நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் காதலியை காணச் சென்ற காதலன்! தவறி கிணற்றில் விழுந்த பரிதாபம்!

சற்றுமுன் தமிழகம்
well

சென்னை அம்பத்தூர் பகுதியில் நள்ளிரவில் காதலியை பார்க்க சுவர் ஏறி குதித்து சென்ற காதலன் 75 அடி ஆழமுள்ள பாழும் கிணற்றில் விழுந்து சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

சென்னை அம்பத்தூர் ஜிலான் என்னும் 22 வயது இளைஞர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் கடைகள் திறக்கப்படாததால் வேலையில்லாத நாட்களை வீட்டில் கழித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது கடைக்கு வரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு தன்னுடைய நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார் ஜிலான். அப்பொழுது திடீரென காதலியின் வீட்டருகே வந்தபோது அவருக்கு காதலியின் ஞாபகம் வந்துள்ளது. இதனால் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சிசெய்தபோது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து திருடன் என நினைத்து கூச்சலிட்டுள்ளனர்.

அதனால் பயந்துபோன ஜிலான் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓட நினைத்து, இருட்டில் கிணறு இருப்பது தெரியாமல், 75 அடி ஆழமுள்ள பராமரிக்கப்படாத கிணற்றில் விழுந்து வசமாக சிக்கிக்கொண்டார். கிணற்றில் தண்ணீர் ஏதும் இல்லாமல் வறண்டு போயிருந்ததால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

கிணற்றில் இருந்து தப்பிப்பதற்காக சத்தம்போட்டு உதவி கேட்டுள்ளார். காதலனின் கூச்சலை கேட்ட காதலி மற்றும் அவரின் பெற்றோர் வந்து பார்க்கும்போது ஜிலான் பராமரிப்பு இல்லாத பாழுங் கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஜில்லானை கிணற்றில் இருந்து மீட்டனர்.

உடலில் அதிகமான உள்காயங்களுடன் மீட்கப்பட்ட ஜிலான் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நள்ளிரவில் காதலியைப் பார்ப்பதற்காக வந்த இளைஞர் கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்ட சம்பவம் அம்பத்தூர் வெங்கடபுரம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.