
ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் சிலர் தன்னிடம் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலியான தங்க காசுகளை கொடுத்து ஏமாற்றி விட்டதாக கூறி கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
போலீசார் விசாரணை செய்தபோது குற்றம் நடந்த இடம் ராஜபாளையம் உட்கோட்ட பகுதியான முறம்பு என்ற பகுதி என்பதால் இந்த தகவல் ராஜபாளையம் டிஎஸ்பி பசிணா பிவி கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சக்தி குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சக்திவேலு (67) விழுப்புரம் மாவட்டம் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் ( 60) இவரது மனைவி அரசாகி ( 56) சென்னையைச் சேர்ந்த சண்முகம்( 61) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிராம் மதிப்புள்ள 11 தங்க காசுகளும் ஏராளமான போலி தங்க காசுகளும் இரண்டு லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து டிஎஸ்பி பசினா பிவி யிடம் கேட்டபோது சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இவர்கள் குழுவாக சேர்ந்து ஏதாவது ஊரில் பொது இடங்களில் தங்கி கொண்டு கூலி வேலைக்கு செல்வது போல் நடித்து யாரையாவது ஒருவரை தேர்வு செய்து அவர்களிடம் தங்கள் கூலி வேலை செய்யும்போது பூமிக்கு அடியில் சில தங்க காசுகள் கிடைத்ததாகவும் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் உண்மையிலேயே இது தங்க காசு தானா என்று சோதனை செய்து தந்து உதவுங்கள் என்று ஒரு ஒரிஜினல் தங்க காசை அவர்களிடம் கொடுப்பதும் அவர்கள் அதை சோதனை செய்து ஒரிஜினல் என்று தெரிந்தவுடன் இன்னும் சில காசுகள் உள்ளது குறைந்த விலை ஏதாவது தாருங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம் நாங்கள் மொத்த காசையும் கொடுத்து விடுகிறோம் என்று கூறி கிடைத்த பணத்துக்கு ஏற்றவாறு போலியான தங்கக் காசுகளை கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர்.
இதுபோல் இவர்கள் பல இடங்களில் செய்து பல லட்சங்களை சுருட்டிதாக தெரிகிறது எங்களுக்கு வந்த புகாரின் பேரில் விசாரணை செய்து கைது செய்து அவரிடம் இருந்த பொருட்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளோம் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றார்.




