- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
மஹாளய பக்ஷம் 2022 செப்.10 முதல் 25 வரை
மனிதன் இறந்த பிறகு என்னவாகிறான் என்ற கேள்விக்கு இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மதமும் விளக்கம் சொல்ல முயற்சிக்கிறது. இந்து மதம் அல்லது சனாதன மதமும் இதனை விளக்க முற்பட்டிருக்கிறது. சனாதன மதத்தை நம்புபவர்களுக்கு இதில் விளக்கம் கிடைக்கிறது. நம்பாதவர்களுக்கு பதில் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல.
மனிதன் இறந்ததும் பத்து நாள்களுக்குப் பிறகு வசு லோகத்தை அடைகிறான். அதன் பின்னர் அடுத்த தலைமுறை வசு லோகத்திற்கு வரும்போது ருத்ர லோகத்திற்குச் செல்கிறான். அதன் பின்னர் அடுத்த தலைமுறை வரும்போது ஆதித்ய லோகத்திற்குச் செல்கிறான். அஷ்ட வசுக்கள் என மகாபாரதத்தில் வருகிறார்களே அவர்களுக்கும் இந்த வசு லோகத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை; பதினோரு ருத்ரர்களுக்கும் ருத்ர லோகத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை; பன்னிரண்டு ஆதித்யர்களுக்கும் ஆதித்யலோகத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் நமது தந்தை-தாய், பாட்டன்-பாட்டி, பூட்டன்-பூட்டி (சமஸ்கிருதத்தில் பிதா-மாதா, பிதாமஹன்-பிதாமஹி, பிரபிதாமஹன்-பிரபிதாமஹன்) இவர்கள் வசு, ருத்ர, ஆதிய ஸ்வரூபர்களாக இருக்கிறார்கள்.
தந்தை இறந்த தினத்தில் (அது திதி என அழைக்கப்படுகிறது) அவர்களுக்குத் தவசம் அல்லது சிரார்த்தம் அல்லது திதி ஆண்டு தோறும் தரப்படுகிறது. அன்றைய தினத்தில் இரண்டு பிராம்மணர்களை அழைத்து ஹோமம் செய்து, அவர்களுக்கு அன்னமிட்டு வழிபடவேண்டும். இதனை ஒரு ஆத்து வாத்தியார் மூலமாகச் செய்ய வேண்டும். சிரார்தத்திற்கு தக்ஷிணை என்ன கொடுக்க வேண்டும் என வரையறுக்கப்பட வில்லை. பொதுவாக சாஸ்திரிகள் என்ன கேட்கிறார்களோ அதனைக் கொடுக்க வேண்டும். அவர்களும் அளவுக்கு அதிகமாகக் கேட்கக் கூடாது.
சிரார்த்தம் சாப்பிட வருபவர்கள் நம் வீட்டில் நடக்கும் சிரார்த்தத்திற்கு முதல் நாளும் அடுத்த நாளும் வேறு சிரார்த்தத்திற்குப் போகக் கூடாது. சிரார்த்த தினத்தன்றும் சாப்பிட முடியாது. எனவே சாஸ்திரிகளும் அவரது குடும்பமும் மூன்று நாள்களுக்கு சாப்பிடும்படி நாம் அவர்களுக்குத் தக்ஷிணை கொடுக்க வேண்டும். சாஸ்திரிகள் நியதிப் படி நடக்கிறார்களா என்பது அவர்களுடைய பிரச்சனை. நாம் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதனை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
தாய், தந்தை இருவரும் இல்லாத ஒருவருடைய மகன்கள் ஒன்று கூடியோ அல்லது தனித் தனியாகவோ சிரார்தம் செய்யவேண்டும். ஹிந்து அன்-டிவைடட் ஃபேமிலி என்று இருந்தபோது மூத்த மகன் சிரார்த்தம் செய்ய பிறர் அவரோடு இருப்பார்கள். இப்போது அந்த வழக்கம் இல்லாததால் எத்தனை மகன் கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் தனித்தனியாக தங்களது தாய் தந்தையர்களின் தவசத்தைச் செய்ய வேண்டும்.
இந்த சிரார்தங்களைத் தவிர அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய வேண்டும்; கிரகண காலங்களில், மாதப்பிறப்புகளில், பிற முக்கியமான நாள்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இராமேஸ்வரம், காசி, கயா, பிரயாக் போன்றா தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்லும் போது தீர்த்த ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். காசி-கயாவில் சிரார்த்தம் செய்துவிட்டால் அதன் பிறகு சிரார்தமே செய்ய வேண்டாம் எனச் சிலர் நினைக்கிறார்கள்; ஆனால் அப்படியல்ல. காசி-கயாவில் ஸ்ரார்த்தம் செய்தாலும் வருடாவருடம் சிரார்த்தம் செய்ய வேண்டும்.
இவை தவிர மஹாளய பக்ஷத்தில் பித்ரு காரியங்கள் செய்ய வேண்டும். அவை என்ன?
மஹாளய பக்ஷம் : என்ன செய்ய வேண்டும்?
மஹாளய பக்ஷம் ஆவணி மாதம் பெளர்ணமிக்கு மறுநாள் தொடங்கி, புரட்டாசி அமாவாசை வரை உள்ள காலம் ஆகும். இந்தாண்டு 11 செப்டம்பர் 2022 பதினைந்து நாட்கள் மகாளய பட்சம் ஆகும். பட்சம் என்றால் 15 என்று பொருள். இந்த நாட்களில் மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக நம் இல்லத்தில் கூடக்கூடிய நேரம் ஆகும்.
மஹாளேய பக்ஷத்தில் தினமும் தர்ப்பணம் செய்யலாம்; ஏதாவது ஒரு தினத்தில் ஹிரண்ய ரூபமாக ஸ்ரார்த்தம் செய்து அதன் ஒரு அங்கமாக தர்ப்பணம் செய்யலாம்; பார்வண ஸ்ரார்த்தமாகவும் (ஹோமம் செய்து, பிண்டப் பிரதானம் செய்து, பிராம்மண போஜனம் செய்து) செய்யலாம். மற்ற தர்ப்பணங்களைக் காட்டிலும் இந்த மஹாளேய பக்ஷத்தில் செய்யும் தர்ப்பணம் சற்று வித்தியாசமானது. இதிலே
1. பித்ரு வர்க்கம்
தந்தை, பாட்டன், பூட்டன் அதன் பின்னர் தாய், பாட்டி, பூட்டி (ஒவ்வொருவருக்கும் மூன்று முறை அவர்களது கோத்ரம், பெயர் சொல்லி தர்ப்பணம் செய்வது.
2. மாத்ரு வர்க்கம்
அம்மா வழி பாட்டன்-பாட்டி,
பூட்டன்-பூட்டி,
ஓட்டன்-ஓட்டி
(மாதாமஹன், மாதுப்பிதாமஹன், மாதுப்பிரபிதாமஹன் – மாதாமஹி, மாதுப்பிதாமஹி, மாதுப்பிரபிதாமஹி)
3. காருண்ய பித்ருக்கள்
- தந்தையாரின் சகோதரர்கள்
- பெரியப்பாக்கள் (ஜ்யேஷ்ட பிதா)-அவரது மனைவிகள்
- சித்தப்பாக்கள் (கனிஷ்ட பிதா)- அவரது மனைவிகள்
- அத்தைகள் (ஸ்வஸாரம்)-அவரது கணவர்கள்
- சகோதரர்கள் (ஜ்யேஷ்ட பிராதா, கனிஷ்ட ப்ராதா()
- சகோதரிகள் (பஹினி -பாவுகம்)
- மாமனார் (ஸ்வசுர்-ஸ்வசுர பத்னி)
- மாமாக்கள் (மாதுலன்-மாதுல பத்னி)
- மச்சினன்கள் (ஸ்யாலகம்)
4. புத்ரன், புத்ரி
5. நண்பர்கள்
6. குரு, ஆசார்யர்கள்
இவர்கள் அனைவருக்கும் மஹாளேய பக்ஷத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சிரார்த்தம் செய்யும்போது (1) பித்ரு வர்க்கம் -பிதா, பிதாமஹன், பிரபிதாமஹன் (2) மாத்ரு வர்க்கம் – மாதா, பிதாமஹி, பிரபிதாமஹி (3) மாதமஹ வர்க்கம் (4) காருண்ய பித்ரு வர்க்கம் (5) ஸ்ரார்த்த மஹாவிஷ்ணு (6) விஸ்வேதேவர் என ஆறு பிராம்மணர்களை வரிக்க வேண்டும். இந்த ஆறு பிராம்மணர்கள், ஆத்து வாத்தியார் என ஏழு பேருக்கு, நல்ல அரிசி 1 கிலோ, பயத்தம் பருப்பு, 250 கிராம், வெல்லம் 250 கிராம், வாழைக்காய், வெத்தலை பாக்கு, தேங்காய், பழம், தக்ஷிணை வைத்துக் கொடுக்க வேண்டும்.
நான்கு பேர் கொண்ட குடும்பம் சாப்பிட எவ்வளவு தொகை தர வேண்டுமோ அவ்வளவு தக்ஷிணை தர வேண்டுமோ அத்தனை தக்ஷிணை தர வேண்டும். வசதி அதிகம் உள்ளவர்கள் ஹிரண்யமாக ஸ்ரார்த்தம் செய்து, பிராம்மணர்களுக்கு வஸ்த்ரம், சாப்பாடு போடலாம்.
இந்த மஹாளேய பக்ஷத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். மஹாளேய அமாவாசையின்போது தி.நகர் சிவா விஷ்ணு கோவிலுக்கோ, மயிலை கபாலீஸ்வரர் கோயில் குளத்திற்கோ, இராமேஸ்வரத்திற்கோ சென்று பாருங்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் பித்ரு கடன் செய்கின்றனர்.
நம்பிக்கையோடு செய்யுங்கள்; நமக்கு இந்த காரியங்களை செய்து வைக்கும் பிராம்மணர்கள் மரியாதைக்குரியவர்கள்; அவர்களை மரியாதையோடு நடத்துங்கள்.