ஈரோடு: மாடு மேய்க்கச் சென்ற விவசாயியை சிறுத்தைப் புலி ஒன்று தாக்கியது. அவர் துணிச்சலுடன் போராடி உயிர் தப்பினார். சத்தியமங்கலம் வனப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சின்னகுட்டியப்பன். 38 வயதான இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக அந்த மாடுகளை தோட்டத்தை ஒட்டியுள்ள வனப் பகுதிக்கு ஓட்டிச் செல்வது அவரது வழக்கம். அன்றும் அப்படித்தான், சின்னக்குட்டியப்பன் மாடுகளை மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அப்போது புதர் மறைவில் பதுங்கியிருந்த சிறுத்தைப் புலி ஒன்று, சின்னக்குட்டியப்பன் மீது திடீரெனப் பாய்ந்து தாக்கியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சின்னக்குட்டியப்பனை சிறுத்தைப்புலி தாக்கத் தொடங்கியது. உடனே அவர், தன்னுடைய கையில் வைத்திருந்த அரிவாளால் சிறுத்தைப் புலியின் உடலில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் சிறுத்தைப்புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்துள்ளது. சிறுத்தைப்புலி தாக்கியதில் சின்னக்குட்டியப்பனுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், அவ்வழியாக வந்த சிலர், சின்னக் குட்டியப்பனைப் பார்த்ததும் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொலை வெறியுடன் பாந்து வந்த சிறுத்தையை துணிச்சலுடன் திருப்பித் தாக்கி, போராடி உயிர் மீண்ட சின்னக்குட்டியப்பனைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியப் பட்டனர்.
பாய்ந்து வந்து தாக்கிய சிறுத்தை: போராடி உயிர் பிழைத்த விவசாயி!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari