அடடே.. ராஜகண்ணப்பன்! அதிமுக.,வில் இருந்து கொண்டு ஸ்டாலின் தலைமையில் பணியாற்ற முடியாது என்பதால்…!

திமுகவுக்கு அதிமுக.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீரெ தேர்தல் நேர ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஸ்டாலின் தலைமையில் பணியாற்ற விரும்பினேன் என்று ராஜ கண்ணப்பன் கூறினார்.

வருகின்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அதிமுக.,வில் இருந்து திடீரெனத் தாவி, திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன்! இத்தனைக்கும் திமுக.,விலும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டு, வேட்பாளர்களும் அறிவிக்கப் பட்டு விட்டனர் என்பதால், ராஜகண்ணப்பனின் இந்தத் தாவல் எந்த விதத்திலும் அதிர்வலைகளையோ, அசைவையோ ஏற்படுத்தவில்லை!

யார் இந்த ராஜ கண்ணப்பன்?

1991-1996 இல் அப்போதைய ஜெயலலிதாவின் அலையில் வெற்றி பெற்று, அதிமுக.,வின் அமைச்சரவையில் இடம்பெற்று, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர்.

2001 இல் அதிமுக.,வில் இருந்து விலகி, மக்கள் தமிழ் தேசம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, திமுக கூட்டணியில் ஆதரவு அளித்து, இளையான்குடி சட்டமன்ற தொகுதியில் நின்றார். தோல்வியை தழுவினார்! அப்போது அதிமுக., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

மனம் தளராத ராஜகண்ணப்பன், மீண்டும் 2006இல் திமுகவில் சேர்ந்து இளையான்குடி தொகுதியில் நின்றார். வென்றார்! அப்போது திமுக., ஆட்சி அமைத்தது.

2009இல் திமுக.வில் இருந்து விலகி, மீண்டும் அதிமுகவில் சேர்ந்து சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்டார். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். அப்போது ரீகவுண்ட்டிங் செய்யப் பட்டதால், சிதம்பரம் ரீகவுண்ட் மினிஸ்டர் என்ற பட்டப் பெயரைச் சுமந்தார். அதே நேரம் சிதம்பரம் வெற்றியை எதிர்த்து  இவர் போட்ட வழக்கு இன்னும் நடக்கிறது!

தொடர்ந்து, 2011 இல் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக., ,சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்! ஆனால் அந்தத் தேர்தலில் அதிமுக. வென்று ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் வருகின்ற மக்களவைத் தோ்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும், அதற்கு கட்சியின் தலைமை மறுத்துவிட்டதாகவும் கூறப் படுகிறது. தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாத விரக்தியில் ராஜகண்ணப்பன் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த அவர், இன்று மாலை ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவின் கொத்தடிமைகளாக ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனா். கடந்த இடைத் தோ்தலில் நோட்டாவைக் காட்டிலும் குறைவான வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கியது எதற்காக?

பன்னீா்செல்வமும், பழனிசாமியும் தங்களது சுய லாபத்திற்காக கட்சியை சீரழித்து வருகின்றனா். சுயலாபத்திற்காக செயல்படும் பன்னீா்செல்வத்தையும், பழனிசாமியையும் கொத்தடிமைகள் என்று கூறாமல் வேறு என்ன சொல்வது?

இருவரும் ஆளுமையற்றவா்களாக உள்ளனா். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகம் உள்ளது.! குறிப்பாக பன்னீா்செல்வம், பழனிசாமி இடையே இது அதிகமாக உள்ளது.

தங்கமணியும், வேலுமணியும் தான் கட்சியின் பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். திராவிட இயக்கங்களின் ராஜ்ஜியமாக திகழ்வது தென்மாவட்டங்கள். ஆனால், தென் மாவட்டத்தின் பல தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளது!

அதிமுகவில் ஒரு கிறிஸ்தரோ, ஒரு இஸ்லாமியரோ வேட்பாளராக அறிவிக்கப் படவில்லை. எனவே திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜகண்ணப்பன்.

இப்படி, அங்கும் இங்கும் தாவியவர்தான் என்றும்,  இவர் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாட்டக்கர் இல்லை என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள் அரசியல் களத்தில்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...