திருப்புகழ் கதைகள் பகுதி 362
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அருணகிரியாரின் புகழைப் பாடியவர்கள்
அருணகிரிநாதரின் வரலாற்றை பலர் பாடியிருக்கின்றனர்; எழுதியிருக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர்கள்
- பாம்பன் சுவாமிகள்
- தாயுமான சுவாமிகள்,
- வ.சு. செங்கல்வராய பிள்ளை
- திரு சுப்பிரமணியப்பிள்ளை
- ஸ்ரீதேவி கருமாரி தசர்,
- அந்தகக்கவி வீரராகவ முதலியார்
- வரகவி மார்க்கசகாயத் தேவர்
- திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்
- தொட்டிக்கலை சுப்பிரமணிய முதலியார்
- ஸ்ரீகாந்தப்ப தேசிகர்,
- வடலூர் ஸ்ரீ இராமலிங்க வள்ளலார்
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
- அருட்கவி சாதுராம் சுவாமிகள்
- சாகித்ய அகாதமியின் – இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் “அருணகிரிநாதர்” பற்றிய நூலை எழுதிய முனைவர் வேல் கார்த்திகேயன்.
ஏராளமான இணையதளங்கள் அருணகிரிநாதரின் படைப்புகளை தமிழ் யுனிகோடு எழுத்துருவில் வெளியிட்டிருக்கின்றன. குறிப்பாக https://arunagiritemples.wordpress.com/ என்ற இணையதளம் அருணகிரிநாதர் திருத்தலங்களை எந்த வரிசையில் தரிசனம் செய்தார் என்பதை விவரமாகக் கூறுகிறது. புவியியல் மாணவர்கள் இதனை ஆய்வு செய்து அருணகிரிநாதர் ஏன் இந்த வழியில் பயணம் செய்தார் என ஆராயலாம்.
தமிழாய்வு மாணவர்கள் திருப்புகழ் பாடல்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. இப்பாடல்கள் https://kuganarul.blogspot.com/, https://www.kaumaram.com/ ஆகிய இணையத் தளங்களில் முழுவதுமாகக் கிடைக்கின்றன. பதம் பிரித்து எழுதுதல், பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரைகளுடன் பாடல்கள் கிடைக்கின்றன. https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0400_03.html என்ற இணைய இணைப்பில் வ.சு. செங்கல்வராயப்பிள்ளையின் அருணகிரிநாதர் வரலாறு கிடைக்கிறது. திருப்புகழை தம் வாழ்நாள் முழுவதும் பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை, நூல்கள் பற்றிய தகவல்கள் https://variyarswamigal.com/ என்ற இணையத் தளத்தில் கிடைக்கின்றன. திருமுருக கிருபானந்தவாரியாரின் திருப்புகழ் அமிர்தம் பத்திரிக்கையும் அதில் வெளியான கட்டுரைகளும் திருப்புகழ் பற்றிய ஏறத்தாழ அனைத்துத் தகவல்களையும் தருகின்றன.
அருணகிரிநாதர் 16,000 திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினார் என்றும் ஆனால் அவற்றுள் கிடைத்துள்ளவை சுமார் 1300 பாடல்களே.
அருணகிரி நாதன் தானறைந்த பதினாறாயிர கவிதை
யென்றுலகில் யாரும் உரைபுகலும் தெய்வத் திருப்புகழ்
என்று தணிகையுலா குறிப்பிடுகிறது. மேலும்,
முத்தித்திருவென்னும் முன்பதினா றாயிரம்
பக்தித் திருப்புகழைப் பாடுங்காண்
எனவும் அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பாடல் ஒன்றில்
அருணகிரி நாதர்பதி நாறாயிரமென்
றுரை செய் திருப்புகழை யோதீர்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெவேறு தலங்களுக்குச் சென்று அவர் பாடிய பாடல்கள் பின்வருமாறு –
திருப்பரங்குன்றம் 16 பாடல்கள்
திருச்செந்தூர் 84
திரு ஆவினங்குடி (பழனி) 96
திருவேரகம் (சுவாமிமலை) 38
பழமுதிற்சோலை 16
குன்று தோறாடல் (பொதுவானவை) 7
சிறப்பானவை 198
ஐம்பூதத்தலங்கள் காஞ்சிபுரம் 44
திருவானைக்கா 16
திருவண்ணாமலை 79
திருக்காளத்தி 8
சிதம்பரம் 67
திருப்புகழ் தவிர அருணகிரிநாதர் மேலும் பல நூல்களைப் படைத்துள்ளார். அவையாவன – 1) கந்தர் அந்தாதி, 2) கந்தர் அநுபூதி, 3) கந்தர் அலங்காரம், 4) திருவகுப்பு, 5) சீர்பாத வகுப்பு, 6) தேவந்திர சங்க வகுப்பு, 7) வேல் வகுப்பு, 8) வேளைக்காரன் வகுப்பு, 9) பெருத்த வசன வகுப்பு, 10) பூத வேதாள வகுப்பு, 11) பொருகளத்தலைவை வகுப்பு, 12) செருக்களத் தெலகை வகுப்பு, 13) திருஞானவேழ வகுப்பு, 14) திருக்கையில் வழக்க வகுப்பு, 15) வெடிச்சிக் காவலன் வகுப்பு, 16) வேல் வாங்கு வகுப்பு, 17) புயவகுப்பு, 18) சித்து வகுப்பு, 19) கடைக்காணியல் வகுப்பு, 20) சிவலோக வகுப்பு, 21) வேல், மயில், சேவல் விருத்தம், 22) சரவணச் சிறுவன் ஆகியவையாகும்.