
நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கில் தீர்ப்பு கூறிய காரணத்திற்காக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் மீது திமுகவும் காங்கிரஸ் கட்சியும் பாராளுமன்றத்தில் பதவி நீக்கத் (இம்பீச்மென்ட்) தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
நீதிபதி மீது வீண் பழி சுமத்தி பதவி விலக்க வைக்க சதி செய்கிறது. இந்த இரு கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இதன்மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. இத்தகைய நிலைப்பாடு இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும்.
நீதிபதி மீதான குற்றச்சாட்டு ஒரு தீர்ப்புக்காக பாராளுமன்றத்தில் கொண்டு வருவது இதுவே முதல்முறை. இது நீதித்துறை மீதான தாக்குதல் மட்டுமல்ல, நீதிபதிகளை மிரட்டும் போக்கு என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றும் தீர்ப்பை மதிக்காமல் காவல்துறையும், மாவட்ட கலெக்டர் உள்பட அரசு நிர்வாகமும் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டது. நீதிமன்றத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யலாம். ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மறுப்பதற்கு மாநில அரசுக்கோ, காவல்துறைக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அதையும் பொதுவெளியில் காவல்துறை அதிகாரி பேசியது அதிகார துஷ்பிரயோகமாகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறைபடுத்த வில்லை. இத்தகைய போக்கு கவலைக்குறியதும், கவனத்திற்குரியதும் ஆகும்.
திமுக, காங்கிரஸ் கொண்டு வந்துள்ள தீர்மானம் பாராளுமன்றத்தில் வெற்றி பெறாது என்றாலும், அவதூறு பரப்ப இதனை வாய்ப்பாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது.
தீர்ப்பின் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது அந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதியை விமர்சனம் செய்ய அனுமதிக்கக்கூடாது. இது நீதித்துறையை மிரட்டி பணிய வைக்கும் சதி ஆகும்.
பாராளுமன்றத்தில் திமுக கொண்டு வந்துள்ள பிரேரணையை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். திமுகவும், காங்கிரசும் நீதிமன்றத்தீர்ப்பை அவமதித்ததுடன், நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது இந்துக்களின் உரிமை. இதற்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் உட்பட தமிழக எம்பிக்கள் செயல்படுவது தமிழகத்திற்கு செய்யும் துரோகம்.
எனவே பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து எம்பிக்களும் ஒன்றுபட்டு தோற்கடிக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து செயல்படும் தமிழக அரசை மக்கள் கண்டிக்க வேண்டும்.
இந்துக்களுக்கு எதிரான எம்பிக்கள் மற்றும் கட்சிகளை வருகின்ற தேர்தலில் தோற்கடித்து ஜனநாயக வழியில் பாடம் புகட்டுவோம்.




