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து கண்ணாரக் கண்டு களித்த பக்தி யோகத்தைப் பாராட்டாமல் இருக்க இயலுமா!
யுக யுகங்களாக பாரத தேச நாகரிகத்தில் முக்கிய இடம் பிடித்த புண்ணிய நதிகளில் மூழ்கி நீராடி, புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசித்து, தர்மத்தைப் பின்பற்றுபவர்களிடம் உற்சாகத்தை நிரப்பிய திடமான இத்தகு ஆளுமையைக் காணும் சம கால மனிதர்கள் எத்தகு பாக்கியம் செய்தவர்கள்!
பாதுகாப்பு அமைப்பை வலிமையுறச் செய்து, தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் அடக்கி, ஜாதி, மத பேதமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கும்படி செய்து, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் வியக்கும்படி ஏழ்மையை நிர்மூலம் செய்து, ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், ஓய்வின்றி நாள் முழுவதும் தன் அலுவலகத்தில் இருந்து, அதிகாரத்தோடோ, அகங்காரதோடோ இன்றி, புனிதமான பொறுப்பாகத் தலையில் தாங்கி நடக்கும் ஆதர்சம், நம் கண் முன்னால் காணக்கிடைத்திருப்பது மிகவும் அபூர்வம்
உலக நாடுகள் அனைத்தும், ‘தலைவர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்!’ என்று வாயாரப் புகழ்ந்தாலும், உள்நாட்டில் ஊழல்வாதிகளான அதிகாரத் தாகம் கொண்டவர்கள் பொய்ப் பிரசாரம் செய்து இகழ்ந்தாலும், நிலையான சித்தத்தோடு இருப்பது என்பது யோக சாத்திரங்கள் வர்ணிக்கும் உத்தம யோக குணங்கள். இவை எல்லாவற்றையும் இந்தத் தலைவனிடம் தரிசிப்பது அற்புதம் அல்லவா?
பத்தாண்டு ஆட்சிக்குப் பிறகும், சதித் திட்டங்களும் வஞ்சனை வியூகங்களும் கும்பல் கும்பலாக எழுந்தாலும், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது ஒரு அற்புதம். வாழ்க்கை முழுவதும் பல அற்புத சம்பவங்ககளால் நிறைத்து, மக்களின் பேராதரவோடு மூன்றாவது முறையாக பிரதமராகத் தலைமை ஏற்பது இந்த பெருந்தலைவனுக்கு முக்கியம் அல்ல. அது பாரத தேசத்திற்கு முக்கியமான் தேவை.
கர்ம யோகம், பக்தி யோகம் இவற்றோடு பரமாத்மாவின் மீது பார்வையை நிறுத்தி வாழ்க்கை நடத்திய ராஜரிஷிகளின் உள்ளத் தூய்மையை இன்றைய காலகட்டத்திலும் பார்க்கிறோம் என்றால், பரமாத்மாவின் ஏதோ ஒரு தெய்வீகத் திட்டம் இந்த தேசத்தைப் பாதுகாக்கிறது என்பது தெளிவாகிறது
கும்பல் கூடி வம்புக்கிழுக்கும் எதிரிகளின் ஆர்ப்பாட்டம் விரைவில் அடங்கிப் போகும் என்றும், விஸ்வகுருவாக, மகா சக்தியாக, ருஷிகளின் பூமியான பாரத தேசம் விளங்கும் என்றும் கொண்ட நம்பிக்கை வலுவடைகிறது.
எத்தனை மகநீயர்களின் யோகபலம் இந்தத் தலைமைக்குத் துணையாக உள்ளதோ! எத்தனை ருஷிகளின் தவ வலிமையும் தேவதைகளின் ஆசிகளும் இந்தத் தலைவனுக்கு உடன் நின்று உதவுகிறதோ!
விவேகத்தோடும் அறிவுக் கூர்மையோடும் இந்த ஆட்சியை பாரத தேசத்தவர் அனைவரும் நீண்ட நெடுங்காலம் காப்பாற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புவோம்!
(ருஷிபீடம் மாத இதழ், தலையங்கம், ஜூலை, 2024)