முதல்வர் நாற்காலிக்கு குறி பார்க்கும் சசிகலா: செக் வைக்கும் மத்திய அரசு!

மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலேயே அருண்ஜேட்லி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டைப் பாராட்டி சசிகலா அறிக்கை விடச் சொல்லியுள்ளார்.

சென்னை:
தமிழக முதல்வராக முதல்வர் நாற்காலியில் அமர பிப்ரவரி 8 அல்லது 9-ந் தேதியை தேர்வு செய்து வைத்திருந்தார் வி.என்.சசிகலா. ஆனால் மத்திய அரசோ சசிகலா முதல்வராவதைத் தடுக்கும் வகையில் நெருக்கடிகளைக் கொடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சசிகலா குறித்த வழக்குகள் அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு தாமே முதல்வராக வேண்டும் என சசிகலா முயன்று வரும் வேளையில், அவர் மீதான வழக்குகளைக் காரணம் காட்டி, சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோர் தாமே முதல்வர் நாற்காலியில் அமர்கிறோம் என வற்புறுத்தி வந்தனர்.

ஆனால், ஓ,.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்து, சசிகலாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். திமுக., வெளிப்படையாகவே, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர ஆதரவு என்று அறிவித்து விட்டது. இதனை அக்கட்சியின் துரை.முருகன் அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார். சசிகலா தரப்பு அமர்வதைக் காட்டிலும், ஓபிஎஸ்,ஸே தமக்கு நல்லது என்று திமுக நினைக்கிறது.

இதை அடுத்து நடராஜனும் திவாகரனும் முதல்வர் ஆசையில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, தற்போது மீண்டும் சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர தீவிரம்காட்டி வருகிறார். தமிழக பொறுப்பு ஆளுநர் ஆளுநர் வித்யாசகர் ராவின் சென்னை வருகை தொடர்பான விவரங்களை கேட்ட அவர், பிப்ரவரி 8 அல்லது 9-ஆம் தேதி முதல்வர் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

ஏற்கெனவே சசிகலா முதல்வர் பதவியில் அமர தீவிரமாக காய் நகர்த்தி வந்தபோது, தில்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக விவகாரங்களை பிரதமர் மோடிக்குத் தெரியப்படுத்தினார். அதை தீவிரமாகக் கேட்டுக் கொண்ட மோடி, முதல்வர் பணியை தைரியமாகச் செய்யுமாறு பன்னீர்செல்வத்துக்கு பச்சைக்கொடி காட்டினார். மற்ற விவகாரங்களைத் தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறியிருந்தாராம்.

இந்நிலையில், மத்திய அரசு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு கண்டிப்பான ஒரு உத்தரவை பிறப்பித்ததாம். முதல்வர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் நேரில் வந்து கடிதம் கொடுத்தால் மட்டுமே ஏற்க வேண்டும்; பேக்ஸ் மூலமாகவோ வேறு நபர்களோ வந்து கொடுத்தால் அதை ஏற்கவே கூடாது என்று வலியுறுத்தியது. மேலும், சசிகலா தொடர்பான வழக்கு விவகாரங்களிலும் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலேயே அருண்ஜேட்லி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டைப் பாராட்டி சசிகலா அறிக்கை விடச் சொல்லியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.