இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டி20 போட்டி –
இங்கிலாந்து ஆறுதல் வெற்றி
K.V. பாலசுப்பிரமணியன்
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி (215/7, டேவிட் மலான் 77, லியம் லிவிங்ஸ்டோன் 42) இந்திய அணியை (198/9, சூர்யகுமார் யாதவ் 117, ஷ்ரேயாஸ் ஐயர் 28) 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள். ஹார்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார், பும்ரா, சாஹல் ஆகியோருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், பிஷ்னோய், ஆவேஷ்கான், உம்ரான் மாலிக் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.
இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள். பார்கின்சனுக்குப் பதிலாக சால்ட், கரனுக்குப் பதிலாக டாப்லி ஆகியோர் விளையாடினர். பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் நான்காவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் எட்டாவது ஓவரில் அவுட்டானார். சால்ட் எட்டு ரன் மட்டுமே எடுத்து 10ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் டேவிட் மலானும் லிவிங்ஸ்டோனும் மிகச் சிறப்பாக ஆடினர். இருபது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 215 ரன் எடுத்திருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஆறு விக்கட்டுகள் எடுத்தபோதும் ரன் அதிகமாகக் கொடுத்திருந்தனர்.
இந்திய அணி ஆடவந்தபோது, 20 ஓவரில் 216 ரன் அடிக்க முடியும் என்றே அனைவரும் நினைத்தனர். ஏனென்றால் ஆட்டக்களம் பேட்டர்களுக்குச் சாதகமாக இருந்தது. பவுண்டரி எல்லைகளும் சிறியதாக இருந்தது.
ஆனால் நடந்தது வேறு. பவர்ப்ளே ஓவர்களான ஆறு ஓவர்கள் முடிவதற்குள் ரிஷப் பந்த், விராட் கோலி, ரோஹித் ஷர்மா மூவரும் ஆட்டமிழந்து, இந்திய அணி ஆறு ஓவர் முடிவில் 34/3 என்ற ரன் கணக்கில் இருந்தது.
சூர்யகுமார் யாதவும் (55 பந்துகள், 117 ரன்) ஷ்ரேயாஸ் ஐயரும் (23 பந்துகள், 28 ரன்) 15 ஓவர்களில் 150 ரன்னுக்குக் கொண்டுவந்தனர். சூர்யகுமார் யாதவ் 18.5 ஓவரில் ஆட்டமிழந்தார். வெற்றிபெற வாய்ப்பிருந்தபோதும் துரதிர்ஷ்டவசமாக தினேஷ் கார்த்திக்கும், ரவீந்தர் ஜதேஜாவும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
எனவே 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 9 விக்கட் இழப்பிற்கு 198 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இனி ஜூலை 12, 14, 17 தேதிகளில் இரு அணிகளுக்கும் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.