
இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தீபம் ஏற்ற வேண்டிய அறநிலையத்துறை
நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அலட்சியம் செய்தது. தீபம் ஏற்றுவதை பார்க்க வந்த பக்தர்களை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவை பிறப்பித்தது.
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து 7. 12. 2025 ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி மாநிலம் தழுவிய அறவழிப் போராட்டத்தை அறிவித்திருந்தது.
தமிழகம் முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல இடங்களில் காவல்துறையினர் தங்களது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி
இந்து முன்னணி பொறுப்பாளர்களை தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
படித்த சில காவல்துறை அதிகாரிகளே இந்து முன்னணி பொறுப்பாளர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி இருப்பது காவல்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பொய்க்க வைத்திருக்கிறது.
தென்காசி, அரியலூர், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் இரவே இந்து முன்னணி பொறுப்பாளர்களை காவல்துறை வீட்டு காவலில் வைத்தது. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
கோவை செல்வபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒரு மண்டபத்தில் காவலில் வைத்தனர். அந்தப் பகுதியின் உதவி ஆணையாளர் திரு. மகேஸ்வரன் அவர்கள் இந்து முன்னணி பொறுப்பாளர்களை கடுமையாக தாக்கியுள்ளார். சதீஷ் என்ற இளைஞரை காலால் உதைத்தும் கன்னத்தில் அறைந்து ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
சதீஷ் என்ற இந்து முன்னணி பொறுப்பாளருக்கு அவர் தாக்கியதில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உதவி ஆணையாளர் அடித்ததை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் வீடியோ எடுத்துள்ளனர். ஒவ்வொருவருடைய அலைபேசியையும் பிடுங்கி அந்த வீடியோவை அழித்துள்ளார். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யலாமே தவிர அடிக்கும் அதிகாரத்தை அவருக்கு யார் தந்தது என்ற கேள்வி எழுகிறது. காவல்துறை உதவி ஆணையாளராக செயல்படாமல் திமுகவின் மாவட்ட செயலாளராக செயல்பட்டு இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அருணாச்சலம் என்கின்ற ராமர் அவர்களை ASP அருண் அவர்கள் மிக பலம் கொண்டு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்பு வீடு விரும்பினார். அறவழி போராட்டம் நடத்தியவர்களை ரவுடிகள் போல் நடத்திய விதம் அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை மாநகரில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றும் சுப்ரமணியம் அவர்கள் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ரித்தீஷ் என்பவரை மூக்கில் குத்தியதோடு மட்டுமல்லாமல் மிகத் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.
மதுரை புறநகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய கிசான் சங்க தேசிய துணைத் தலைவர் திரு. பெருமாள் அவர்களின்
சட்டையை கிழித்துள்ளனர். முதியவர் என்றும் பாராமல் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்.
வேலியே பயிரை மேய்வது போல சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறையினரே
நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என கூறிய இந்து முன்னணியிர் நிதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதற்கெல்லாம் மேலாக புதுக்கோட்டையில் காவல்துறை அதிகாரி சுகுமார் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களை பார்த்து தீபம் ஏற்ற வக்கு இல்லை ஆர்ப்பாட்டம் பண்ண வந்து விட்டீர்களா? என்று தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் மரக்கடை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரியமங்கலம் மண்டல் பொறுப்பாளர் தமிழ்வாணன் அவர்களை காவல் உதவி ஆய்வாளர் தனபால் என்பவர் பலமாக தாக்கி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
கமுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல் துறையினரால் கைது செய்து மண்டபத்திற்கு அழைத்து செல்லும் போது கமுதி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் காவல்துறை உதவியோடு இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளை மிரட்டும் வகையில் மற்றும் தகாத வார்த்தைகளால் பேசியும் இந்து மக்களை இழிவு படுத்தியும் மிரட்டும் வகையில் ஈடுபட்டார். இதனையும் காவல்துறை பார்த்துவிட்டு வாய்மூடி மௌனம் காத்திருக்கிறது.
இப்படியாக தமிழகத்தில் பல பகுதிகளில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் அத்துமீறி நடந்துள்ளனர். டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்று முஸ்லிம் அமைப்புகள் பல இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தினர். பாபர் மசூதி பிரச்சனை என்பது முடிந்து போன ஒன்று. அதற்கு தமிழக அரசும் காவல்துறையும் அனுமதி வழங்கி பாதுகாப்பும் வழங்கி இருக்கிறது.
ஆனால் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுங்கள் என முருகபக்தர்களோடு போராடியதற்கு இந்து முன்னணியினரை தாக்கி இருக்கிறது. இரண்டு வாரத்திற்கு முன்பாக கடையநல்லூரில் நடந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக ஆர்ப்பாட்டத்தில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பொறுப்பாளரை இதுவரை காவல் துறை கைது செய்யவில்லை.
திருப்பரங்குன்றம் தீபம் சம்பந்தமாக தீர்ப்பு வழங்கிய நீதியரசர் ஜி. ஆர் சுவாமிநாதன் அவர்களை வாடா போடா என்று ஒருமையில் பேசிய
பியூஸ் மனுசை இதுவரை கைது செய்ய காவல்துறைக்கு திராணியில்லை. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாகப் போராடிய பக்தர்கள் மீது அடக்கு முறையை ஏவுகிறது.
தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு வருகிறது. நியாயமான ஆர்ப்பாட்டம் போராட்டங்களுக்கு கூட அனுமதி வழங்குவதில்லை. மீறி போராடினால் தமிழக அரசின் சர்வாதிகார போக்கால் நசுக்கப்படுகின்றனர்.
இந்து முன்னணி பொறுப்பாளர்களை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இல்லையெனில் சட்டப் போராட்டமும், அறப் போராட்டமும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



