
பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய புதுப் பெண்ணை காவல் நிலையம் வரவழைத்த பெண் ஆய்வாளர், 16 வகையான சீர்வரிசை பொருட்களை கொடுத்து வாழ்த்தினார்.
சென்னை செங்குன்றத்தில் உள்ள கே.கே.நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுகன்யா (20). இவருக்கு 17 வயதில் ஒருதங்கை உள்ளார். பெற்றோரை இழந்த இவர்கள் இருவரும் அத்தைஅத்தை சுரேகா வீட்டில் வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சுகன்யாவுக்கு கோயம்புத்தூரில் உள்ள ரமேஷ்குமார் என்பவருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு வரும் 4ம் தேதி கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது.
கடன் வாங்கிதிருமணத்தை நடத்தும் எண்ணத்தில் சுகன்யா வீட்டார் இருந்துள்ளனர். ஆனால், கொரோனா முடக்கத்தால் யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லை.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் சுகன்யா உதவி கேட்டுள்ளார். முகநூலில் தொடர்பு கொண்டு, தனக்கு திருமணம் நடைபெற உள்ளதால் உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியுமா எனவும் கேட்டுள்ளார். அதற்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி என்னை எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்டுள்ளார்.
அதற்கு சுகன்யா முகநூலில் உங்களை நான் பின் தொடர்ந்து வருகிறேன். நீங்கள் ஏற்கனவே செய்துள்ள பல விஷயங்களை பார்த்து உள்ளேன், என பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், காவல் நிலையத்துக்கு சுகன்யாவை நேற்று முன்தினம் நேரில் அழைத்த ஆய்வாளர் ராஜேஸ்வரி, அவருக்கு பிறந்தவீட்டு சீதனமாக தங்க கம்மல், மூக்குத்தி, வெள்ளி கொலுசு, பீரோ, கட்டில், மெத்தை, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட 16 வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். புத்தாடை அணியவைத்து, மாலை போட்டு, மலர் தூவி வாழ்த்தினார். திருமண செலவுக்காக ரூ.5 ஆயிரமும் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த சுகன்யா, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை கட்டிபிடித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, புதுப்பெண்ணை வாழ்த்தி, ஆய்வாளர் ராஜேஸ்வரியையும் பாராட்டி னர்.
நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, கொரோனா ஊரடங்கின்போது உயிரிழந்த ஆதரவற்ற மூதாட்டியை தனது சொந்த செலவில் அடக்கம் செய்தது, குப்பை சேகரிக்கும் அவரது சகோதரியின் வீடுகளை சுத்தம் செய்து அதில், அவர்கள் வசிக்க ஏற்பாடு செய்தது, சாலையோரம் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உணவு வழங்குவது என பல்வேறு சேவை பணிகளை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தொடர்ந்து செய்து வருகிறார்.
கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருதை ராஜேஸ்வரி பெற்றது குறிப்பிடத்தக்கது.