அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு போலீஸில் சரண்

அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, இன்று அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் சரண் அடைந்தார்.

சென்னை:

அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, இன்று அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் சரண் அடைந்தார்.

பிப்ரவரி 6ஆம் தேதி சென்னையை அடுத்த மலையம்பாக்கத்தில் நள்ளிரவில் போலீஸார் ரவுடிகள் குறித்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, ரவுடி பினு ரவுடிகள் சூழ அரிவாளால் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்தான், அப்போது காவல்துறையினர் சுற்றி வளைத்து 76 ரவுடிகளை கைது செய்தனர். இந்தநிலையில், தப்பியோடி தலைமறைவான ரவுடி பினுவை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், 4 தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் முன்னிலையில் இன்று சரண் அடைந்தார். தன்னை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டதால் உயிருக்கு பயந்து காவல்துறையில் பினு சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. சரணடைந்த பினுவிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவுடி பினு மீது, கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன. பூந்தமல்லி, வடபழனி, விருகம்பாக்கம் காவல் நிலையங்களில் ரவுடி பினு மீது குற்ற வழக்குகள் பல பதிவு செய்யப்பட்டுள்ளன.