புது தில்லி: ஆயுள் சான்றிதழைக் கொடுக்க ஓய்வூதியதாரர்கள் நேரில் வர வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தக் கூடாது என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாதம் தோறும் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆண்டு தோறும் தங்கள் ஆயுள் சான்றிதழை, அவர்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழை எம்.பி., எம்.எல்.ஏ., மாஜிஸ்திரேட்டு, கெஸட் அதிகாரி, சப்–இன்ஸ்பெக்டர் தரத்துக்கு மேல் உள்ள போலீஸ் அதிகாரி, வட்டார வளர்ச்சி அதிகாரி, தாசில்தார், கருவூல அதிகாரி என இவர்களில் யாராவது ஒருவர் சரிபார்த்து, கையெழுத்து போட்டிருந்தால், அந்த சான்றிதழ்களை கொடுக்க ஓய்வூதியதாரர்கள் நேரில் வங்கிக்கு வர வேண்டாம். வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது சான்றிதழ்களில் மாஜிஸ்திரேட்டு, நோட்டரி அல்லது தூதரக அதிகாரி ஒருவர் கையெழுத்து போட்டிருந்தால், அவரும் வங்கிக்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லை. அவர்களின் பிரதிநிதி ஒருவரே இந்த சான்றிதழை வங்கியில் செலுத்தலாம். ஆனால் ஓய்வூதியதாரர்கள், தங்கள் தள்ளாத வயதிலும் ஆயுள் சான்றிதழ்களை ஓய்வூதிய ஆணையுடன் சமர்ப்பிக்க, வங்கிக்கு நேரில் வர வேண்டும் என சமீபகாலமாக வங்கிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும், இதனால் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஓய்வூதியதாரர்களின் பல்வேறு சங்க பிரதிநிதிகள், இந்த பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றன. இதை பரிசீலித்த மத்திய அரசு, ‘ஓய்வூதியதாரர்கள் விவகாரத்தில் தற்போதைய சட்டங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழில் சம்பந்தப்பட்ட அதிகாரி முறையாக கையெழுத்து போட்டிருந்தால், அதை கொடுக்க நேரில் வரவேண்டும் என ஓய்வூதியதாரர்களையோ, அவர்களது உறவினர்களையோ தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் சான்றிதழ் கொடுக்க ஓய்வூதியதாரர்களை நேரில் வர வற்புறுத்தக் கூடாது: வங்கிகளுக்கு உத்தரவு
Popular Categories


