ஊடகத்தினரை ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்துக்கு சிபிஐ(எம்) கண்டனம்!

திமுக., தேமுதிக கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள உரசல்களை அடுத்து, தங்களை இழிவு படுத்தியதாகவும் பழி வாங்கியுள்ளதாகவும் விளக்கம் அளித்து தேமுதிக., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

தேமுதிக., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, பிரேமலதா ஆவேசமாக சில கருத்துகளை முன்வைத்தார். அப்போது ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்ப, நீ எந்த பத்திரிகை, நீ எந்த டிவி என்று கருணாநிதியின் பாணியில் கேட்டுக் கேட்டு, அதற்கு ஏற்ப பதிலளித்தார்.

ஆனால், ஒரு கட்டத்தில் பலரும் ஒரே நேரத்தில் கேள்விகளை எழுப்ப, ஒருமையில் பேசிய பிரேமலதா, நீ, வா, போ, என்றெல்லாம் விளிக்கத் தொடங்கினார். இதை அடுத்து பத்திரிகையாளர்கள் கூச்சலிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இது அநாகரிகம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இது குறித்து சிபிஐ- எம் சார்பில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள கண்டனச் செய்தியில்,

செய்தியாளர்களை அவமதிக்கும் வகையில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளவை அரசியல் பண்பற்ற செயல் !

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைப்பதற்காக நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், திமுக பொருளாளர் துரைமுருகன் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் அளித்துள்ள பேட்டி அரசியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லாதது வருத்தமளிக்கிறது. கட்சி மாறுபாடுகள் இருந்தாலும் தலைவர்கள் அரசியல் நாகரீகத்துடன் கருத்துக்கள் தெரிவிப்பதையே தமிழக மக்கள் விரும்புவார்கள்.

பத்திரிக்கையாளர்கள் அரசியல் தலைவர்களின் செய்திகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான பணியினை ஆற்றி வருபவர்கள். ஆகவே தான், பத்திரிகையாளர்களை சந்திப்பதை அரசியல் தலைவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அத்தகைய ஊடகத்துறை நண்பர்களை நீ, வா, போ என ஒருமையில் பேசுவதும், வீட்டு வாசலில் காத்துக் கிடப்பவர்கள் என குறிப்பிடுவதும் அரசியல் பண்பற்ற போக்கு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. – என்று குறிப்பிட்டுள்ளார்,.

இது போல், தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் பொதுச் செயலர் மிதார் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில்,

கடமையைச் செய்யும் செய்தியாளர்களை மிரட்டுவதும், ஒருமையில் பேசுவதும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று!

மதிப்பதும், மரியாதை தருவதும் தமிழர் பண்பாடு என்பார்கள். ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் சில தலைவர்களின் போக்கு கவலை அளிப்பதாகவும், கண்ணியக்குறைவாகவும் உள்ளதை காண முடிகிறது. இது வருந்ததக்க செயல்.

கூட்டணி வைப்பதில் உள்ள முரண்பாடுகள், நடப்புகளை மக்களிடம் கொண்டுச்செல்லவேண்டிய கடமையில் செய்தியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு கட்சி அரசியல் இல்லை. ஆனால் சமீப காலமாக கொள்கை மாறுப்பாடு காரணமாக வரும் கோபத்தில் செய்தியாளர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பகீரங்கமாக மிரட்டும் போக்கு உள்ளது.

பெயரைச் சொல்லி ஒருமையில் பேசுவது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பேசி வேலையை விட்டு நீக்க முயல்வது போன்ற காரியங்களில் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், அவர்களது ஆதரவாளர்கள் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது.

இன்று தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை நீ, வா, போ என ஒருமையில் அழைத்ததும், எங்கள் அலுவலக வாசலில் காத்துக் கிடப்பவர்கள் தானே நீங்கள் என இரு முறை கூறி உங்களுக்கு சொல்லணும் என்று அவசியமில்லை என்று கூறுகிறார். அதையும் பிரஸ் மீட் நடத்தி கூறுவதுதான் வேடிக்கை.

கொள்கை மாறுபாடு, கூட்டணி அமையாத கோபத்தை கேள்விக் கேட்கும் செய்தியாளர் மீது காண்பிக்கும் போக்கை உலகம் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது. மக்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இது போன்ற கண்ணியக் குறைவான நடத்தை அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல என்பதை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பிலும், ஒட்டு மொத்த செய்தியாளர்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற செயல்களை இனியும் தொடராமல் கண்ணியத்துடன் நடந்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம். – என்று தெரிவித்துள்ளார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...