தமிழக அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சி தொடக்கம்

 

சென்னை:

தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து, தமிழக அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சி வகுப்புகள் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி 13-ந் தேதி முடிவடைகிறது.

 

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தேர்தல் மேலாண்மை பயிற்சிகள் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த 15 உயர் அதிகாரிகளுக்கு, கடந்த டிசம்பர் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்தது. இவ்வாறு பயிற்சி பெற்ற அதிகாரிகள், மாவட்ட அளவிலான (தலைமை பயிற்சி) அதிகாரிகளுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சிகளை வழங்கினர். அதாவது, மாவட்டத்துக்கு 2 அதிகாரிகள் என்று தேர்வு செய்து, கடந்த டிசம்பர் 21 மற்றும் 22-ந் தேதிகளில் சென்னையில் வைத்து அவர்களுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டன.

தேர்தலின்போது, மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்டத்துக்கு 16 முதன்மை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், தேர்தல் பணி தொடர்பான பல பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இவர்கள், தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து, அங்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகளை கடந்த டிசம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை பலருக்கு வழங்கினார்கள்.

இந்த நிலையில், முதன்மை தேர்தல் பயிற்சியாளர்களின், தேர்தல் பயிற்சி வழங்கும் திறனின் முக்கியத்துவம் அறிந்து, அவர்களுக்கு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் வைத்து இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சிகளை வழங்குகிறது. இந்த பயிற்சி ஜனவரி 10-ந் தேதி (நேற்று) முதல் தொடங்கியது.

இந்த பயிற்சி 13-ந் தேதி முடிவுக்கு வருகிறது. மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சியாளர்களும், ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 அதிகாரிகள் என்று தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டனர். முதல் கட்ட பயிற்சியில் 94 அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட பயிற்சி ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.