திருப்புகழ்க் கதைகள் பகுதி 360
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இருமல் உரோகம் – திருத்தணிகை
அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி ஐம்பத்தியாறாவது திருப்புகழான “இருமல் உரோகம்” எனத் தொடங்கும் திருப்புகழ் திருத்தணிகை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழ் பரம குருநாதராகிய அருணகிரிப் பெருமான் உலகில் உள்ள மக்களின் மீதுள்ள அளவற்ற கருணையால் பாடியருளியது. இத்திருப்புகழை, அன்பர்கள் நாள்தோறும், ஒருமைப் பட்ட உள்ளத்துடன் உருகிய சிந்தையுடன் ஓதினால், நோய்கள் விலகப் பெறுவார்கள். அன்றியும் நோய் தீண்டப் பெறார்கள். நோயின்றி வாழ்ந்தும் வளம் பெறுதற் பொருட்டு அடிகளார் இத்திருப்புகழை இனிது பாடிக் கொடுத்தருளினார். இனி திருப்புகழைக் காணலாம்.
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி …… விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை …… யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு …… முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் …… அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக …… இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை …… விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் …… மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – போருக்கு வந்த ஒரு கோடி அசுரர் மாளவும், பலப்பல இசைகளைப் பாடி வருகின்ற ஒப்பற்ற காலபைரவர் நடனம் புரியவும் கூரிய ஒளி மிகுந்த வேலாயுதத்தை விடுத்தருளியவரே; கற்பக மரத்தின் நிழலில் வசிக்கின்ற மேக வாகனமாகிய தேவேந்திரன் தந்த தெய்வயானை அம்மையாரின் கணவரே; கடலின் நடுவில் விளங்கும் பூதலத்தில் இடையில் பெருமை பெற்றுத் திகழும் திருத்தணியம்பதியில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே;
இருமல், முயலகன், வாதநோய், வெப்புநோய், மூக்குப்பீசனம், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, புதிது புதிதாக எழுகின்ற கண்டமாலை இவைகளுடன் பெருவயிறு, ஈளை, குலையெரிச்சல், சூலை, பெருநோய். மற்றுமுள்ள நோய்கள் பிறவிதோறும் அடியேனை வந்து பற்றி துன்புறுத்தா வண்ணம் தேவரீருடைய திருவடிகளைத் தந்தருளுவீர் – என்பதாகும்.
மனிதனை உயிருடன் வைத்து வதைக்கின்ற நோய் இருமல். இதில் ஆஸ்துமா, க்ஷயம், புகை இருமல், பாடி இருமல், தூறு இருமல் என்று பலவகை உண்டு. முயலகன் என்பது ஒரு நோய். கை கால் இழுத்துக் கொண்டு துடிக்கச் செய்யும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருத்தலத்தை அடைந்தபோது, அவ்வூர்த் தலைவர் கொல்லி மழவன் என்பவர், தம் குழந்தைக்கு வந்த முயலகன் என்ற நோய் தீரும் படி கோயிலிலே குழந்தையை வைத்து வருந்தினார். அப்போது ஆலய வழிபாட்டிற்கு வந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடியருளினார். அதனால் கொல்லிமழவன் புதல்வியின் முயலகன் என்ற நோய் நீங்கியது. அன்றியும் அக்கோயில் நடேசப் பெருமான் திருவடியின் கீழ் இருந்த முயலகனும் மறைந்தனன்.
அண்டவாதம், பட்சவாதம், பாரிசவாதம் முதலிய வாத நோய்கள் இறைவனைப் பிடிவாதமாக வணங்காத பாவிகட்கு வரும். எரிகுணம் என்பது ஒருவகையான வெப்புநோய்; கை, கால், கண், காது முதலிய இடங்களில் ஒரே எரிச்சலுடன் வரும். நாசி விடம் என்பது நாசியில் வரும் பீனசம் முதலிய நோய்கள்.
அருணகிரிநாதர் காலத்திலேயே நீரிழிவு நோய் இருந்திருக்கிறது. நீரில் சர்க்கரை வரும் பொல்லாத நோய். இது பலரைப் பிடித்து வாட்டி வருத்தும். விடாத தலைவலி என்பது தீராத தலைவலியாகும். தற்காலத்தில் இது ஆங்கிலத்தில் மக்ரேன் என அழைக்கப்படுகிறது. எழு களமாலை என்பது கழுத்தைச் சுற்றி புற்று போல் எழுகின்ற கண்டமாலை. பெரு வயிறு என்பது பானை போல் வயிறு பெருத்து வேதனை செய்யும். இதனை மகோதரம் என்றும் சொல்வர். ஈளை என்பது சுவாசகாசம் ஆகும். கோழை, சளி இவைகள் மிகுந்து வருத்தும். எரிகுலை என்பது குலைஎரிச்சல். சூலை என்பது ஆலகால விடம் உள் புகுந்தது போல் குடலைப் புரட்டிப் புரட்டித் துன்புறுத்தும்.
பெருவலி என்பது பெருநோய்-தொழுநோய் என்கின்ற கொடிய நோய். இது தான் எல்லா நோய்கட்கும் அரசன் அதனால் இதைக் கண்டால் மற்ற நோய்கள் யாவும் தொழும். அதனால் தொழு நோய் எனப்பட்டது.
முருகா, இந்தப் பிறவியில் மட்டுமல்ல, அடியேனைப் பிறவிகள் தோறும் நோய்கள் பற்றி வருந்தா வண்ணம் அருள்புரிவாய் என அருணகிரியார் வேண்டுகிறார்.
முருகன் பவரோக வைத்தியநாதன்; அவருடைய சீடர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனமொழி மெய்களால் வழிபடும் அடியார்கட்குப் பிணியே வராது. நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.