November 27, 2021, 8:52 am
More

  பாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு!

  இதனை நீ ஓடி வரும்போது உன்னால் என் உள்ளம் குளிருது என்றும் ஆடித்திரிதல் கண்டால் உன்னை என் ஆவி தழுவுகின்றது என தாய்

  subramania bharati 100 1
  subramania bharati 100 1

  பகுதி 22, கண்ணம்மா – என் குழந்தை – விளக்கம்
  – முனைவர் கு. வை பாலசுப்பிரமணியம்-

  ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே!’ எனக்கு மிகவும் பிடித்த பாரதியாரின் பாடல் இது. என் குழந்தைகளுக்குப் பாடினேன்; என் பேரக் குழந்தைகளுக்கும் பாடுவேன். ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும்? மழலைச் சொல்லாலே நம் துன்பங்கள் தீர்த்திடும்; முல்லைச் சிரிப்பாலே நமது மூர்க்கத்தைத் தவிர்த்திடும்; குழந்தையின் மூலம் நாம் பெறும் இன்பம், ஏடுகள் சொல்லாத இன்பக் கதைகள். இதனையே திருவள்ளுவர் திருக்குறளில் ‘புதல்வரைப் பெறுதல்’ அதிகாரத்தில் குறள் எண் 66இல்,

  குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

  மழலைச்சொல் கேளா தவர்.

  என்று கூறுவார். அதாவது தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையைச் சுவைக்காதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்.

    காலிங்கர் எனும் பெரும் உரையாசிரியர் குழவிப் பருவத்து இயல்பாகிய மழலைச் சொல்லைப் பெரிதும் செவிக்குச் சுவையாகக் கேட்டறியாத புல்லறிவாளர் குழலோசையையும் யாழோசையையும் இனிது என்பார்.

    இசை என்பது செவிக்கு இனிமையாகப் பண்ணப்படுவது. இசையை அமைத்துப் பாடும் கருவிகள் குழல், யாழ் என்பன. அவற்றிலிருந்து எழுப்பப்படும் இசை விலங்குகளையும் வயப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது எனப் பழம்நூல்கள் பாடும். யாழிசை வாசித்து அசுணம் என்னும் பறவையை மெய்மறக்கச் செய்வார்களாம்.

  அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

  குழல்போலும் கொல்லும் படை.

  (திருக்குறள், இன்பத்துப் பால், பொழுதுகண்டிரங்கல், குறள் எண் 1228)

  ஆதாவது – காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.

  கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

  வினைபடு பாலால் கொளல்.

  (திருக்குறள், அறத்துப்பால், கூடாவொழுக்கம், குறள் 279)

  அதாவது – நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

  மேலே சொல்லப்பட்ட குறள்களில்கூட இக்கருவிகள் பேசப்படுகின்றன. எவரையும் இன்புறுத்தவல்ல இவற்றின் இசையை விடத் தாம் பெற்ற குழந்தைகளின் மழலைப் பேச்சு மிகவும் இனிமையானது எனப் பெற்றவர்கள் பேருவகை கொள்வர். மழலைச் சொல் என்றால் பேசும் பக்குவம் அடையாத குழந்தைகளின் மொழியே மழலைச் சொல் எனப்படுவது. இதைக் குதலைச் சொல் என்றும் கூறுவர்.

  ஐய! காமரு நோக்கினை, ‘அத்தத்தா’ என்னும் நின்

  தே மொழி கேட்டல் இனிது; (கலித்தொகை: 80)

  இதன் பொருளாவது – ஐயனே! விருப்பமருவுகின்ற அழகினை உடையையாய் ‘அத்தத்தா’ என்று கூறும் நினது இனிய மொழியைக்கேட்டு மகிழ்ந்திருத்தல் இனிது). என்று சங்கத் தாய் ஒருத்தி தன் குழந்தை ‘அத்தத்தா….’ என்று பிஞ்சு வாயில் எச்சில் ஊறக் கொஞ்சு மொழி பேசுவதைக் கேட்டு மெய்சிலிர்த்தாள். கேட்பதற்குத் தேன் போலும் தித்திக்கும் தீஞ்சுவை வாய்ந்தது குழந்தைகளின் வாயூறும் மழலை மொழி என்று

  நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,

  யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,

  (அகநானூறு: மருதம்: 16)

  நாவாற் பயின்று பேசப்படாத கேட்டார்க்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய குதலைச் சொற்களையும் உடைய, கண்டார் அனைவரும் விரும்பும் பொற்றொடி யணிந்த புதல்வனை என அகப்பாடல் கூறும்,

       தெய்வத்திற்கு இணையாக, அதற்கும் மேலான அன்பை நம் மேல் பொழியும் குழந்தை. சின்ன வயதிலிருந்தே எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். எனது திருமணத்திற்கு முன்பே என் அக்காவின் மகனை கொஞ்சி சீராட்டி, பாராட்டி, மையிட்டு, பொட்டிட்டு, விதவிதமாக அழகு செய்து பார்ப்பதில் அலாதி ஆசை எனக்கு.

       பாரதியார் தன்னுடைய பாடலில் தனக்குப் பிறந்த பெண்குழந்தைய ‘சின்னஞ் சிறு கிளியே, – கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே’ என அழைத்து, “மலடி” என்ற அவச்சொல் வராமல் என் துன்பத்தைத் தீர்த்த என் மளே எனக்கு வாழ்வுதர வந்தவளே எனக்கூறுகிறார். கனிச்சாறு பொன்ற இனிய என் மகளே, தங்கத்தால் வரையப்பட்ட ஓவியமே, (தஞ்சாவூர் ஓவியங்களை மனதில் நினைத்து எழுதியிருப்பார் போலும். நான் அள்ளி அணைப்பதற்காவே என் முன்னர் ஆடிவருகின்ற தேனைப் போல இனியவளே.  

  தன்னுடைய பெண் குழந்தையின் ஆட்டம் பாட்டத்திலும் தாய் மகிழ்ச்சியடைவாள். இதனை நீ ஓடி வரும்போது உன்னால் என் உள்ளம் குளிருது என்றும் ஆடித்திரிதல் கண்டால் உன்னை என் ஆவி தழுவுகின்றது என தாய் பாடுகிறாள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,108FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,736FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-