108 திவ்ய தேசங்களில் 76-வது கோவிலும், 13 மலையாள நாட்டுத் திருத்தலங்களில் ஒன்றுமான ஆதியில் ஆதிதாமபுரம் என்று அழைக்கப்பட்ட திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின் நாளை அதிகாலை 5.10 மணி முதல் 5.50 மணி வரை பிரதிஷ்டை, ஜீவகலச அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் 6.50 மணிக்குள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது.
திருவட்டாறு கோயிலுக்கு பிறகுதான் திரேதாயுகத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் அமைந்தது. கலியுகம் தொடங்கி 950-ம் ஆண்டு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக தோன்றிய பெருமாளை பரசுராமர் பிரதிஸ்டை செய்துவிட்டு தனது அவதாரத்தை நிறைவு செய்ததாக ஐதீகம். கேரளாவின் வேணாட்டை ஆண்ட மன்னர் கி.பி.776 – ம் ஆண்டு 16,008 சாளக்கிராமங்கள் கொண்டு சர்க்கரை யோகம் (41 மூலிகைகளின் கலவை) மூலம் மூலவர் பிரதிஸ்டை செய்யப்பட்டார்.
ஆதிசேஷ சர்ப்பத்தின் மீது புஜங்க சயனத்தில், யோக முத்திரையில் பள்ளிகொண்டிருக்கிறார் ஆதிகேசவப் பெருமாள். 22 அடி நீளத்தில் ஆதிகேசவ பெருமாள் படுத்த நிலையில் மேற்கு நோக்கிக் காட்சிதருகிறார்.
இடது கையை ஆதிசேஷ சர்ப்பத்தின் மீது தொங்கப்போட்டுள்ளார். வலது கையில் யோக முத்திரை காட்டியபடி காட்சியளிக்கிறார். இந்தத் திருத்தலத்தை வட்டமாகச் சுற்றி பரளியாறும், கோதையாறும் செல்வதால் திருவட்டாறு என்று இந்தத் தலத்திற்கு பெயர் வந்தது.
நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட பழைமையான கோயில்.
1106-ம் ஆண்டு இந்தக் கோயிலில் கொடிமரம் பிரதிஸ்டை செய்யப்பட்டது
108 திவ்ய தேசக் கோயில்களில் பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் மேற்கு நோக்கிக் காட்சிதரும் ஒரே திருத்தலம் இது தான்.
திருவட்டாறு கோயிலின் மேற்கு வாசல், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் கிழக்கு வாசல், குருவாயூர் கிருஷ்ணர் கோயிலின் கிழக்கு வாசல் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. சூரியனுக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் என்பதால் கருவறையில் சூரிய, சந்திரர்கள் இருக்கிறார்கள்.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கேசனை அடக்கி உக்கிர சம்ஹார மூர்த்தியாக பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். உக்கிர மூர்த்திகள் ஒரே இடத்தில் சேரமாட்டார்கள் என்பதால் இந்தக் கோயில் சுற்றுச் சுவருக்கு வெளியே நரசிம்மர் கோயில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் வாய்ப்பிருக்கும் அனைவரும் திருவட்டாறு வந்து பள்ளிகொண்ட பெருமாள் அருள் பெற்று செல்லுங்கள்.