
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி மூலம் ஊழலற்ற ஆட்சி நடத்தும் பிரதமரின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சென்னையில் பாஜக கட்சி தலைமையகத்தில் நேற்று கட்சித்தொண்டர்கள் இனிப்பு வழங்கி குஜராத்தின் வெற்றியை கொண்டாடினர். அப்போது, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் மூலம் ஊழலற்ற ஒரு ஆட்சியை நடத்தி வரும் பிரதமரின் செல்வாக்கை இந்த வெற்றி நிரூபித்துள்ளது.
எனவே, 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து எந்த சர்ச்சையும், விவாதமும் தேவையில்லை என கருதுகிறேன். தில்லியில் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பது வானில் தோன்றி மறையும் ஓர் எரிகல் போன்ற நிகழ்வு
ஆகும். ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை ஒரு தற்காலிக வெற்றியாக பார்க்கிறேன். இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை அங்கு காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. அதுபோன்றுதான் தற்போதைய நிலையும் அமைந்துள்ளது” என்றார்.
நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் இந்த சரித்திர வெற்றியினை கொண்டாடி வருகின்றனர், அந்தந்த மாநில தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றி பாஜக தலைவர்களிடமும், தொண்டர்களிடமும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் 2014 பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக பெருவாரியான பாராளுமன்ற உறுப்பினர்களை வெல்லும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாகவும் அமைந்துள்ளது.
பாஜகவின் இந்த சாதனை வெற்றி மூலம் இலவசங்களையும், எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளையும் மக்கள் தூக்கியெறிந்துள்ளனர் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.