
ஓர் இதழில் இருந்து காசி தமிழகம் தொடர்பில் மலர் தயாராவதாகச் சொல்லி, கட்டுரை ஒன்று கேட்டார்கள். நான் தென்காசி – சிவகாசி – காசி தொடர்பில் ஒரு கட்டுரை அனுப்பி வைத்தேன்.
***
முன்னதாக, இந்த வருட கலைமகள் தீபாவளி மலரில் செங்கோட்டை கலங்காதகண்டி ராஜா குறித்த ஒரு சரித்திரச் சிறுகதை எழுதியிருந்தேன். அந்த கலங்காதகண்டி ராஜா தன் மூத்த மகளை தென்காசிப் பாண்டியனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்தப் பாண்டியன், தனது ஊருக்கு செங்கோட்டையின் சுவை மிகுந்த ஓடைத்தண்ணீரை கால்வாய் வெட்டி அனுப்பி வைக்குமாறு கோரினான். அந்தக் கோரிக்கையை ஏற்று, மகளைக் கட்டிக் கொடுத்த இடத்துக்கு ஓடைத்தண்ணீரை அனுப்ப அணை கட்டி, கால்வாய் அமைத்தான் கலங்காதகண்டி ராஜா.
இந்தச் சரித்திரக் கதையில் வரும் பாண்டியன் யாரென அனுமானிக்க, காலக் கணக்கீடுகளை ஆராய, தென்காசி பாண்டியர் வரலாறை மீண்டும் ஒரு முறை ஊன்றிப் படித்தேன். கலங்காதகண்டி ராஜா, தென்காசிப் பாண்டிய மன்னன், ஆற்காடு நவாப் என இதில் வரும் நபர்களின் காலத்தை ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டு, இந்தச் சரித்திரக் கதையின் காலத்தைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. காரணம், இது செவிவழிக் கதை.
அப்போதுதான், தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலை அமைத்த மன்னன் பராக்கிரம பாண்டியனைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிற்காலப் பாண்டியர் வரலாறில், தென்காசிப் பாண்டியரில் புகழ் பெற்ற முதல் மன்னனாய் முதல்வனாய்த் திகழ்ந்தவன் பராக்கிரம பாண்டியன். அவன் செண்பகவனமாய்த் திகழ்ந்த காடைத் திருத்தி நாடாக்கி, பதவியும் ஏற்றான்.

அவன் பதவி ஏற்ற ஆண்டு 1422 … இன்றில் இருந்து சரியாக 600 ஆண்டுகளுக்கு முன்னர்..! அதாவது பராக்கிரம பாண்டியன் ஆட்சிப் பொறுப்பேற்ற 600 ஆண்டு… இதை தென்காசிப் பெருமக்கள் கொண்டாட வேண்டாமோ என்ற எண்ணம் மனத்தில் தோன்றியது.
தென்காசி எனும் பேர், அவன் அதன் பின்னர் இங்கே காசி விஸ்வநாதருக்கு கோயில் அமைத்து தட்சிணகாசி எனும் பேர் கொடுத்து, அதன் பின் வந்தது.
ஆக… ஆக… பராக்கிரம பாண்டியனின் 600வது ஆட்சி ஆண்டினை எப்படிக் கொண்டாடுவது?! என்ன செய்யலாம்?! எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது..