தீர்த்தமலை கோவில் கோபுர கலசம் திருடியவருக்கு தர்ம அடி

தருமபுரி:

தருமபுரி அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்களை திருடியவரை பணியாளர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள 5 தீர்த்தங்களிலும் நீராடினால் தீராத நோய் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் தீர்த்தமலைக்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து, தீர்த்தத்தில் நீராடி செல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கோவில் வளாகத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரைப் பிடித்து, கோயில் பணியாளர்கள் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த அவர்கள், அவர் வைத்திருந்த பையை சோதித்த போது, அதில் 3 செம்பு கலசங்கள் இருப்பது தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 60) என்பதும், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து செம்பு கலசங்களை திருடியதும் தெரிய வந்தது. இதனால், பணியாளர்கள் கலசங்களை திருடிய நாகராஜூக்கு தர்ம அடி கொடுத்து, அவரை கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.