முதல் பத்திரிக்கையாளர் தேவரிஷி நாரதரின் பிறந்த நாளான நாரதர் ஜயந்தியை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பஞ்சகுலாவில் ஜூன் 30 ஞாயிறு அன்று ஹரியானா மாநில விஸ்வ சம்வத் கேந்திரா அறக்கட்டளை ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தது.
9வது மாநில அளவிலான பத்திரிகையாளர் விருது வழங்கும் இந்த விழாவில் ஹரியானா முதல்வர் கலந்து கொண்டார். இதில், 12 பிரிவுகளில் 12 பத்திரிகையாளர்களுக்கு சிறந்த பங்களிப்பிற்காக தேவரிஷி நாரதர் விருது வழங்கி, அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு விஸ்வ சம்வத் கேந்திரா தலைவர் மார்கண்டேய அஹுஜா தலைமை வகித்தார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேகர் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, “இதழியல் துறை எண்ணிக்கையில் மிகச் சிறியதாக இருக்கலாம், ஆனால் அது மிக முக்கியமான துறை. ஒரு பத்திரிக்கையாளர் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா போன்ற தொற்றுநோய்களின் போது அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போதும், பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றினர்.
சமுதாயம் மற்றும் தேசத்தின் நலன் கருதி ஊடகவியலாளர்கள் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும். ஊடகவியலாளர்கள் ஜனநாயகத்தின் விழிப்புடன் இருக்கும் காவலர்கள், இதன் காரணமாக ஜனநாயகம் வலுவடைகிறது.
பத்திரிக்கையாளர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, சுயநலம் இல்லாமல் செய்தி தருகிறார்கள், அதன் மூலம்தான் நமது சமூகம் ஒன்றுபடுகிறது.
இந்த மாதம் 25ஆம் தேதி நாடு முழுதும் அவசரநிலையின் இருண்ட அத்தியாயத்தை நினைவு கூர்ந்துள்ளது. இது போன்ற ஒரு அடி தேசத்திற்கு மீண்டும் ஏற்படாத வகையில் மோசமான சம்பவங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.
செய்திகளை சுவாரஸ்யமாக மாற்றும் வகையில் உண்மையை மறைக்கக் கூடாது. செய்திகளை வெளியிடும் போது, சமூகம் மற்றும் தேச நலன்களை மனதில் கொள்ள வேண்டும்” என்று பேசினார் சுனில் அம்பேகர்.