உறவு கொண்டாடி ஸ்டாலினை வீழ்த்துவதே வைகோவின் குறிக்கோள்!

மு.க.ஸ்டாலினைஅரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வை.கோ வின் குறிக்கோள் ! அதற்காக உறவு கொண்டாடி தி.மு.க தலைவர் ஸ்டாலினை வீழ்த்தி விடுவார் என்று கரூரில் பா.ஜ.க துணைத் தலைவர் அரசக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும், நேற்று விஜயகாந்த் இன்று மு.க.ஸ்டாலின். நாளை யாரோ?  பட்டியல் வருதுல்ல? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. கரூரில் உள்ள கோவை ரோட்டில் உள்ள பி.எல்.ஏ அமிர்த் இன் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க மாநிலத் துணை தலைவர் பி.டி.அரசக்குமார் சிறப்புரையாற்றினார். 

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம்   கரூர் மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை ஆங்காங்கே பா.ஜ.க கட்சியை விமர்சித்தி வருகின்றாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்,  அது அ.தி.மு.க வின் குரல் அல்ல, தமிழக முதல்வரும், தமிழக துணை முதல்வரும் தான் அ.தி.மு.க வின் வழிகாட்டிகளாக தற்போது உள்ளனர். அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்ஸும்., இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளனர்.

அவர்கள் இருவரும் பா.ஜ.க வை பாராட்டி வருகின்றனர். பா.ஜ.க ஆட்சியுடன் இணைக்கத்துடன் இருந்து வருகின்றனர். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து சிறப்பான செயல்திட்டங்களை  நடைமுறைப் படுத்தி வருகின்றன.

தம்பித்துரைக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கின்ற விரக்தியில் பேசி வருகின்றனர். முதலில் தம்பித்துரை மோடியைப் பற்றி பேசியதிலிருந்தே எங்குமே அவரால் தொகுதிக்கு செல்ல முடியவில்லை. மேலும், அவர் முதலில் தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களின் கேள்விக்கு பதில் சொல்லட்டும். பின்னர், பா.ஜ.க வினை கேள்வி கேட்கட்டும்!

மக்கள், தம்பித்துரையை பார்த்து நீ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து என்ன செய்தாய் என்று ஆங்காங்கே கேள்விகேட்டு வரும் நிலையில், முதலில் மக்களின் கேள்விக்கு பதில் சொல்லி விட்டு பின்னர் பா.ஜ.கவுக்கு பதில் சொல்லட்டும்!

மாநிலக் கட்சியாக பா.ஜ.க மாறும் என்று தம்பித்துரை சொல்லி இருக்கின்றார்! நிச்சயமாக மாநிலக் கட்சியாகவும் மாறும்! இந்திய அளவில் ஆங்காங்கே பா.ஜ.க மத்தியிலும் சரி, ஆங்காங்கே அனைத்து இடங்களில் உள்ள மாநிலத்திலும் சரி, பா.ஜ.க இடம் பிடித்து வருகிறது. இந் நிலையில் தமிழகத்திலும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி இருப்பார்.  தமிழகத்தில் பாஜக., ஆட்சியைப் பிடிக்கும். தம்பித்துரையின் விரக்தியான உளறல்களுக்கும், விரக்தியான கேள்விகளுக்கும் பா.ஜ.க பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.. என்றார்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநில அரசு சார்பில் ரூ 15 ஆயிரம் கோடி கேட்கப்பட்ட நிலையில், தற்போது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் இரண்டு கட்டங்களாக இந்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. பணமாக கேட்கின்றார்கள் அதை கொடுக்க வில்லை என்பதுதான் மக்களுக்கு தெரியும். மின்சாரம் இல்லாத ஊர்களுக்கு மின்சாரம் உருவாக்கி தருவது, தார்ப்பாய் கொடுப்பது என்று துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு முதலில் அந்தந்தத் துறைகளுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படுகின்றது. எனவே, மத்திய குழு பார்வையிட்டதற்கும், தமிழக அரசு கொடுக்கப்பட்ட பாதிப்புப் பணிகளை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்கப்பட்டு அனைத்தும் துறை ரீதியாக செயல்படுத்தப் படுகிறது.. என்றார்.

வை.கோ வின் அரசியல் நிலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது,  வை.கோ., மு.க.ஸ்டாலினை அரசியலில் இருந்து விரட்டுவது என்பதற்காகத் தான், தற்போது உறவு கொண்டாடி வருகிறார். விரைவில் அழிக்க உள்ளார். முன்பு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தற்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பட்டியல் வருது இல்ல… நேற்று விஜயகாந்த், இன்று மு.க.ஸ்டாலின் நாளை யாரோ.?  என்றார் பாஜக., மாநிலத் துணைத் தலைவர் பி.டி.அரசக்குமார்.