
கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று இந்து முன்னணி அமைப்பினர் ஆளுநரிடம் நேரில் சென்று மனு அளித்தனர்.
தமிழக அரசின் தலைவர் ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவியை இந்து முன்னணி மாநிலத் தலைவர் தலைமையில் ஒரு குழு நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில், கடந்த சட்டப்பேரவை நடைபெற்ற நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் 17.10.25 அன்று எண்:40/2025 என்ற ஒரு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில் கோவிலுக்குச் சொந்தமான அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் அதன் நிதியில் கல்வி நிறுவனங்கள், இசைப்பள்ளிகள், ஓதுவார் பள்ளிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா தமிழகத்தில் உள்ள கோவில்களை ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற உள்நோக்கம் கொண்டது என்றும், தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகின்ற கல்வி நிறுவனங்கள் எவையும் முறையாக பராமரிப்பு இன்றியும், நிர்வாகச் சீர்கேடுகளை உடையதாகவும் உள்ளது. இந்த மசோதா காரணமாக மேலும் நிலங்கள் கொள்ளை போவதற்கும், கோவில் நிதியில் ஊழல் நடைபெறவும் வாய்ப்புள்ளது என்று ஐயம் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம், கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து பல தீர்ப்புகளும், வழிகாட்டுதல் நடைமுறைகளையும் கூறியுள்ளது. அவற்றையும் மீறி இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு எண்ணுவது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே மேதகு தமிழக அரசின் தலைவர் ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று அந்த ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரங்கள் குறித்து தமிழக தலைவர் ஆளுநர் அவர்களிடம் விசாரித்து அறிந்தார். திருப்பரங்குன்றத்தில் நீதித்துறையை தமிழக அரசு மதிக்கவில்லை. ஜனநாயகத்தின் ஒரு தூணான நீதித்துறையை இழிவுபடுத்தும் நோக்கில் அரசு செயல்படுவது அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை சீர்குலைப்பதாகும்.
இதனால் சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும். இது மிகுந்த கவலையளிப்பதாகும் என்று ஆளுநரிடம் இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
இந்தக் குழுவில் இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், மாநில செயலாளர் சேவுகன் ஆகியோர் இருந்தனர்.



