spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஅதிகரிக்கும் அபஸ்வரங்கள்!

அதிகரிக்கும் அபஸ்வரங்கள்!

- Advertisement -

சங்கீத கலாநிதி சர்ச்சை: அபஸ்வரம் கூடுகிறது.

— ஆர். வி. ஆர்

சங்கீத கலாநிதி சர்ச்சை இப்படிப் போகிறது. கச்சேரி முடியவில்லை. அபஸ்வரம் கூடுகிறது.

அபஸ்வரத்தை ஆரம்பித்தவர், மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி. கூட்டியவர், அவர் சகோதரர் என். ராம். இருவரும் ‘ஹிந்து’ பத்திரிகை கம்பெனியின் முக்கியப் பங்குதாரர்கள்.

2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப் படும் என்று மியூசிக் அகாடமி சமீபத்தில் அறிவித்தது. விருது அவருக்குப் போவதற்கு ஆட்சேபம் செய்தவர்களில் முதன்மையானவர்கள், ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள். காரணம் என்ன?

கர்நாடக சங்கீதத்தில் கலந்துள்ள ஹிந்துமத இறை உணர்வு மற்றும் ஆன்மிகம், அதைச் சார்ந்த பண்புகள், அதைப் போற்றிய மனிதர்கள், சாதனை செய்த முன்னோடிகள், ஆகியோரை, ஆகியவற்றை டி. எம். கிருஷ்ணா அவமதிப்பு செய்தவர், கர்நாடக இசைக் குடும்பத்தை அவர் தூற்றியவர், கர்நாடக சங்கீதக் கலைஞராக இருப்பதே வெட்கக் கேடானது என்ற எண்ணத்தைப் பரப்ப முயன்றவர், பிராமணர்களைக் களையெடுக்கப் பிரஸ்தாபித்த ஈ. வெ. ராமசாமியை அவர் உயர்த்திப் போற்றியவர், என்பது ரஞ்சனி-காயத்ரி செய்த எதிர்ப்பிற்கு அவர்கள் அளித்த விளக்கம். மற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலரும், இசை ரசிகர்கள் பலரும், அந்த எதிர்ப்பில் சேர்ந்தனர்.

ரஞ்சனி-காயத்ரி தங்கள் எதிர்ப்பைத் தெளிவாக, அழுத்தமாக, ஆனாலும் நாகரிகமாக, வெளிப்படுத்தினார்கள். மறுநாள் பொங்கி எழுந்த மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி, அவர்களுக்குச் சூடாக ஒரு பதில் கடிதத்தை வெளியிட்டார்.

“உங்கள் கடிதம் வசைபாடுவதாக, அவமதிப்பதாக, மான நஷ்டம் செய்வதாக இருக்கிறது, சக கலைஞர் மீது குரூர தொனி காண்பிக்கிறது” என்று தனது பதிலில் அபஸ்வரத்தை ஆரம்பித்தார் என். முரளி. பிறகு உச்சஸ்தாயியைத் தொட்டு, சங்கீத கலாநிதி விருதுக்கு ஒருவரைத் தேர்வு செய்வது மியூசிக் அகாடமியின் “பிரிராகெடிவ்” (prerogative) என்று அவர் மார் தட்டினார்.

Prerogative என்றால் “விசேஷ உரிமை, அதிகாரம் மற்றும் சிறப்புரிமை”, “பிரிட்டிஷ் அரசருக்கு உரித்தான விருப்ப அதிகாரம்” என்று மெரியம் வெப்ஸ்டர் டிக்ஷனரி அர்த்தங்கள் தருகிறது. அதாவது, “கொடுப்பது நாங்கள், கேட்பதற்கு நீங்கள் யார்?” என்று பேச வந்தார் என். முரளி. கடிதத்தின் அடுத்த வரியிலேயே, “இந்த விருது எப்போதும் கவனமான ஆராய்வுக்குப் பின்னர் அளிக்கப் படுகிறது” என்று அவர் சொல்லி இருந்தாலும், ராஜ தொனியில் அவர் தொடங்கி இருக்கவேண்டாம்.

ரஞ்சனி-காயத்ரியின் எதிர்ப்பை மியூசிக் ஆகாடமி ஏற்காமல் இருப்பது வேறு – அதுவும் விமரிசனத்துக்கு உட்பட்டது. ஆனால் தனது கருத்தை, விளக்கத்தை, அகாடமி இன்னும் நாகரிகமாகத் தெரிவித்திருக்க வேண்டும்.

என். முரளியின் பதிலைத் தொடர்ந்து, அவரது சகோதரர் என். ராம் X தளத்தில் ஒரு அறிவிப்பு செய்தார். அது எடுத்த எடுப்பிலேயே திராவிட மாடல் ஸ்டைலில் தொடங்கியது. “கண்மூடித்தனமான ஜாதிய உணர்வுடைய ஒரு கூட்டம் (bigoted and casteist coterie) டி. எம் கிருஷ்ணாவையும் மியூசிக் அகாடமியையும் குறி வைக்கிறது” என்று தொடங்கி, முரளி ஆரம்பித்த அபஸ்வரத்தை ராம் அதிகப் படுத்தினார். தான் குறிப்பிட்ட ஜாதிய உணர்வு எது, இந்த விஷயத்தில் அது ரஞ்சனி-காயத்ரியிடம் எந்த வகையில் காணப்படுகிறது என்று ராம் ஒரு துளியும் விளக்கவில்லை.

டி. எம். கிருஷ்ணா, என். முரளி, என். ராம், மற்றும் ரஞ்சனி-காயத்ரி ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சங்கீத கலாநிதி விருதுக்கு டி. எம். கிருஷ்ணா ஏற்றவரல்ல என்று ரஞ்சனி-காயத்ரி கருத்து சொன்னால், அதில் என்ன ஜாதியப் பார்வை இருக்க முடியும்? என். ராம் அபாண்டமாகச் சொல்ல வருவது இதுதான்: ‘டி. எம். கிருஷ்ணா குப்பத்திற்குச் சென்று அந்த மக்களுக்காகப் பாடியவர், ஈ. வெ. ராமசாமியையும் போற்றியவர். ஆனால் ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் குப்பத்து ஜனங்களிடம் ‘ஜாதிய வெறுப்புணர்வு’ கொண்டு, ஈ. வெ. ரா-வையும் ஏற்காமால், சங்கீத கலாநிதி விருது டி. எம். கிருஷ்ணாவுக்குக் கிடைப்பதை எதிர்க்கிறார்கள்’. என். ராமின் சுத்தமான அரசியல் வகைப் பிதற்றல் இது.

ஒரு மதத்தை, ஒரு ஜாதியை, குறிப்பிட்டு அந்த மதத்தினரை அல்லது ஜாதியினரைக் களையெடுப்பேன் என்று ஒருவர் பிரஸ்தாபிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மதத்திலோ ஜாதியிலோ உள்ள மனிதர்கள் அதை எதிர்க்கத்தான் செய்வார்கள். அப்படி எதிர்த்தால் அவர்கள் மதவாதியா, ஜாதியவாதியா? என்ன சொல்ல வருகிறார் என். ராம்?

ராம் நினைத்திருந்தால் இதற்கு மேலும் ரஞ்சனி-காயத்ரியை அபாண்டமாக இழிவு செய்திருக்கலாம். ஆனால் இதற்கும் கீழாக முடியாது என்ற அளவுக்கு அவர் தரம் தாழ்ந்து போனார்.

ஒரு போக்கிரி உங்கள் முகத்தில் சேற்றை எறிந்துவிட்டு ஓடினால், நீங்கள் கௌரவம் பார்க்கும் ஒரு அமைதியானவர் என்றால், சாதாரணமாக நீங்கள் பொறுமையாகத் துடைத்துக் கொண்டு போகவேண்டும். அந்த நினைப்பில் ரஞ்சனி-காயத்ரியைப் பார்த்துச் சேறு எறிவதுபோல் பேசினார் என். ராம். அந்த இருவர் மட்டுமல்ல, அவர்களைப் போல டி. எம். கிருஷ்ணாவுக்கான விருதை வேறு யார் எதிர்த்தாலும், அவர்களும் “ஜாதிய உணர்வுடைய ஒரு கூட்டம்” என்று அனைத்து எதிர்ப்பாளர்களையும் சகட்டுமேனிக்கு அற்ப சந்தோஷத்தில் பழித்தார் என். ராம்.

ராம் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் ரஞ்சனி-காயத்ரியிடமிருந்து இரண்டு நாட்களில் வந்தது. அவர்கள் முரளியின் கடிதத்திற்கு மறுமொழி சொல்ல வந்து, அதில் ராம் சேறாக வீசிய வார்த்தைகளைக் குறிப்பிட்டு, “ஜாதி சமத்துவத்தை மியூசிக் அகாடமியின் நிர்வாகக் கமிட்டியில் ஆரமியுங்கள். தேவையான தீர்மானத்தைப் போடுங்கள். கொத்தாக சில கமிட்டி உறுப்பினர்கள் ராஜினாமா செய்யுங்கள்.” என்று சொல்லிவிட்டனர்.

வேண்டுமென்றே அரசியல்வாதி மாதிரி பிரச்சனையின் திசையைத் திருப்பியவர், அவரோடு சேர்ந்தவர்கள், இப்போது மேலும் கீழும் பார்ப்பார்கள். என்ன நடந்திருக்கிறது என்றால்: அரசியல் ஸ்டைலில் தன் மீது எறியப்பட்ட சேற்றை வழித்தெடுத்து, அது வந்த திசையில் ரஞ்சனி-காயத்ரி திருப்பி எறிந்து தங்களை ஒரு குயுக்தியான பழியிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஷயம் எங்கோ போகிறது.

கர்நாடக சங்கீதத்தில் ஹிந்து சமய பக்தியும் உணர்வும் மேலோங்கி இருக்கும். ‘ஹிந்து’ சமாச்சாரம் பழமையானது, தொன்மையானது. அதில் சில ஒட்டுண்ணிகள் அவ்வப்போது வரலாம், சேதமும் செய்யலாம். இதனால் பாதிப்படையும் கர்நாடக இசைக் கலைஞர்கள், பொறுமையும் கண்ணியமும் காத்துத் தங்களையும் இசை உலகையும் மீட்பார்கள் என்று நம்புவோம்.

இப்படி நல்லதாகத் தானே நாம் நினைக்க முடியும்? கன்னாபின்னாவென்று நினைக்க, பேச, நாம் ஒன்றும் கிருஷ்ணா, முரளி, ராம் இல்லையே?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
([email protected])
https://rvr-india.blogspot.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe