
ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது ஜாதியை திணிப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று, முன்னாள் எம்பி ராமலிங்கம் கரூரில் கேள்வி எழுப்பினார்.
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கரூருக்கு வருகை தர உள்ள கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் -க்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான முன்னாள் எம்பி ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த ராமலிங்கம், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் வருகிற 22 ஆம் தேதி கரூருக்கு வருகை தரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது மற்றும் நிகழ்ச்சியை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதே போல ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் உள்ள நிர்வாகிகளை அழைத்து சட்டமன்ற மாநாடுகள் 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதே போல கரூரில் உள்ள நான்கு சட்ட மன்ற தொகுதிகளிலும் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியை குறை சொல்வது என்பது தங்களது தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொள்வதற்கு சமமாகும், திமுகவினருக்கு ஆட்சியை விட்டு போகப் போகிறோம். என்ற பயமும் இயலாமையால் நடத்துகின்ற நாடகம், இனி வரப்போக இருக்கிற வழக்குகளிலும் தங்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் நீதிபதிகளை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு நீதிபதிகள் தான் சரியான தீர்வு காண வேண்டும். இன்று சுவாமிநாதன் என்ற தனி நீதிபதிக்கு ஏற்பட்ட நிலையாக கருதி விடாமல், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நீதிமன்ற நீதிபதிகளும் உணர வேண்டும் என்றார்.
மேலும், நீதிபதியை ஜாதியின் பெயரால் அவமதிப்பு செய்யக்கூடாது என்றும், ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி ஒரு நீதிபதியை ஜாதியின் பெயரை பெயரைப் பயன்படுத்தி ஸ்டாலின் கூறலாமா? எனவும், இந்தக் கேள்வி நாடு முழுவதும் தற்போது திரும்பி கொண்டு உள்ளது. ஆகையால் இப்படிப்பட்ட கேவலமான ஒரு ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகத்தான் எங்களது மாநில தலைவர் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார்.




