
திருப்பாவை 17ம் நாள் பாசுரம் – அம்பரமே – தண்ணீரே – பாசுரத்தை மனசில் அசைபோட்டுக் கொண்டிருந்தேன்… அம்பரம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று துணி அல்லது ஆடை, மற்றொன்று வானம் அல்லது ஆகாயம். இந்த இரு பொருள்களும் வரும் வகையில் ஒரே சொல்லாக அம்பரத்தை இந்தப் பாசுரத்தில் ஆண்டாளம்மை பயன்படுத்தியிருப்பதை எண்ணி எண்ணி ரசித்துக்கொண்டிருந்தேன் …
அம்பரமே தண்ணீரே சோறே… அறம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலன் – என்று குடிமக்களுக்கு காப்பானவைகளை வழங்கும் தலைவன் – அதாவது உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை என மூன்று அடிப்படை உரிமைகளை வழங்கும் தலைவன் என்று அவனை உயர்த்திச் சொன்னார்…
உடலுக்குக் காப்பாகும் துணிமணிகள், உயிர்க்குத் தேவையாகும் தண்ணீர், உரமூட்டும் உணவு என உயிர்வாழ அவசியத் தேவையான அனைத்தையும் வேண்டியன வேண்டியபடி தானமாக வழங்கும் வள்ளல் நந்தகோபர் என்பதாக சொல்லுமிடத்து துணிமணிகளை அம்பரமே என்ற சொல்லால் குறிப்பிட்டார் கோதை நாச்சியார்…
அடுத்து இன்னோர் இடத்தில் அம்பரம் என்ற சொல்லை வானம்/ஆகாயம் என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்.. அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமான் – வாமன அவதாரத்தில் அவன் பாதங்கள் மகாபலிச் சக்கரவர்த்தி அளித்த 3 அடி உடைமையை அளக்க… ஓரடியால் மண்ணை அளந்து, இரண்டாம் அடியால் விண்ணையும் அளக்க விரைந்தது… (ஊடு அறுத்து – இடைவெளி இல்லாமல் செய்து – எங்கும் நிறைந்து – என்று பொருள் கொள்வர்)
என்ன அவசரமோ?! அதனால்தான் விருட்டென வானத்தைக் கிழித்துக்கொண்டு வில்லிலிருந்து சீறிப்பாயும் அம்பைப் போல அதிவேகமாய் அவன் பாதங்கள் விண்ணை அளக்க விரைந்தன! இல்லாவிட்டால் கோதை நாச்சியார்வெறுமனே அம்பரம் ஓங்கி உலகளந்த என்ற வார்த்தையால் குறிப்பிட்டிருக்கலாம்… ஆனால் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த என்ற வகையில், வானத்தைக் கிழித்துக் கொண்டு சீறிப் பாய்ந்த பாதங்களெனும்படி, விரைவுச் சொல்லால் குறிப்பிடுகிறார்….
இந்த ஊடு அறுத்து என்ற சொல்லை யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் நம் மூதுரைப் பழம் பாடலில் வரும் சொற்கள் நினைவுக்கு வந்தன…
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே – விற்பிடித்து
நீர் கிழிய எய்த வடு போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்
சான்றோரின் சினம் எத்தகையது என்பதை ஔவைப் பாட்டி இந்தப் பாட்டில் சொல்வது இதைத்தான்…
கற்களை வெட்டிப் பிளந்தால் மீண்டும் அதே பழைய நிலையில் ஒட்ட வைக்க முடியாது. அது போன்றது கயவர்களின் சினமும் அதனால் விளையும் பிளவும்.
ஆனால், பொன்னை வெட்டியோ உருக்கியோ பிளந்தால் எப்படி மீண்டும் அது நல்லதொரு ஆபரணமாக அணிகலனாக அல்லது பொன் கட்டியாகவோ உருமாறுமோ அதுபோன்றது சான்றோரின் சினம். அந்த சினமும் கூட, தண்ணீரில் வேகமாக விர் என்று எய்யப் படும் அம்பானது தண்ணீரைக் கிழித்துக் கொண்டு பாயும். அப்போது இரண்டாகப் பிரியும் தண்ணீர், அம்பு போனபின்னே மீண்டும் ஒன்றாகிவிடுதல் இயல்பு. அதுபோன்றது சான்றோரின் சினத்தால் விளையும் பாதிப்பு.
அவ்வைப் பாட்டி சொன்னது நீரைக் கிழித்து விரைந்த அம்பின் வேகம்…. ஆண்டாள் அம்மை சொன்னது வானத்தைக் கிழித்து விரைந்த வாமனன் பாதத்தின் வேகம்… கிழித்துக் கொண்டு விரைந்தாலும் இரண்டும் பிளவுபடுத்தவில்லை; ஒன்றிணைத்துவிடுகிறது!