நாட்டின் முதல்வர்களில் 11 பேர் மீது கிரிமினல் வழக்குகள்!

10 சதவீத முதல்வர்கள் 12-ம் வகுப்பு படித்துள்ளனர். 39 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 32 சதவீதம் பேர் இன்ஜினியரிங் உள்ளிட்ட புரபஷனல் கல்வி பெற்ற பட்டதாரிகளாக உள்ளனர்.

புது தில்லி:
நாட்டில் மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 26 சதவீத முதல்வர்கள் மீது கொலை, மோசடி உள்ளிட்ட மிக கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீரமைப்புக்கான ஏடிஆர் என்ற அமைப்பு, நாடு முழுவதும் உள்ள மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் முதல்வர்களின் சொத்து மதிப்பு, அவர்களின் கல்வித் திறன், அவர்கள் மீதான வழக்குகள் என்பது குறித்து தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலின் படி, 11 முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஜார்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரளா முதல்வர் பிணரயி விஜயன், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 8 பேர் மீது கொலை, கொலை மிரட்டல், மோசடி என்பன போன்ற மோசமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

கல்வி அறிவைப் பொருத்தவரை 10 சதவீத முதல்வர்கள் 12-ம் வகுப்பு படித்துள்ளனர். 39 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 32 சதவீதம் பேர் இன்ஜினியரிங் உள்ளிட்ட புரபஷனல் கல்வி பெற்ற பட்டதாரிகளாக உள்ளனர். 16 சதவீதம் பேர் முதுநிலை பட்டதாரிகளாகவும், 3 சதவீதம் பேர் பிஎச்டி முடித்தவர்களாகவும் உள்ளனர்.