spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்திருச்சிப் பாட்டியும் திராவிட ஆட்சியும்!

திருச்சிப் பாட்டியும் திராவிட ஆட்சியும்!

- Advertisement -

— ஆர். வி. ஆர்

போன வாரம் திருச்சி அழைத்ததால் சென்னையிலிருந்து ஒரு நாள் அங்கு போய் வந்தேன் – ஒரு உறவினரைப் பார்க்க.

சென்ற நூற்றாண்டு அறுபதுகளின் கடைசியில், எனது ஒன்பதாவது வகுப்பின் பெரிய லீவுக்காக அம்புஜம் பாட்டி வீட்டில் கொட்டமடிக்கத் திருச்சி போயிருந்தேன். அவர் எனது அம்மாவின் அம்மா. அவர் வீட்டில் அப்போது சி. ஏ படிப்பு, காலேஜ், ஸ்கூல் என்று படித்துக் கொண்டிருந்த என் மூன்று சித்திகள் மற்றும் ஒரு மாமா, என்னுடன் தாயக்கட்டை ஆடிய என் பாட்டியின் மாமியார், அடுத்த சந்தில் வசித்த என் பாட்டியின் அக்கா, அவரின் பெண்களான எனது மற்ற சித்திகள், எல்லோரும் என் அன்பு விசிறிகள். பொறுப்பும் தலைமைக் குணங்களும் மிக்க என் பாட்டி, என்னிடம் கருணை கலந்த கறார் முகம் காட்டினார்.

திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் உள்ள பாண்டியன் பிள்ளை சந்தில் இருந்தது என் பாட்டி வீடு. இன்னும் சில சந்துகள் அந்த வீதியில் உண்டு. வீதியின் ஒரு பக்கத்துச் சந்துகளுக்கு அநேகமாக உள்புறத்தில் இணைப்புச் சந்துகள் உண்டு. எல்லா ஊர்களிலும், அதுவும் மையப் பகுதிகளில், அப்படித்தானே இருக்கும்?

நான் மதுரையில் படிக்காமல் டிமிக்கி கொடுக்கிறேன் என்று சில வருடங்களாகவே சரியாகக் கணித்திருந்தார் என் திருச்சிப் பாட்டி. லீவுக்கு வந்த என்னைப் பிடித்துவைத்து, அந்த ஊர்ப் பள்ளியில் பத்தாம் கிளாஸ், எஸ். எஸ். எல். சி, என்று இரண்டு வருடங்கள் தனது தினசரி மேற்பார்வையில் படிக்கவைத்தார் பாட்டி. கணக்கில் புலி, கண்டிப்பில் சிங்கம் என்றிருந்த நடராஜ ஐயர் நிர்வாகம் செய்த உன்னதமான ஈ. ஆர். ஹைஸ்கூல் அது. என்னையே படிப்பில் தேற்றித் தன்னை நிரூபித்த ஸ்கூல் ஆயிற்றே!

ஸ்கூல் படிப்பிற்குப் பின் பலமுறை திருச்சி போயிருக்கிறேன். போன வாரம் சென்றபோது, வடக்கு ஆண்டார் வீதியில் இன்னொரு சந்தில் வசிக்கும் என் ஸ்கூல் சினேகிதன், மற்ற இடங்களில் இருக்கும் சில ஸ்கூல் சினேகிதர்கள் என்று ஒவ்வொருவராகப் பார்த்துவர சில திருச்சிப் பகுதிகளில் அலைந்தேன்.

வடக்கு ஆண்டார் வீதியில் நடந்தபோது சிறுவனானேன். அதில் முதலியார் சந்தின் பெயரை வலது சுவற்றில் பார்த்ததும் உள்ளே சுகித்தது. நேரே செல்லவேண்டிய நான், முதலியார் சந்தின் உள்ளே நுழைந்து போய் இடப்புறம் திரும்பிப் பின் வலப்புறம் சென்று மறுபடியும் இடப்புறம் திரும்பிப் பாட்டி வீட்டுப் பாண்டியன் பிள்ளை சந்தில் கால் வைத்தேன். பாட்டியின் வீடு இப்போது வெளி நபருக்குக் கைமாறி இருந்தது. அந்த வீட்டின் முன் நின்றுவிட்டு, சிறிது ஒடித்து நேராகப் பாண்டியன் பிள்ளை சந்திலேயே நகர்ந்து, திரும்பித் திரும்பி, பந்தடிமால் சந்து வழியாக மீண்டும் வடக்கு ஆண்டார் வீதியில் கலந்தேன். சில அடிகள் முன்னேறி புதுப்படிச் சந்தில் புகுந்து என் சினேகிதனைப் பார்த்தேன். போகிற வழியில் சில பழக்கமான சந்துகளில் வேண்டுமென்றே நான் சுற்றிய சுற்று, சிறு பிராயத்தில் ஜயண்ட் வீலில் சுற்றியது போல் சிலிர்த்தது.

திருச்சியில் நான் தங்கி இருந்த தென்னூர்ப் பகுதியும் சரி, வடக்கு ஆண்டார் வீதியிலும் பிற இடங்களிலும் நான் நடந்த பகுதிகளும் சரி, என் பாட்டி காலத்திலிருந்து மாறாத சில காட்சிகள் கொண்டவை. அவை, சாலை ஓரங்களிலும் சில தெருக்களின் குறுக்கிலும் ஓடும் திறந்தநிலைச் சாக்கடைகள். வீடுகளின் சமையலறை, குளியலறையிலிருந்து வெளிவரும் கழிவு நீர், மற்ற கழிவு நீர் என்று அனைத்தையும் தாங்கி வரும் ஜீவ சாக்கடைகள் அவை.

ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை, அதன் நகராட்சிகளை, ஆளுகின்றன. ஆனாலும் முக்கிய நகரான திருச்சியின் பழைய பிரதான பகுதிகளில் கூடப் பாதாளச் சாக்கடைகளை அமைத்து, அவற்றோடு எல்லா வீடுகளுக்கும் இணைப்பைச் செய்து, அவற்றை முறையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து, திறந்த சாக்கடைகளையும் அடையாளம் தெரியாமல் நிரந்தரமாக மூடவில்லை என்றால் என்ன அர்த்தம்? திராவிடக் கட்சிகளின் ஆட்சி மாமூலாக நடக்கிறது என்று அர்த்தம்.

முப்பது வருடங்களுக்கு மேலாகத் திருச்சியில் பாதாள சாக்கடைத் திட்ட வேலைகள் நடக்கின்றன, நடக்காமலும் இருக்கின்றன. பாதி அல்லது முக்கால்வாசி இடங்களில் தெருவை வெட்டி ஆழத்தில் பாதாள சாக்கடைக் குழாய்கள் அமைக்கப்பட்டு விட்டன. அந்தக் குழிகளையும் மூடி ஆயிற்று. ஆனால் நிறைய வீடுகளிலிருந்து பாதாள சாக்கடைக் குழாய்களுக்கு இன்னும் இணைப்பு ஆகாமல் – குளியலறை மற்றும் சமையலறை, கழிவறை, இவற்றில் எதற்கும் இணைப்பு ஆகாமால் அல்லது கழிவறைக்கு மட்டும் இணைப்பு ஆகி – தெரு ஓரங்களில் உள்ள பழைய திறந்த சாக்கடைகள் இன்றும் உயிரோட்டமாக இருக்கின்றன.

திருச்சியில் பாதாள சாக்கடையை அமைத்த அளவிலும் கூட, அதை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் தலைமையும் நேர்மையும் பொறுப்பும் திராவிடக் கட்சிகளிடம் இல்லை. அதுபோன்ற பண்புகள் அந்த ஊர்ப் பாட்டி ஒருவரிடம் நிரம்பி இருந்தன.

திருச்சியில் நொண்டியடிக்கும் பாதாள சாக்கடைத் திட்டம், அரசியல்வாதிகளையும் மீறிக் காலம் எவர்க்கும் தானாகக் கொண்டு தரும் வளர்ச்சி, அல்லது குன்றிய வளர்ச்சி. அந்த அளவு வளர்ச்சி அந்த நகருக்கு வந்துவிட்டதால் – தமிழகத்தில் அதற்காகக் காத்திருக்கும் மற்ற ஊர்களும் அதுபோல் பயன் பெற்றுவிட்டால் – அதற்கு ஏற்ற செழிப்பையும் கொழிப்பையும் இடைப்பட்ட காலத்தில் எப்படியோ சம்பாதிப்பவர்கள் நிச்சயம் உண்டு. அவர்கள் யார் என்பது, திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்களுக்குப் பளிச்சென்று தெரிய வேண்டும்.

தமிழகத்தில் திறந்தபடி செயல்படவேண்டிய அரசு இயந்திரம், மர்மத்தில் மூடியபடி இயங்குகிறது. போதிய வெளிப்படைத் தன்மை இல்லை. மூடியபடி தரைக்கு அடியில் ஓட வேண்டிய சில ஊர்களின் சாக்கடைகள் சாலையில் திறந்தநிலையில் ஓடுகின்றன. மாநிலத்தில் தேவையான ஆட்சி மாற்றம் வந்தால் தான், இரண்டிலும் நிலைமை தலைகீழாக மாறிச் சரியாகுமோ?

Author: R. Veera Raghavan, Advocate, Chennai
[email protected]
Blog: https://rvr-india.blogspot.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe