
மயிலாடுதுறைள் மயிலாடுதுறை மாயூரநாதர் வடக்கு வீதியில் மகப்பேறு மருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் திரும்ப ஒப்படைக்க மயிலாடுதுறை நகராட்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியது:
மயிலாடுதுறை மாயூரநாதர் வடக்கு வீதியில் சியாமளா தேவி கோயில் அருகே தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலம் கடந்த 1951ல் தருமபுர ஆதீனத்தால் இலவச மருத்துவமனை நடத்துவதற்காக மயிலாடுதுறை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த இடத்தில் மயிலாடுதுறை நகராட்சியும் ஸலஸ சண்முக தேசிக சுவாமிகள் இலவச மகப்பேறு மருத்துவமனை என்ற பெயரில் நடத்தி வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை நகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கு புதிய கட்டடத்தை மயிலாடுதுறை கூறைநாடு வண்டிப்பேட்டை அருகில் அமைத்து மகப்பேறு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டது. அதுமுதல் பழைய மகப்பேறு மருத்துவமனை கட்டடம் எந்தவித செயல்பாடும் இல்லாமல் சிதலமடைந்து, சமூக விரோதிகளின் கூடாரம் ஆகிவிட்டது. மேலும் நகராட்சி அந்த இடத்தில் தினமும் குப்பைகளை தேக்கி வைத்து வருகிறது.
மருத்துவமனைக்காக அந்த இடத்தை மயிலாடுதுறை நகராட்சி பெற்றுவிட்டு தற்போது அந்த இடத்தில் மருத்துவமனை நடத்தவில்லை. மருத்துவமனை நடத்த தான் அப்போதைய குருமகாசந்நிதானம் அந்த இடத்தை நகராட்சிக்கு இலவசமாக வழங்கினார். தற்போது மருத்துவமனை நடை பெறாத காரணத்தினால் மேற்படி இடத்தை மயிலாடுதுறை நகராட்சி உடனடியாக தருமபுர ஆதீனத்திடம் ஒப்படைக்க கோரப்படுகிறது.
ஒரு மாத காலத்திற்குள் மயிலாடுதுறை நகராட்சி மேற்படி இடத்தை தருமபுர ஆதீனத்திடம் ஒப்படைக்காவிட்டால் பொதுநல வழக்கு தொடரப்பட்டு அந்த இடம் நீதிமன்றம் மூலம் தருமபுர ஆதீனத்திடம் ஒப்படைக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பல வருடங்களாக அங்கே மருத்துவமனை செயல்பட்டு வந்து ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. தற்போது நகராட்சி அந்த இடத்தில் மருத்துவமனையை நடத்தவில்லை. இந்தப் பகுதி மக்களுக்கு மருத்துவமனை அங்கு செயல்பட்டால் மிகுந்த பலனளிக்கும்.
ஆகையினால் தருமபுர ஆதீனத்தின் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மேற்படி இடத்தை நகராட்சி இடமிருந்து திரும்பப் பெற்று அந்த இடத்தில் தருமபுர ஆதீனத்தின் மூலம் ஒரு இலவச மருத்துவ சாலை அமைத்து ஏழைகளுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்றும் வருகிற ஜூன் 11,12 தேதிகளில் நடைபெறவுற்ள தருமபுரம் ஆதீன குரு முதல்வர் அருள்திரு குருஞானசம்பந்தர் குரு பூஜை விழாவில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் குருஞானசம்பந்தர் பெயரில் மருத்துவமனை தொடங்கப்படும் என்ற மகிழ்வான செய்தியை வெளியிட வேண்டும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.