- பெண்களிடம் செல்போன் எண் வாங்கி அத்துமீறல்..
- காவல் ஆய்வாளருக்கு கட்டாய பணி ஓய்வு..!
- டிஐஜி அதிரடி நடவடிக்கை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கட்டாயப் பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்க காவல் நிலையம் வரும் பெண்களின் செல்போன் எண்களை வாங்கிக்கொண்டு, பின்னர் அவர்களிடம் வக்கிரமாக பேசியுள்ள காவல் ஆய்வாளர், புகார்களின் பேரில் விசாரிக்கப் பட்டு, கட்டாயப் பணி ஓய்வுக்கு உள்ளாகியிருக்கிறார்.
திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன் இந்தக் காரணத்துக்காக, கட்டாய பணி ஓய்வு அளிக்கப் பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
திருச்சி பொன்மலை, பெரம்பலூர் டவுன் மற்றும் திருச்சி சிறுகனூர் ஆகிய இடங்களில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் மணிவண்ணன். இவர், தன்னிடம் புகார் அளிக்கவரும் பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் விசாரணை என்ற பெயரில் வரம்பு மீறிப் பேசுவதாக புகார்கள் வந்தன.
மணிவண்ணனின் ஆபாசப் பேச்சுக்கு ஒத்துழைக்காத பெண்களுக்கு தொல்லை கொடுப்பதோடு, புகாருக்குள்ளான நபர்களுக்கு சாதகமாக வழக்கை முடித்துக் கொடுப்பார் என புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, மணிவண்ணன் மீது பெண் போலீசாரிடம் வக்கிரமாக பேசுவது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் உயரதிகாரிகளிடம் கூறப்பட்டுள்ளன.
அண்மையில் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற பெண் ஒருவரின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு இரவு நேரத்தில் வக்கிரமாகப் பேசி தொல்லை கொடுத்துள்ளார். மேலும், புகார் கூறப்பட்டிருந்த நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார் என்று, பாதிக்கப்பட்ட பெண் அப்போதைய திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனிடம் நேரடியாக புகார் அளித்தார்.
இதை அடுத்து, மணிவண்ணன் மீது தெரிவிக்கப் பட்ட புகார்கள் குறித்து, டிஐஜி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், மணிவண்ணன் இது போல் பல பெண்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டது தெரியவந்தது. எனவே, கடந்த ஜூன் 29 ஆம் தேதி இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு அளித்து அவரை காவல் பணியில் இருந்து விடுவித்து அனுப்புமாறு, டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 30ஆம் தேதி டிஐஜி பாலகிருஷ்ணன் பணி மாற்றலாகி சென்றார். இதனால், தாம் கட்டாய ஓய்வு உத்தரவில் இருந்து தப்பிவிடலாம் என்று நினைத்திருந்த மணிவண்ணன், சிறுகனூர் காவல் நிலைய பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கட்டாயப் பணி ஓய்வு உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஓய்வு பெற இன்னும் 6 ஆண்டுகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.